Tuesday, August 31, 2010

அமீரக வாகன ஓட்டுனர் உரிமம். - அனுபவப் பகிர்வு!!


அமீரகம் வந்தவுடன் "அலுவலக நண்பர்கள் எப்பொழுது ஓட்டுனர் உரிமம் எடுக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்புவார்கள்.

"இப்பொழுது வாகனம் வாங்கும் எண்ணம் இல்லை. அதனால் ஓரிரு வருடங்கள் கழித்து எடுக்கவேண்டும்" என்று பதிலளிப்பேன்.

"இப்பொழுதே ஆரம்பித்துவிடுங்கள்.. அப்பொழுது தான் சரியாக இருக்கும்" என்று நமட்டுச் சிரிப்புடன் கூறுவார்கள்.

*

அமீரகத்திற்கு வந்த பொழுது நாளிதழ்களின் வேலைவாய்ப்புச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, "விற்பனை தொடர்பான வேலைகளுக்கு ஓட்டுனர் உரிமம் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பியுங்கள்" என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

"நம் ஊரில் இரு சக்கர வாகனம் உள்ளதா என்று தான் கேட்பார்கள். இங்கே என்ன ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அதென்ன அவ்வளவு கடினமான விசயமா?" என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் இந்த எண்ணம் எல்லாம் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வரை தான்

*

ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் முன்பு நம்மை ஏதோ பாரபட்சமாக நடத்துவது போன்ற எண்ணம் எழும். மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் "அந்நாட்டு ஓட்டுனர் உரிமத்தைக்" காட்டி அமீரக ஓட்டுனர் உரிமம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் நம் நாட்டு ஓட்டு உரிமத்திற்கு (சர்வதேச உரிமமாக இருந்தாலும்) எள்ளளவும் மரியாதை கிடையாது. ஓரே ஒரு சலுகை மட்டும் உண்டு. நம் நாட்டு ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால், அமலில் உள்ள ஆண்டுகளைப் பொருத்து பயிற்சி வகுப்புகள் குறையலாம். அவ்வளவு தான். 

அப்படி பயிற்சி வகுப்புகளைக் குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள், "தொடர்ந்து வாகனம் ஓட்டுபவராக" இருந்தால் தேவலாம். ஆடிக்கொருக்கா.. அம்மாவாசைக்கு ஒருக்கா வண்டிய எடுத்தவங்க எல்லாம் எனக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கு.. பயிற்சி வகுப்புகளைக் குறையுங்கள் என்று கேட்டால்.. "வினை காத்திருக்கிறது" என்று அர்த்தம்.

*

ஓட்டுனர் உரிமத்திற்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பித்து வகுப்புகள் ஆரம்பித்த பிறகு, பயிற்சியாளர் நம்மை  வாகனம் ஓட்டுங்கள் என்பார். நாம் தான் நம்மூரில் வண்டியை ஓட்டியிருக்கிறோமே என்று ஸ்டீரிங்கைப் பிடித்தால்..பயிற்சியாளர் நம்மிடம்

"காசு கொடுத்து லைசன்ஸ் வாங்குனியா?" என்று நக்கலடிப்பார்.

நம்ம ஏதோ ஸ்டைலா ஸ்டீரிங் பிடிக்கறதா நினைச்சு வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு.. ஸ்டீரிங்கை எப்படிப் பிடிக்கிறது என்பதில் இருந்து ஆரம்பிப்பார்.

சாலையில் போறவர்களை "ஹாரன் அடித்து பயமுறுத்திப் பழகிய" நமக்கு "தேவையில்லாமல் ஹாரன் அடிக்காதே" என்பதே புதிதாக இருக்கும். அப்படியே இடப்பக்கம் எப்படித் திருப்புவது, வலப்பக்கம் எப்படித் திருப்புவது, லேன் மாற்றுவது, ரவுண்ட் டானாவில் திரும்புவது என்றெல்லாம் வகுப்புகளை எடுத்த பிறகு வாகனத்தைப் பார்க்கிங் செய்வது, சிக்னல் தேர்வு என்று சில தேர்வுகளில் தேறினால் கடைநிலைத் தேர்விற்கு தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.

*

காலையில் எட்டு மணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் தேர்வு நடக்கும். இங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகள் என்றால்.. "தேர்வில் சோதிக்க வேண்டிய விசயங்களான இடப்பக்கம், வலப்பக்கம், 90 டிகிரி பார்க்கிங், லேன் மாற்றம், ரவுண்டானா  என்று எல்லாவற்றையும் சோதிக்கும் வகையில் சாலைகள்" இருக்கும். நான் உடுமலையில் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் எடுக்க, வண்டிய ஓட்டியது (நிஜமா.. நம்புங்கப்பா..) வாகனங்கள் ஓட்டம் அதிகம் இல்லாத உடுமலை - மூணாறு சாலையில்.. அதுவும் ஒரு 100 மீட்டர் அவ்வளவு தான். இங்கே??

எட்டு மணித் தேர்விற்கு காலை ஏழரை ( மணியே சொல்லிடுச்சு) மணிக்குப் தேர்வு மையத்திற்குச் சென்றால்.. பேய் அறைந்தது போல் ஒரு கூட்டம் அமர்ந்திருக்கும். அவர்களிடம் மெதுவாக "எத்தனாவது  தேர்வு என்றால்?" "எட்டு முடிஞ்சிடுச்சு" என்று பெருமூச்சு விடுவார்கள். நாங்க எல்லாம் (சிங்கம்டா ) முதன் முறையே பாஸாகிவிடுவோம் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்தால் "செந்தி லவெலன்" என்று கூப்பிடுவார்கள். நம் பெயரைத் தான் அழைக்கிறார்கள் என்று எழுந்தால் நம்முடன் இன்னும் மூன்று பேரை தேர்விற்கு அழைத்துக் கொண்டு செல்வார்கள்.

நம் முறை வந்த பிறகு வாகனத்தை ஓட்ட ஆரம்பித்து லெஃப்ட், ரைட்டு என்று ஓட்டும் பொழுது "நமக்கு ஏழறையாக" சில பிக் அப் லாரிகள் வந்து பயமுறுத்தி விடுவார்கள். நாம் வண்டியைத் திருப்பும் முன்பு கண்ணாடியைப் பார்க்கமலோ, சிக்னல் காட்டமலோ (நம் ஊர் பழக்கத்தில்) எடுத்துவிட்டால் தேர்வாளர் வாகனத்தை நிறுத்தி இறக்கிவிடுவார். பிறகு கஜினி முகம்மது மாதிரி படையெடுக்க வேண்டியது தான்.

"ஏம்பா.. என்னய அடிக்கிறேன்னு சொன்னீங்க.. இதோ வந்திட்டேன்" என்று அடுத்தடுத்து தேர்விற்குச் செல்ல ஆரம்பித்துவிடுவோம். இந்த முறை நன்றாக ஓட்டியுள்ளோம் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், நாம் கவனிக்காத தவறுகளால் தேர்வில் தோல்வியடைந்து, தவறுகளைச் சரி செய்யும் பொழுது நான்கைந்து தேர்வுகளையும் இந்திய மதிப்பில் ஒரு இலட்ச ரூபாயையும் செலவளித்திருப்போம். ( இந்தக் காசுக்கு நம்மூருல ஒரு பழைய மாருதி வாங்கியிருக்கலாம்னு சொல்றது கேக்குது.)

எல்லாம் முடிந்து தேர்வில் தேறிவிட்டோம் என்ற முடிவு தெரியும் பொழுது... " ஆத்தாஆஆஆஆஆ.. நான் பாஸாயிட்டேன்" என்று கத்த வேண்டும் போல் இருக்கும். ஆம்.. இரு தினங்களுக்கு முன்பு தான் நானும் ஓட்டுனர் உரிமம் பெற்றேன். ஐந்து முறை தோல்வியடைந்த பிறகு... பத்தாவது, பதினைந்தாவது முறை என்றெல்லாம் விடாமுயற்சியுடன் தேர்விற்குச் செல்பவர்கள் முன் என் ஆறாவது முறை பெரிய விசயமல்ல!!

*

பெரும்பாலான சாலைகளின் இரண்டு புறமும் நாலு முதல் ஆறு வழிப்பாதைகள். பல சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் கார்கள் என்று, சில நொடி கவனம் சிதறினாலும் பெரிய சேதம் ஏற்பட்டுவிடும் என்பதே இவ்வளவு கடினமான தேர்வு முறைகளை வைத்திருக்கிறார்கள்.

"மூன்று வழிப்பாதைகளை நான்கு அல்லது ஐந்து வழிப்பாதைகளாக மாற்றிக் காட்டும் நம்மவர்களுக்கு இது போல கடினமான தேர்வுமுறைகள் வைத்தால் என்ன?" என்று நடைமுறையில் சாத்தியமில்லாத விசயங்களை சிலவமயம் மனம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது.

*

இந்தப் பக்கத்தில் இனி அவ்வப்பொழுது சாலை விதிகள்  பற்றிய பதிவுகளை எதிர்பார்க்கலாம்.. (ஹூக்கும்.. இது வேறயா..)

Friday, August 27, 2010

அமீரக இரவும் நிலவும்!!

அமீரகத்தில் ஒரு இரவு நேரம். மணி பத்தாகிறது. வீட்டின் பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் வாகனங்கள் பரப்பாய் சென்று கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எப்பொழுது தான் இரவு ஆரம்பிக்கும். இந்தியாவில் இருந்து அயல்நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் என் உடல் அமீரக வாழ்க்கை முறைக்கு பழகவில்லை. பொழுது சாய்ந்து சில மணி நேரத்தில் தூங்க வேண்டும் என்று பழக்கப்பட்டதாலோ என்னவோ உடலும் பொழுது சாய்ந்தவுடன் நித்திரையைத் தழுவ ஆரம்பித்துவிடுகிறது உடல். இரவு என்றாலே நினைவிற்கு வருவன அமைதியும், இனிமையான தென்றலும், விண்மீன்களும் தானே. அமீரக வாசிகளுக்கு இரவு என்பதை எவ்வாறு சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?


நூறு அடி தொலைவில் பரப்பான சாலையைப் பார்த்ததில் ஏற்பட்ட அயற்சியால் கண்கள் ஐநூறு அடி தொலைவிற்குச் செல்கின்றன. அமைதியான உள்ளிழுப்புக் கடலும், அதில் செல்லும் படகும் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. கண்கள் ஐநூறு அடிக்குச் சென்றவுடன் காதுகளும் அமைதியை உணர்கின்றன. தொலைவில் ஒரு பரப்பான சாலை தெரிகிறது. அங்கும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆனால் அவற்றின் சத்தமோ இரைச்சலோ கேட்கவில்லை. தொலைவில் செல்லும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது கண்களுக்கு!! அதே இரைச்சல், அதே வாகனங்கள் ஆனால் இருவேறு உணர்வு. அருகில் இருக்கும் விசயத்தை விட தொலைவில் இருக்கும் விசயம் எவ்வளவு அழகாகத் தெரிகின்றன. இதைத் தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிறார்களோ?

பால்கனியில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், அமீரக வெப்பத்தை மேலும் கூட்டுகிறது. ஐநூறு அடி தொலைவில் இருந்து கண்கள் 15 அடிக்கு மாறுகிறது. அருகில் இருக்கும் வீடுகளில் எவரும் வெளியே இல்லை. எல்லாக் கதவுகளும் மூடியே இருக்கின்றன. இவர்கள் எவருக்கும் வேடிக்கை பார்ப்பதே பிடிக்காதோ? 

இன்றெல்லாம் நாம் வேடிக்கை பார்ப்பதை மறந்துவிட்டோம் என்றே கூற வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்வோர், பாதசாரிகள், உணவகத்தில் சாப்பிடுபவர் என அனைவரும், கைகளில் உள்ள திரையையே வெறித்துப் பார்க்கப் பழகிவிட்டோம். செல்பேசித் திரை, கணினித் திரை, சின்னத்திரை என்று திரைகளைப் பார்க்கப் பழகி, வேடிக்கை பார்ப்பதைக் குறைத்துவிடுவதால் கற்பனைத்திறனிற்கும் திரை போட ஆரம்பித்துவிடுகிறோம். 

நீண்ட நேரம் வெளியில் நின்றதால் வியர்க்க ஆரம்பிக்கிறது. வெளியே வெப்பக்காற்றைக் கக்கும் குளிரூட்டி என்னை உள்ளே இழுக்கிறது. உள்ளே வந்தவுடன் வெப்பம் அந்நியமாகிறது. கதவை வேகமாக மூடுகிறேன். வாகனங்களின் இரைச்சல், குளிரூட்டியின் சத்தம் என்று எதுவுமே கேட்காததால் ஒரு அமைதியை உணர முடிகிறது. இதமாகக் குளிரூட்டியின் காற்று என்னை வருட மனது "ராஜாங்கத்தைக்" கேட்க விரும்புகிறது. இரவு நேரங்களில் கேட்பதற்காகவே வைத்திருக்கும் பாடல் வரிசையைக் காற்றில் தவழ விடுகிறேன்.

கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

கண்கள் சொருகுகின்றன. அப்படியே பாடலுடன் மனதும் ஊரிற்குச் செல்கின்றது. அழகான இரவுப்பொழுது.. எங்கள் வீட்டுமாடியில் தென்றல் தழுவ நடக்க ஆரம்பிக்கின்றேன். மேகங்கள் இல்லாத தெளிவான வானம். அழகாக நிலா என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. வீட்டைச் சுற்றியிருக்கும் தென்னைமரக் கிளைகளின் நடுவே நிலா ஒளிந்து விளையாடுகிறது. சீரான வேகத்தில் காற்று வீச, மரக்கிளையும் சீராக சிரங்களையாட்ட, நிலவும் சீராகக் கண்ணடிக்கிறது. எத்தனை நாட்களாகின்றன நிலவை ரசித்து.. ஏனோ திடீரென்று நிலா மறைந்து விட்டது. கண்கள் விழிக்கின்றன.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..

ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடு நிலாச் சோறு
ஏன் பொன்னுமணித் தேரு
கூட வந்து சேரு
நான் சுட்டுங்கனிச் சாறு

நிலாச்சோறு... 

நிலாச்சோறு சாப்பிட்டு எத்தனை நாட்களாகின்றன. சிறுவயதில், மின்சாரம் இல்லாத நாட்களில், பௌர்னமி நாட்களிலெல்லாம் தெரு நண்பர்களுடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட நினைவு வருகிறது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலகாரங்களை எடுத்துச் சென்று கூட்டாக வைத்து கும்மியடித்து, பிறகு கைகளை நிலவிற்கு ஊட்டிவிட்டு நண்பர்களுக்கும் ஊட்டிவிட்டு.. அடடா நிலாச்சோறின் சுவை.. ஊருக்குச் சென்றால் வீட்டின் மாடிக்குச் சென்று குடும்பத்தாருடன் நிலாச்சோறு சாப்பிட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு நிலா ஒளி நிரம்பிய இரவுப் பொழுதில் "நண்பர்களுடன் சீட்டாடிய" நினைவு வருகிறது.

இரவையும் நிலவையும் எப்படி ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறதே. எனக்குக் கிடைத்த இரவு அனுபவங்கள், நிலா அனுபவங்கள் என் மகனிற்குக் கிடைக்குமா? பெரு நகரங்களில் வாழும் வரை இரவை ரசிக்கும் அனுபவம் கிடைப்பது கடினமே என்றாலும் எப்படியாவது இரவை ரசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

பாடல் வரிசையில்.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..

நிலாவே வா 
செல்லாதே வா 

வீட்டின் உள்ளே தெரியாத நிலா.. மனத்திரையில் தெரிய ஆரம்பிக்கிறது.. மனதும் இரவை ரசிக்க ஆரம்பிக்கிறது.அமீரகத்தில் வீட்டினுள்ளே இருந்தாலும் நிலா.. அடடா.. என்ன அழகாகத் தெரிகிறது!!

Friday, August 20, 2010

ஹலோ.. சாரிங்க.. ராங் நம்பர்!!

நீங்கள் புதிதாக ஒரு அலைபேசியை வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு அலைபேசி எண்ணும் தேவைப்படுகிறது. அந்தக் அலைபேசிக் கடைக்கு அருகிலேயே இருக்கும் பிரபல தொலைத்தொடர் நிறுவனத்தாரின் சேவை மையத்திற்குச் செல்கிறீர்கள். சில படிவங்களையும், அடையாளச் சான்றையும் கொடுத்த பிறகு சிம்கார்டை வாங்கி, அலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள். 

உங்கள் அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பிக்கின்றன. "நான் யாரிடம் இந்த எண்ணைக் கொடுக்கவில்லையே. என்னை யார் அழைப்பது?". வந்த அழைப்பை எடுக்கிறீர்கள். ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது உங்களுக்கு...


"டேய்.. ராசூ.. மணி பேசறேண்டா.." என்று ஆரம்பிக்கிறார்.
"ஹலோ உங்களுக்கு யாருங்க வேணும்"
"விஜயராஜ் இல்லீங்களா?"
"இல்லீங்க இப்ப தான் நான் இந்த நம்பர..." என்பதற்குள் துண்டித்துவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வெளிநாட்டு அழைப்பில் இருந்து வருகிறது.

"ஹலோ... விஜயராஜ் இருக்காருங்களா?"
"யாருங்க?"
"விஜயராஜ் நம்பர் தானுங்க?"
"யாருங்க? விஜய ராஜா? உங்களுக்கு யாருங்க வேணும்?"
"இல்லீங்க.. இந்த நம்பரத் தான் கொடுத்திருந்தாரு.. "
"நீங்க யாரு?"
"சாரிங்க... நான் தவறுதலா உங்களுக்குக் கூப்பிட்டுவிட்டேன்"
"நீங்க கோயமுத்தூருங்களா? நான் சிவகாசில இருக்கேன்.. நீங்க எங்கிருந்து பேசறீங்க?"
"நான் வெளிநாட்டுல இருந்து கூப்பிடறேன்.. சரி வச்சிடுங்க!1"

"இல்லீங்க நீங்க எந்த ஊருல இருந்து கூப்பிடறீங்க?"

"ஐயா.. நான் தெரியாம இந்த நம்பருக்குக் கூப்பிட்டிட்டேன்.. மன்னிச்சுடுங்க"

"இல்லீங்க தம்பி.. நீங்க.."

"டொங்க்"

புதிதாக ஒரு தொடர்பு எண்ணை வாங்கி "மேலே கூறியுள்ளதைப் போல" அழைப்புகள் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

*

மேலே குறிப்பிட்டுள்ள பேச்சுவார்த்தை கற்பனையல்ல!! அதில் வெளிநாட்டிலிருந்து பேசியது அடியேன் தான். இந்த விசயம் அன்றாடம் நடக்க ஆரம்பித்திருக்கும் ஒன்றே. 

ஒரே எண்ணிற்குத் தொடர்ச்சியாக "ஒரே நபரின்" பெயரை கேட்டு அழைப்புகள் வருவதில் இருந்தே புரிவது, "விஜயராஜ்" என்ற வாடிக்கையாளர் பயன்படுத்தியிருந்த எண் வேறொருவருக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது. சில மாதங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்து விட்டாலோ, இணைப்பைத் துண்டித்து விட்டாலோ, அந்த எண்  வேறொருவருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப் பயன்படுத்திய எண்ணை மற்ற வாடிக்கையாளருக்குக் கொடுக்கலாமா? 

"அலைபேசிகள் பெருமளவு பெருகிவரும் இன்றைய சூழலில், ஒரு எண் முடங்கிப் போவதற்கு பதிலாக வேறொருவருக்குத் தருவது சரியே" என்ற வாதம் வரலாம். ஆனால், இந்த எண் பயன்படுத்தப்பட்ட எண் என்பது புதிதாக வாங்குபவருக்குத் தெரியாமல் போனால் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல "தவறான அழைப்புகள்" வந்தால் என்ன செய்வது?

விஜயராஜ் ஒரு சாமான்யராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. அதுவே பிரச்சனைக்குரிய நபர் பயன்படுத்திய எண் நம் கைக்கு வந்தால் என்ன ஆவது? தொலைபேசி எண்களை தவறான வழிகளுக்குப் பயன்படுத்துவது பெருகிவரும் காலத்தில், இது போன்ற அழைப்புகள் புதிதாக எண்ணை வாங்குபவருக்குத் தேவையில்லாத தலைவலி தான்!!

இதற்கு ஏதாவது சட்டங்கள் உள்ளனவா? அன்பர்களுக்கு விடை தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்!!

*

அடுத்து விஜயராஜின் இடத்திற்கு வருவோம்..

ஏதோ ஒரு காரணத்திற்காகப் பழைய எண்ணைத் துண்டித்தவர் தன் நண்பர்களுக்கெல்லாம் புதிய எண்ணைத் தெரிவித்திருக்கலாம். அப்படி புதிய எண்ணைத் தெரிவிக்காமல் போனதால் தான் இத்தனை குழப்பம்.

நாம் இதைச் செய்கிறோமா?

இன்று சந்தையில் கிடைக்கும் அலைபேசிகள் பலவற்றுள் இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக் கொள்ளும் வசதி வரும் அளவிற்கு ஒரே நபர் இரண்டு தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது எளிதாகப் பார்க்க முடிகிறது. அலுவலகங்களில் தரப்படும் எண், சொந்த பயன்பாட்டிற்கு என ஒரு எண் என்று இரண்டு எண்கள் வைத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது பழைய எண்ணை அப்படியே கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஒரு தொலைத்தொடர்பு சேவையை விட அடுத்த சேவை நன்றாக இருந்தால் எண்ணை முடக்கிவிட்டு அடுத்த எண்ணிற்கு மாறுவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி நாம் எண்களை மாற்றும் பொழுது, நாம் நம் நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்.. "ஹலோ... யாருங்க... உங்களுக்கு எந்த நம்பருங்க வேணும்?" என்பதைத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

*

Thursday, August 19, 2010

மிட்டாய் வீடு!!

Sweet Home (மிட்டாய் வீடு) என்பது எப்படி இருக்க வேண்டும்?

ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு, இன்பம் துன்பம் என்று வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் பங்கேற்கும் குடும்ப அங்கத்தினர் இருந்து விட்டால், அக்குடும்பம் இனிய இல்லமாகத் தான் இருக்கும். ஒரே குழந்தை, சிறிய குடும்பம் என்ற முறை உருவாகியுள்ள இன்றைய சூழலில் குடும்ப வாழ்க்கை இனியதாக இல்லாவிட்டால்?

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்பதெல்லாம் மாறி "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற நிலை வந்துவிட்ட நகப்புற வாழ்வியலில் அக்குழந்தை தான் பெற்றோரின் உலகம். குழந்தை பிறந்தது முதல் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து, அர்ப்பணித்து வளர்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள் பெற்றோர். குழந்தையின் வாழ்க்கை தான் தன் வாழ்க்கை, குழந்தையின் வெற்றி தான் தன் வெற்றி, குழந்தையின் வளர்ச்சி தங்கள் வளர்ச்சி என்று வாழும் பெற்றோருக்கு சின்னதாக பயம் தட்டுவது தங்கள் மகன்/மகள் திருமணம் செய்யப் போகும் வயதில்!!



தனக்கு வரும் மருமகள் தன்னை மதிப்பாளா? புதிதாக வீட்டிற்கு வருபவர் எப்படி ஒத்துப்போவார்? என்றெல்லாம் எண்ணங்கள் எழ ஆரம்பித்துவிடும்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல. வீட்டிற்குப் புதிதாகக் குடிபோகும் பெண்ணிற்கும் வரத்தான் செய்யும். இத்தனை காலம், தன் காதலனைப் பாராட்டி, சீராட்டி வளர்த்தவர்கள் எப்படி தன்னை நடத்துவார்கள்? எங்கள் குணங்கள் ஒத்துப் போகுமா? என்ற எண்ணங்கள் வர ஆரம்பித்துவிடும்.

இந்த எண்ணங்களை மிக அழகாக "மிட்டாய் வீடு" என்ற குறும் படமாக்கியிருக்கிறார்கள் எம்.பாலாஜி மற்றும் குழுவினர். கார்காலத்தில் மழைச் சாரலைக் குடும்பத்தினருடன் ரசித்த உணர்வு ஏற்பட்டது இந்தப் படத்தைப் பார்க்கும் பொழுது!! 

குறும்படத்தின் நாயகன் (அதித்) தன் பெற்றோரைப் பற்றிக் கூறும் காட்சிகள், நாயகி (ஜனனி) வருங்கால மாமியாரைச்(ரேணுகா) சந்திக்கும் காட்சி என எல்லாமே அவ்வளவு அழகு. இக்குறும்படத்தை மேலும் நான் விமர்சனம் செய்வதை விட சில நிமிடங்களில் நீங்களே பார்த்துவிடுங்கள்.




குடும்பத்தில் ஒரு மருமகள் வருவதற்குப் பதிலாக ஒரு மருமகன் வருவதை எடுக்க வேண்டும் என்றால் எப்படி எடுப்பது?

வெள்ளித்திரைக்கு எல்லா திசைகளில் இருந்தும் சவால்கள் வர ஆரம்பித்துவிட்டன. சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காக இரண்டு மணி நேரத்தை திரையரங்கில் செலவிட வேண்டுமா? என்ற எண்ணம் மக்களிடம் வர ஆரம்பித்துவிட்டதே பல படங்கள் தோல்வியைத் தழுவுவதற்குக் காரணம்.  "அட" போட வைக்கும் காட்சிகள் படம் முழுவதும் வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் வேண்டுகோள்!! அல்லது "மிட்டாய் வீடு" போன்ற குறும்படங்களை ரசித்துவிட்டுச் சென்று விடுவார்கள்!!


"மிட்டாய் வீடு" குறும்படத்தை இது வரை 97ஆயிரம் பேர் பார்த்துள்ளது குறும்படக் குழுவினரின் வெற்றிக்கு அடையாளம்!! வாழ்த்துகள்!!

Sunday, August 15, 2010

"காந்தி" திரைப்படமும் சிந்தனைகளும்!!


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!! இந்தப் பெயரைத் தெரியாதவர் இருக்க முடியுமா? உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகள்,இயக்கங்கள், தலைவர்கள், தனி நபர்கள் என இவரது கருத்துகளின் தாக்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. காந்தியடிகளின் வாழ்க்கையைப் பற்றிப் படித்தால் இந்திய விடுதலை வரலாற்றின் முக்கிய திருப்பங்களையும் தெரிந்து கொள்ளலாம். அப்படி அவரது வாழ்க்கையையும், இந்திய வரலாற்றையும் ஒரு சேரப் பார்க்க வேண்டுமா?

காந்தி - திரைப்படம் பாருங்கள்!!

காந்தி திரைப்படத்தைத் தான் தூர்தர்சன் காலத்தில் வருடா வருடம் ஒளிபரப்பியிருக்கிறார்களே!! இப்பொழுது என்ன புதிதாகப் பார்க்க வேண்டியிருக்கிறது?


சில படங்கள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு தாக்கத்தை, கவனிப்பை ஏற்படுத்தும். சிறுவயதில் தூர்தர்சன் காலத்தில் காந்தி ஜெயந்தி அன்று "காந்தி" திரைப்படத்தைப் போட்ட போதெல்லாம் காந்தியின் மீதுள்ள மதிப்பால் அரை மணி நேரம் பார்த்துவிட்டு "போர்" அடிக்கிறது என்று விளையாடச் சென்று விடுவேன். அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள், காந்தியாக நடித்தவரின் (பென் கிங்க்ஸ்லி) ஆளுமை, காந்தி திரைப்படத்தில் வரும் கருத்துகளை இப்பொழுது பார்க்கும் பொழுது இன்றைய காலகட்டத்தை ஒப்பிட்டு நாம் எங்கே இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. 

படத்தின் கதையை, எடுத்த விதத்தை விமர்சனம் செய்வது இப்பதிவின் நோக்கமல்ல. இந்தப் பதிவில், படத்தில் என்னைக் கவர்ந்த முக்கிய காட்சிகளும், வசனங்களும் இன்றைய சூழலைப் பற்றிய ஆதங்கமுமே பதிவேற்றப்பட்டுள்ளது.

காந்தி தென்னாபிரிக்காவில் முதல் வகுப்பில் ரயில் பயணம் செய்து கொண்டிருப்பார். அவரை வெள்ளை அதிகாரிகள் வண்டியில் இருந்து இறங்கி மூன்றாம் வகுப்பிற்குச் செல்லக் கூறும் பொழுது, "இந்தியாவும் பிரிட்டனின் ஆட்சியில் தான் உள்ளது. நான் ஒரு வக்கீல். எனக்கு முதல் வகுப்பில் செல்ல எல்லா உரிமையும் உள்ளது" என்று கூறும் பொழுது கண்ணில் ஒரு ஒளி தெரியும் பாருங்கள்!! அவர் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்ததே இந்த "இனவெறிக்கு எதிரான இந்த ரயில் சம்பவத்தில்" தான். இந்த சம்பவம் நடந்தது 130 வருடத்திற்கு முன்பு. இன்றும் எத்தனை இடங்களில் சாதி வெறி, மத வெறி உள்ளது நம் நாட்டில்? அன்று காந்தியடிகள் கேட்டது வெள்ளியர்களிடம்.. இன்று??

சென்னையில் இருக்கும் பொழுது பேச்சாற்றல் சம்பந்தமாக ஒரு பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தேன். அந்தப் பயிற்சி வகுப்பில், "ஒரு மேடைப் பேச்சு எப்படி இருக்க வேண்டும், கூட்டத்தின் கவனத்தை எப்படி ஈர்க்க வேண்டும்?" என்பதற்கு உதாரணமாகக் காட்டியது "காந்தி" படத்தில் வரும் காட்சியைத் தான். தென்னாபிரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றும் காட்சி. இந்தியர்கள் என்பதற்கு அடையாளமாக ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்ட "அடையாள அட்டைகளை" புறக்கணிக்குமாறு கூறுவதே உரையின் நோக்கம். அதில் வரும் வசனம்..

"அவர்கள் என்னைத் துன்புறுத்தலாம், எலும்புகளை உடைக்கலாம், என்னைக் கொல்லவும் செய்யலாம். ஆனால் என் மன உறுதியை அல்ல.."

இந்தியாவிற்கு காந்தியடிகள் வந்த பிறகு நேரு, ஜின்னாஹ் மற்றும் இதர தலைவர்கள் சேர்ந்து நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்வார். அதில் அவர் ஆற்றிய உரையில்..

"நீங்கள் சில நூறு வக்கீல்கள் சேர்ந்து கொண்டு தில்லியிலும், பம்பாயிலும் நாட்டு விடுதலை பற்றியும், மக்களின் எழுச்சி பற்றியும் பேசுகிறீர்கள். இதனால் என்ன பயன்? நீங்கள் பேச வேண்டியது 700000 கிராமங்களில், நாட்டுபுறங்களில் உள்ள சாமான்யர்களிடம் தான். அவர்களை நாம் கண்டுகொள்ளாமல் எந்தப் பயனும் இல்லை.."

இந்த உரையை இன்று உள்ள அரசியல்வாதிகளிடம் கூறினாலும் சரியாகத் தான் இருக்கும். சாமான்யர்களுக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்காமல் தலைநகரங்களில் இருந்து கொண்டு திட்டம் தீட்டுவதை என்னவென்று சொல்ல?

காந்தி தனது அகிம்சை வழியைப் பற்றிக் கூறும் பொழுது ஜின்னாஹ் "நம் மக்கள் இப்பொழுது தான் கிளர்ந்து எழுந்திருக்கிறார்கள். பல இடங்களில் வெள்ளையர்களை எதிர்த்து சண்டையிடுகிறார்கள். இப்பொழுது நிறுத்து என்பது சரியாகுமா?" என்பார். அதற்கு காந்தி " கண்ணிற்குக் கண் என்பது என்றைக்குமே தீர்வு அல்ல" என்பார். என்னவொரு கருத்து?

காந்தியடிகளின் "ஒத்துழையாமைப் போராட்டம்" தீவிரம் அடைந்த நேரம். அம்ரிட்சர் அருகே ஜாலியன் வாலாஹ் பாகில் நான்கு பக்கமும் சுவர்களால் மறைக்கப்பட்ட மைதானத்தில் மக்கள் கூடியிருப்பர். அந்நேரம் ஜெனரல் டையர் என்ற படும்பாவி ஆயுதம் ஏந்திய ஆங்கிலேயப் படையை ஏவிவிட்டு சுட்டுத் தள்ளுமாறு ஆணையிடுவார். அந்தக் காட்சியை இன்று பார்த்தாலும் இரத்தம் கொதிக்கிறது. அந்தக் காட்சிக்குப் பிறகு ஆங்கிலேயே விசாரனைக் குழுவிடம் டையர் நடத்தும் உரையாடல்..

அரசாங்க வக்கீல்: ஜெனரல் டையர் நீங்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சொன்னீர்களா?
டையர்: ஆம்
அரசாங்க வக்கீல்: 1516 பேர் இறந்துள்ளனர் தெரியுமா?
டையர்: ஆம். மொத்த இந்தியாவிற்கு இது ஒரு படிப்பினையாக இருக்குமென்றே அவ்வாறு செய்தேன்.
அரசாங்க வக்கீல்: அந்தக் கூட்டத்தில் குழந்தைகளும், பெண்களும் இருந்தார்கள் என்பது தெரியுமா?
டையர்: ஆம் தெரியும்.
அரசாங்க வக்கீல்: குழந்தைகளையும் பெண்களையும் சுட்டு நீங்கள் என்ன செய்தியைச் சொல்ல முடியும்?
டையர்: ??
அரசாங்க வக்கீல்: அடிபட்டவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
டையர்: அவர்கள் உதவிகேட்கும் பட்சத்தில் உதவுவேன்.
அரசாங்க வக்கீல்: குண்டால் அடிபட்ட குழந்தை உங்களிடம் என்ன உதவியைக் கேட்கும் ஜெனரல்?
டையர்:

இங்கே நடந்திருக்கும் உரையாடல் நம் முன்னோர் செய்துள்ள தியாகத்தின் அளவை விளக்கும். அது சுதந்திரப் போராட்டம். 

சுதந்திரம் வாங்கிய பிறகும் நம் நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக நடக்கும் /நடந்த கொடுமைகளுக்கும், கொலைகளுக்கும் என்ன பதிலளிக்க முடியும்? நவீன கால ஜெனரல் டையர்களுக்கு எப்படி தண்டனை அளிப்பது?

சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டிய நேரம் காந்தியிடம் சமாதானம் பேசும் எண்ணத்தில் ஆங்கிலேய உயரதிகாரி கேட்கிறார்..

"நாங்கள் நாட்டை விட்டுப் போவோம் என்று நினைக்க வேண்டாம்"
"இல்லை. நீங்கள் சென்றே தீர்வீர்கள். வெறும் ஒரு இலட்சம் பேர்.. 35 கோடி மக்களை ஆள்வதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது"

சுய ஆட்சிக்கு வித்திட இதை விட அருமையான மொழிகள் அமைய முடியுமா? 


"திரு.காந்தி, பிரிட்டிஷ் இல்லாமல் உங்களால் திறமையாக ஆட்சி செய்ய முடியாது"
"உங்களிடம் நான் கூறிக்கொள்ள விரும்புவது, 'உலகில் எந்த மக்களுமே அந்நியர் ஆட்சி செய்வதை விரும்பமாட்டர். தங்கள் ஆட்சி மோசமானதாக இருந்தாலும்"

சுய உரிமையை, நாட்டு மக்களின் உரிமை அந்நியரிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை எவ்வளவு எளிமையாகக் கூறியுள்ளார் காந்தியடிகள். இன்று நாம் ஒவ்வொரு முடிவிற்கு ஏதாவதொரு அயல்நாட்டிடம் கருத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது தான் காந்தி எதிர்பார்த்த சுய உரிமையா?

நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்கப் போகும் தருணம். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடுகள் துண்டாகப் போவதை எண்ணி நாடெங்கும் கலவரம். ஒரு இந்து காந்தியிடம்..

"பாபு, நீங்கள் இதை செய்யக் கூடாது" என்கிறார்.
"ஏன்? ஏன் நான் ஜின்னாவை சந்திக்கக் கூடாது. நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், யூதன், சீக்கியன் எல்லாமே. நீங்கள் இப்படி கூச்சிலிடுவது உங்கள் சகோதரர்களுக்கு பயத்தை ஏற்படுத்தாதா? நான் எதிர்பார்க்கும் இந்தியா அதுவல்ல!!"

மதச்சார்பின்மை என்ற கொள்கையை நம் நாட்டிற்கு எவ்வளவு அரும்பாடு பட்டு வகுத்திருக்கிறார். நம் நாட்டில் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நடக்கும் கலவரங்களும், அரசியலும் ஒவ்வொரு இந்தியனும் வெட்கித்தலை குனிய வேண்டிய விசயம்.

*

"காந்தி" திரைப்படம் எடுத்தது 1982ல். இந்தியா சுதந்திரம் பெற்று 35 ஆண்டுகள் கழித்து நாட்டின் தந்தையைப் பற்றி வெளியான படம். திரைப்படம் என்றால் எடுத்த விதத்தில் கொஞ்சம் திரிபுகளும், வசனங்களை படத்திற்கு ஏற்றவாறும் இருக்கலாம். ஆனால் அப்படி ஒரு திரைப்படத்தில் வந்துள்ள வசனங்கள் எவ்வளவு அருமையாக எழுதப்பட்டுள்ளன.

காந்தி திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியனும் பார்த்தால் நாம் இன்று இருக்கும் சூழலிற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கிறோம் என்பது புரியும். சுதந்திரம், மதச்சார்பினை, சாதிகள் அற்ற சமுதாயம், பெண் விடுதலை என்பதெல்லாம் என்னவென்பதை சில நாடுகளைப் பார்க்கும் பொழுது தான் புரியும். காந்தி திரைப்படத்தை வரலாற்று ஆவனமாகவும் பார்க்கலாம், மேலாண்மை வழிகாட்டியாகவும் பார்க்கலாம்.

இப்படி ஒரு அருமையான படத்தைக் கொடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோவிற்கு எத்தனை நன்றியைக் கூறினாலும் தகும்!!

"காந்தி"யை நீங்களும் ஒருமுறை பாருங்களேன்!!

நண்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!!

Friday, August 13, 2010

ஏ.ஆர்.ஆர் இசை (Brand Analysis) + எந்திரன் பாடல்கள்!!

எந்திரன் படப் பாடல்கள் வெளியானவுடன் என் நண்பர்களிடம் இருந்து எனக்கொரு நோய் தொற்றிக் கொண்டது. எந்திரனைப் பற்றிக் கருத்துச் சொல்லும் ESUS - Enthiran Status Update Syndrome என்ற நோய். 

"எந்திரன் பாடல்கள் என்னைப் பெரிதாகச் ஈர்க்கவில்லை" என்பது தான் பாடல்களை நான்கைந்து முறை கேட்ட பிறகு முகநூலில் (Facebook) நான் எழுதியது. "பாடல்கள் புது விதமாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்டுப்பார் பிடிக்கும்" என்ற வகையில் பல கருத்துகள் வர ஆரம்பித்தன. 

எத்தனை இசையமைப்பாளர்களின் பாடல்களை நமக்கு முதல்முறை பிடிக்காவிட்டாலும் "மீண்டும் மீண்டும் கேட்டால் பிடித்துவிடும்" என்று நினைத்துக் கேட்கிறோம்? அந்த இடத்தைப் பிடித்திருப்பது ரகுமானின் பாடல்கள் மட்டுமே. ரகுமான் மீது உருவாகியிருக்கும் இந்த நம்பிக்கை தான் அவரது இசையின் பலம். இந்த இடம் எளிதில் கிடைத்ததல்ல. ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேல், திருடா திருடா என்று ஆரம்பம் முதல் ஒவ்வொரு படத்திலும் புதுமையான இசையை அமைத்ததாலேயே கிடைத்துள்ளது. இந்தியிலும் ரங்கீலாவில் ஆரம்பித்து தில்ஸே, தால் என்று கிரங்கவைக்கும் இசையை அமைத்தாலேயே அவருக்கென்று தனி இடம் உருவாகியுள்ளது.

ரகுமானை ஒரு BRAND (வகைக்குறி) என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்திய அளவில் இவரிற்கு இருக்கும் BRAND LOYALTY  இசைத்துறையில் வேறு எவருக்கும் இல்லை எனலாம். எந்திரன் பாடல்கள் வெளியான மறுநாளே அமீரகத்தில் உள்ள மலையாளப் பண்பலைகளில் ஒலிபரப்பாகியது, இந்தி பண்பலைகளில் எந்திரன் இசையைப் பற்றிப் பேசப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் "ஐ-டியூன்" தளத்தில் எந்திரன் பாடல்கள் தர வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வந்துள்ளது எல்லாம் ரசிகர்களின் விசுவாசத்தால் தான். ( ஐ-ட்யூன் தளம் ஆப்பிள் நிறுவனத்தின் பாடல்கள் தரவிறக்கத் தளம்). ரகுமான் என்ற வகைக்குறியின்(BRAND'S USP) அடையாளம் என்றால் புதுமை, நேர்மை, கட்டுடைத்தல், கடின உழைப்பு போன்றவை.

ஒவ்வொரு படத்தின் பாடல்களிலும் ஏதாவது ஒரு விசயம் புதுமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையே ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்க்கத் தூண்டுகிறது. முதல் முறை கேட்கும் பொழுது இதுவரை நமக்குப் பழக்கப்படாத இசைக் கலவையாக இருந்தால் நமக்குப் புரியவில்லையே என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது. பிறகு "அந்த இசையில் ஏதாவது புதிதாக இருக்க வேண்டுமே, ஏன் நமக்குப் புரியவில்லை என்ற எண்ணம்" மனதில் எழ ஆரம்பிக்கிறது. சரி மீண்டும் கேட்டால் என்ன? "ஆஹா.. இந்தப் பாடல் முதலில் எனக்குப் பிடிக்கவில்லையே.. இப்பொழுது பிடிக்கிறதே.. மீண்டும் கேட்டுப் பார்ப்போம் ஏதாவது இருக்கிறதா என்று". இது தான் ரகுமான் பாடல்களின் வெற்றிக்குக் காரணம். இந்த இடம் ஒரு சில வகைக்குறிகளுக்கே கிடைத்துள்ளது.

தொழில்நுட்பத்துறையில் இந்த அளவிற்கு ரசிகர்கள் மரியாதையைப் பெற்றிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். (இங்கே ஆப்பிளைக் குறிப்பிடுவது BRAND என்ற பார்வையில் மட்டுமே). ஆப்பிள் நிறுவனம் எந்தப் பொருளை வெளியிட்டாலும் அந்தப் பொருளின் மீது அப்படி ஒரு படையெடுப்பு நடக்கிறது. ஐ-போடில் ஆரம்பித்தது ஐ-ஃபோன், ஐ-பேட் வரை இந்தப் படையெடுப்பு தொடர்கிறது. சில பொருட்களில் உள்ள பயன்பாடுகள் பல வருடங்களுக்கு முன்பே மற்ற நிறுவனப் பொருட்களில் வந்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் மீது உள்ள நம்பிக்கையால் அதன் பொருட்கள் முதலிடம் பெறுகின்றன. 

ரகுமானின் இசை, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் என இரண்டையும் "வெளியானவுடன்" எந்தத் தரப்பினர் ரசிக்கிறார்கள்?

நன்றாகப் படித்த, ஊடகங்களுக்கு அறிமுகமான ரசிகர்களால் தான் இரண்டு பொருட்களுமே "வெளியானவுடன்" அதிகம் ரசிக்கப்படுகின்றன. அவர்களே இந்தப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றனர். இணையங்கள், ஊடகங்கள் எங்கும் கருத்துத் தெரிவிப்பதும் இணைய வசதி, ஊடங்கங்களில் கருத்தைப் பதிவு செய்யும் வசதியுள்ளவர்களே. இந்தத் தரப்பினர் ஃபேஸ்புக், ப்ளாக்கர், மற்ற ஊடகங்களில் பரவலாகக் கருத்துத் தெரிவிக்கையில் உலகமே இவர்களின் பொருட்களைப் பேசுவதைப் போல ஒரு எண்ணம் உருவாகிறது. "எல்லாரும் இதைப் பத்தியே பேசறாங்களே.. நாம பேசலீன்னா நம்மள ஆட்டைக்கு சேத்துக்க மாட்டாங்களோ" என்ற உந்துதலால் அனைவரும் கருத்து சொல்லும் நிலை ஏற்படுகிறது. இதுவே வாய் வார்த்தையில் (WOM) மேலும் பலம் கொடுக்கிறது.

ஒரு பொருளை சந்தையில் வெளியிடுவதில் பல நிலைகள் உள்ளன. முதல் நிலை விசுவாசிகள், புதுமை விரும்பிகள் படையெடுக்கும் நிலை. இவர்களைப் பூர்த்தி செய்துவிட்டால் அந்தப் பொருள் அடுத்தடுத்த நிலைகளில் வெகுசனத்திடம் வெற்றியை உறுதி செய்கின்றது. ரகுமானின் இசை முதல் நிலையை பெரும்பாலான சமயங்களில் எளிதே கடந்துவிடுகின்றது. 

*

"எந்திரன்" படப்பாடல்களிலும் முதல் நிலையை எளிதே கடந்துள்ளது என்றே கூறலாம். SLMன் (ஸ்லம் டாக் மில்லியனர்) வெற்றி, ஆஸ்கர் போன்றவை உலகெங்கும் உள்ள தமிழர் அல்லாத ரசிகர்களிடத்தும் எந்திரன் இசையைக் கொண்டு செல்ல உதவியுள்ளது. எந்திரன் படமும் ஒரு ரோபோவைப் பற்றியது என்பதால் பரவலாக ஹார்ட் ராக், ஃபுயூசன், டெக்னோ, ரெக்கே என்று மேற்கத்திய பாணியில் இசையை வெளியிட்டுள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களாக நான் கேட்டதில் எந்திரன் பாடல்களின் தரவரிசையும் சிறிய விமர்சனமும்..

1 - காதல் அனுக்கள் - ஸ்ரேயா கோசல், விஜய் பிரகாஷ் :

படத்தின் ஒரே மெலடி. மிக மிதமாக ஆரம்பித்து அப்படியே துள்ளிச் செல்கிறது இசை. "ஹோ பேபி ஹொ பேபி.. " என்ற வரிகள் பாடலின் ஹை லைட். வழக்கப் போல் ஸ்ரேயா கோசலின் குரலில் அப்படி ஒரு மென்மை.

2. இரும்பிலே ஒரு இதயம் - ஏ.ஆர்.ஆர்., காஸ்'என்.கிரிஸ்

பின்னிப் பெடலெடுத்திருக்கும் பாடல். கார்களில் இந்தப் பாடலைக் கேட்டு விடாதீர்கள். உங்கள் வேகம் உங்கள் கையில் இருக்காது. அப்படி ஒரு வேகம். காஸ்'என்.கிரிஸ்ன் வரிகளும் பாடிய விதமும் கலக்கல் ரகம். சில வருடங்களுக்கு டிஸ்கோக்களில் அதிகம் ஒலிக்கும் பாடலாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது "அ..ஆ" படத்தில் வரும் "மரம் கொத்தியே.." பாடல் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

3. கிளிமஞ்சாரோ - ஜாவத் அலி, சின்மயி

முதல் முறை கேட்கும் பொழுதும் ஒன்ற முடிந்த பாடல். சின்மயியின் குரல் தானா அல்லது இசைத்தட்டில் பிழையாக எழுதிவிட்டார்களா என்று ஐயம் வரும் அளவிற்கு கலக்கலாகப் பாடியுள்ளார்.

4. புதிய மனிதா - எஸ்.பி.பி, ரகுமான், கதிஜா ரகுமான்

Ultimate Title Song!! எந்திரன் என்ற படப் பெயரை விளக்கும் வகையில் வரிகள். எஸ்.பி.பி.யின் குரல் ஒரே வரிக்குள் இரண்டு நிலைகளில் வருவது ரசிக்கும் படியாக உள்ளது.

5. பூம் பூம் டா - பலர் 

யோகி.பி ஸ்டைலில் ஒரு ராப் பாடல். நன்றாகவே வந்துள்ளது.

6. சிட்டி டான்ஸ் - பலர்

ட்ரம்ஸ், கிளாசிக்கல் என்று ஆரம்பித்து பாலேவில் பயனித்து டெக்னோவில் முடியும் தரமான ஃபுயூசன் இசை.

"அரிமா அரிமா" எனக்கு இது வரை சுமார் ரகமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் கேட்டால் பிடிக்க ஆரம்பிக்கலாம். இது வரை கேட்டதில் எந்திரன் படப் பாடல்களுக்கு 3.75 / 5 என்ற அளவில் மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

எந்திரன் பாடல்களைக் கேட்டு விட்டு களவாணியில் வரும் "சின்னச் சின்னத் தூரல் வந்து" என்ற பாடலைக் கேட்டவுடன் அப்படி ஒரு புத்துணர்வை உணர முடிகிறது. ம்ம்.. என்ன தான் மேற்கத்திய இசையை கேட்டாலும் எனக்குள் இருக்கும் கிராமத்தானிற்கு எளிமையான "ராஜா" ஸ்டைல் பாடல்களே கேட்டவுடன் பிடிக்கின்றன. 

*

Tuesday, August 10, 2010

அமீரகத்தில் ரமலான் + சில எண்ணங்கள்!!

அமீரகம் ரமலான் மாதத்திற்கு ஆயத்தமாகி வருகிறது. பல்பொருள் அங்காடிகள் எங்கும் கூட்டம். மக்கள் கூட்டம் கூட்டமாக உணவுப் பொருட்களை வாங்குவதைப் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடிகள் என வணிக நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு ரமலான் மாதத்தை வரவேற்கத் தயாராகி வருகின்றனர். இந்த மாதத்தை முன்னிட்டு அமீரகத்தில் நடக்கும் ஏற்பாடுகளும், ரமலானை முன்னிட்டு அனுசரிக்கப்படும் கட்டுப்பாடுகளும், இன்னபிற எண்ணங்களும் தான் இப்பதிவின் நோக்கம்.



அதற்கு முன்பாக.. ரமலான் பற்றிய சிறிய விளக்கம். தெரியாத விசயங்களைத் தவறாகக் கொடுக்கக் கூடாது என்பதாலேயே விக்கிப்பீடியாவில் ரமலான் மாதத்தைப் பற்றி கொடுத்துள்ள குறிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். 

" ரமலான் என்பது இசுலாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் முஸ்லிம்களுக்கு நோன்பு மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர். இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும்.

ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்." நன்றி - விக்கிப்பீடியா.

அமீரகம் வருவதற்கு முன்பு ரமலான் என்பது இஸ்லாமிய அன்பர்கள் தொடர்புடைய மாதம் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். ஊரில் இருக்கும் பொழுது கூட இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிவாசல் சென்று நோன்புக் கஞ்சியை வாங்கி வந்ததுண்டு. ஆனால், அதற்கு மேல்  ரமலான் மாதத்திற்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றியெல்லாம் அறிந்து வைத்திருக்கவில்லை. அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தது மத்திய கிழக்கு நாடுகளின் பழக்கவழக்கங்களையும், அதில் முக்கியமான ரமலான் மாதத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகியுள்ளது.

ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்வது இஸ்லாமியர்களுக்கு முக்கியமான பொறுப்பு என்பதால், அமீரக அரசாங்கமும் நோன்பு மேற்கொள்ள ஊக்குவிக்கும் வண்ணம் சட்டங்களையும், ஏற்பாடுகளையும் செய்துள்ளது. நோன்பு மேற்கொள்ளும் அன்பர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு வந்திராத வண்ணம் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. நோன்பு மேற்கொள்ளும் நேரமான சூரிய உதயத்தில் முதல் அஸ்தமனம் வரையில் பொது இடங்களில் எந்த உணவோ, தண்ணிர் முதற்கொண்டு எந்த விதமான நீராதரமோ எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சிறைதண்டனைக்கு உள்ளாவார்கள். வருடாவருடம் இந்த விதி தெரியாமலோ, தெரிந்தோ மீறி மாட்டிக்கொள்பவர்கள் தண்டனைக்கு உள்ளாவதைத் செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

பொது இடங்களில் உணவருந்தக் கூடாது என்பதால் பெரும்பாலான உணவகங்கள் மாலையிலேயே திறக்கப்படுகின்றன. சரவணபவன் போன்ற உணவகங்கள் தேவையான உணவை வீட்டிற்கே கொண்டு சேர்த்துவிடுகின்றனர். இந்த சேவையை வழங்க தனி அனுமதி பெற வேண்டியது அவசியம். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் உணவகங்கள் அல்லது துரித உணவகங்கள் தட்டி வைத்து மறைவிடங்களைத் தற்காலிகமாக உருவாக்கி நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு உதவுகிறார்கள்.

நம் ஊரில் எப்படி தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் விற்பனை களைகட்டுகிறதோ, இங்கே ரமலான் மாதமும் விற்பனை களை கட்டியுள்ளது. ஆனால், இங்கே ஒரு வித்தியாசம், வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை, அதிக பயன் கிடைக்க வேண்டும் என்பதே அடிநாதமாகக் காண முடிகிறது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள்,மின்னனுப் பொருட்கள் முதல் கார்கள் வரை அனைத்தும் சலுகை விலையில்!!

தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களும் ரமலானை முன்னிட்டு தனி ஏற்பாடுகளைச் செய்வது கவனிக்கத்தக்கது. நோன்பு மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் அலுவலக நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை குறைக்கின்றனர். நோன்பு மேற்கொள்ளாதவர்களுக்கு இரண்டு நாள் கூடுதல் விடுப்பும் அளிப்பதுண்டு. ஆகவே ரமலான் மாதம் முழுவதும் மதியம் 2:30 முதல் சாலைகளில் வாகன நெருக்கடி ஆரம்பித்துவிடும். 



ரமலான் என்றால் நினைவிற்கு வரும் இன்னொரு விசயம் நோன்பு விருந்து. நோன்பை முடிக்கும் நேரத்தில் அலுவலக ஊழியர்களுக்கு (ஒரு நாள்) ரமலான் நோன்பு விருந்தை ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் தருவதும் வாடிக்கையாக உள்ளது. பகல் நேரத்தில் இழக்கும் வருவாயை இது போன்ற விருந்துகள் மூலம் நட்சத்திர விடுதிகள் மீட்டு விடுகின்றனர். கடந்த ஒரு வாரமாகவே செய்தித்தாள்கள் எங்கும் ரமலான் விருந்தைப் பற்றிய சலுகைகளைப் பார்க்க முடிகிறது. ரமலான் விருந்தில் அரேபிய உணவுகள் தனிச் சிறப்பு மிக்கது. 

இது போன்ற ரமலான் விருந்தை தொழில் நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக அமைப்புகளும், குழுக்களும் அளிக்கின்றனர். சென்ற வருடம் அமீரக வலைப்பதிவர்களுக்கு ஒரு இஃப்தார் விருந்தை அன்பர்கள் அளித்தனர்.  இஸ்லாமிய மதத்தைச் சாராதவர்கள் கூட நோன்பிருப்பதைப் பார்க்க முடியும். இது போன்ற நேரத்தில் சகோதரத்துவம் மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது.  நம்மைச் சுற்றியிருக்கும் பெரும்பாலானோர் நோன்பை மேற்கொண்டிருக்கும் பொழுது நமக்கும் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும் என்ற எண்ணம் தானாக வந்துவிடுகிறது. 

ரமலான் மாதத்தில் எப்படி ஒரு நாடே ஒழுங்குடன், கட்டுப்பாட்டுடன் நடக்கிறது என்ற பிரமிப்பு வராமல் இல்லை. 

அதே சமயம் ரமலான் மாதத்தில் அமீரகத்தில் மக்கள் அனுசரிக்கும் கட்டுப்பாடுகளைப் பார்க்கும் பொழுது நம் நாட்டைப் பற்றி சில எண்ணங்கள் எழுகின்றன..

*அமீரக மக்கள் தொகையில் ஏறத்தாழ இருபது இலட்சம் பேர் இந்தியர்கள். அதில் தோராயமாக நான்கு இலட்சம் பேர் இஸ்லாம் மதத்தைச் சாராத இந்தியர்கள். இந்த 4 இலட்சம் பேர் சக அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுது, நம் நாட்டில் ஏன் இது போன்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க முடிவதில்லை?

* பொது இடங்களில் தண்ணிர் குடிக்காமல் இருக்க முடியுமென்றால், ஏன் பொது இடங்களில் எச்சில் துப்பாமலோ, சிறுநீர் கழிக்காமலோ, புகைப்பிடிக்காமலோ இருக்கமுடிவதில்லை?

* நம் ஊரிலும் வீட்டிலும் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, கிருத்திகை போன்ற நாட்களில் விரதம் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அவர்களை நாம் தூண்டாமலோ, கிண்டல் செய்யாமலோ இருந்திருக்கிறோமா?

இதெற்கெல்லாம் அரசாங்கம் சரியில்லை. சட்டம் சரியில்லை என்று சொல்வதற்கு முன்பு நாம் சரியாக இருக்கிறோமா என்ற எண்ணமே வருகிறது.

Friday, August 6, 2010

நம் திருமண முறை சரியானது தானா?



"செந்தில்... உங்க நாட்டுல கல்யாணத்த ஏற்பாடு பண்ண அமைப்புகள் இருக்கா?"

தேநீர் இடை வேளையின் பொழுது என்னைக் கேட்டார் மைக்கேல். மைக்கேல் என்னுடன் பணியாற்றி வருபவர். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர். அண்மையில் தான் ஹங்கேரியில் இருந்து அமீரகத்திற்கு மாற்றலாகி வந்தவர். இது நாள் வரை இந்தியர்களுடன் பணியாற்றும் வாய்ப்பை அவர் பெறவில்லை. இந்தியாவைப் பற்றியும் பழக்கவழக்கங்களையும் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார். 

அலுவலகத்தில் இருந்த பெரும்பாலானோர் ஏதோ ஒரு கூட்டத்திற்குச் சென்று விட எங்களுக்கு அருகில் இருந்த இருக்கைகள் எல்லாம் காலியாக இருந்தன. ஜன்னல் வழியாகத் தெரிந்த கடலையும், தொலைவில் தெரிந்த கப்பல்களையும் பார்த்த படியே காப்புசினோவைக் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்தக் கேள்வி. இந்தியாவைப் பற்றிய கேள்வி என்றவுடன் கேரளத்தைச் சேர்ந்த ப்ரியாவும் சேர்ந்து கொண்டார். 

"என்னங்க மைக்கேல்.. திடீர்னு இந்தக் கேள்வி?" என்றேன்.

"இல்லை.. நேத்து மோஹித் இந்தியாவுல இருந்து கல்யாணத்த முடிச்சுட்டு வந்தார். அவர் கிட்ட பேசும் பொழுது தெரிஞ்சுக்கிட்டேன்"

"ஓ.. அதுவா விசயம்?"

"ஆமா.. அவரோட மனைவியத் திருமணத் தகவல் மையம் மூலமாத் தான் பார்த்தாராம்"

"ஆமாங்க.. இது இந்தியால வழக்கமான விசயம் தான். ஏன் என்னோட திருமணம் கூட வீட்ல ஏற்பாடு செஞ்சது தான்." என்றேன்.

"என்னோடது கூட வீட்ல பார்த்த திருமணம் தான்" என்றார் ப்ரியா.

"ஓ.. எப்படி? உங்க பார்ட்னர் எப்படிப்பட்டவர்னு தெரியாமா..." என்று தயங்கினார் மைக்கேல்.

"அது அப்படித்தாங்க. காலங்காலமா இப்படித் தான் நடந்துட்டு வருது. எங்க தாத்தா, அப்பா காலத்து வரைக்கும் சொந்தத்துல தான் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால் தெரியாத ஆளக் கட்டுறதுங்கற விசயம் எல்லாம் இல்லை. இப்ப எங்க தலைமுறைல தான் இந்தத் திருமணத் தகவல் மையங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுடுச்சு" என்றேன்.

"ஓஹ்.. எப்படித் தேர்ந்தெடுப்பாங்க"

"உங்கள் சிஸ்டமக் கொஞ்சம் நான் யூஸ் பண்ணிக்கிட்டுமா? உங்களுக்கு சில திருமணத் தகவல் வெப்சைட்களக் காட்டறேன்" 

பிறகு பாரத்மாட்ரிமோனி வலைத்தளத்தைத் திறந்து அதில் உள்ள விசயங்களை எல்லாம் காட்டினேன். ஒரு வரனைத் தேர்வு செய்ய எத்தனை விசயங்களைப் பார்க்கிறோம் என்று காண்பித்தேன். அதில் ஒரு Profileஐப் பார்த்தவர்

"என்னது நோ ஸ்மோக்கர், நோ ட்ரிங்கர் என்றெல்லாம் இருக்கிறது?" என்றார்.

"ஆமாம்.. அது அந்தப் பெண்ணின் கணவராக வரவேண்டியவர் பூர்த்தி செய்ய வேண்டிய விசயங்கள். இன்னும் இந்தப் படிப்பு தான் வேண்டும். இந்த வேலையில் தான் பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் போடுவார்கள்.. இது ஒரு தனி இண்டஸ்ட்ரி" என்றேன்.

"ம்ம்.. வெரி இண்ட்ரஸ்டிங்"

"முதல்ல பிரோஃபைல் மேட்ச் ஆன பிறகு, இரு குடும்பங்களும் பேசி, சந்தித்து, திருப்தியாக இருந்தால் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்"

"ம்ம். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம்"

"உங்கள் நாட்டில் எல்லாம் எப்படி? இது போன்ற பழக்கங்கள் இருக்கா?" என்று கேட்டார் ப்ரியா.

"ஹாஹா.. இல்ல.. எங்க நாட்டுல எல்லாம் லவ் மேரேஜ் மட்டும் தான். அவங்கவங்களே பார்த்துக்குவாங்க"

"ஒரு வேளை, பெண்ணைத் தேடிப்பிடிக்கும் அளவிற்கு திறமையோ, வாய்ப்போ இல்லையென்றால்?" 

"ம்ம்.. அப்படி இருக்கறவங்க கம்மி தான். அவங்க பெரும்பாலும் கல்யாணம் செஞ்சிக்காமத் தான் இருந்துடறாங்க" 

"கல்யாணம் செஞ்சிக்காம இருந்திடக்கூடாதுன்னு தான் இந்தியால பெரியவங்களே அலையன்ஸ் பார்த்திடறாங்க" 

"ம்ம்.. திருமணத்திற்கு முன்பு பேசுக்கொள்வீர்களா? பார்த்துக்கொள்ளும் வாய்ப்பிருக்குமா?" 

"ஹிஹி.. முன்பெல்லாம் ரொம்பக் கம்மியா இருந்தது. கல்யாணத்துக்கு முன்னாடி என் கணவர நான் ஒரு தடவை தான் பார்த்தேன். 15 வருசத்துக்கு முன்னாடி இப்ப மாதிரி செல்போன் வசதியெல்லாம் கிடையாது. அவரு வாரத்துக்கு ரெண்டு நாள் பூத்ல இருந்து கூப்பிடுவாரு. அதோட சரி"

"இப்போ கொஞ்சம் பரவாயில்லை. கொஞ்சம் டைம் இருக்கு. என் எங்கேஜ்மெண்டிற்கும் கல்யாணத்துக்கும் இடையில் நான்கு மாத இடைவெளி இருந்தது. பல முறை பார்த்திருக்கிறோம். தினமும் செல்போனில் பேசிக்கொள்வோம்" என்றேன்.

"ஆனாலும் எப்படி? நாலு மாசம் போன்ல பேசறத வச்சு மனைவியா வரப்போறவரப் புரிஞ்சுக்க முடியுமா? நாங்க நாலு வருசமா பார்த்துப் பேசிப் பழகுனதுக்கு அப்புறம் தான் மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவுக்கு வந்தோம்" என்றார். 

"இந்தக் கேள்வி எங்களுக்கும் இருக்கத்தாங்க செய்யுது. ஆனா என்ன.. பெரும்பாலும் பிரச்சனை ஏதும் வர்றது இல்ல" என்றேன்..

"அப்படி எல்லாம் சொல்லாத செந்தில். காம்பேட்டபிலிட்டி இஸ்யூஸ் வரத்தான் செய்யுது மைக்கேல். என்ன குழந்தைக்காகவோ, வீட்ல ஏதாவது சொல்லுவாங்கன்னோ லைஃப ஓட்டறவங்க நிறைய இருக்காங்க"

"எங்க ஊர்ல எல்லா விசயங்களுமே குடும்ப உறவுகளோட இணைந்தே பார்க்கப் படும். அதனாலேயே பிரச்சனைகள் வந்தாலும், உறவினர்கள் தீர்த்துவிட்டுருவாங்க. பெருசா பிணைப்பு இல்லாதவங்க டைவர்ஸ் வரைக்கும் போறதும் உண்டு. டைவர்ஸ் வரைக்கும் போறதுல லைவ் மேரேஜ் பண்றவங்களும் இருக்கத்தானே செய்யறாங்க?" என்றேன்.

"யா...யா..  லவ் மேரேஜ் செய்யறவங்களும் டைவர்ஸ் செய்யறவங்க இருக்கத்தான் செய்யறாங்க. இப்பல்லாம், கல்யாணம் செஞ்சுக்காமயே சேர்ந்து வாழ்றவங்களும் அதிகமாயிட்டே போகுது. என்னோட ஹங்கேரி கொல்லீக்ஸ் நிறையப் பேரு இந்த மாதிரி இருக்காங்க.."

"லிவிங்க்-டு-கெதர்.. ஸ்லோவா.. இந்தியால பிக்-அப் ஆயிட்டு இருக்கு.. ஆனா நாட்-டு-த லெவல் ஆஃப் ஈரோப்.."என்று ப்ரியா சொல்ல கூட்டத்திற்குச் சென்ற அலுவலக நண்பர்கள் அனைவரும் வர ஆரம்பித்தனர். அவரவர் இருக்கைகளுக்கு வர ஆரம்பிக்க எங்கள் பேச்சு துண்டிக்க ஆரம்பித்தது. ஒரு சிறிய அமைதிக்குப் பிறகு

"ம்ம்... ஒவ்வொரு நாட்டுலயும் ஒவ்வொரு மாதிரி பழக்கங்கள். எனக்கு இந்தியாவப் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆர்வம். இன்னிக்கு ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மாட்ரிமோனி சைட்ட என் மனைவி கிட்ட காட்டணும்" என்றார் மைக்கேல்.

"ஹாஹா.. அதக் காட்டப் போய் நெட்ல பொண்ணப் பாக்கிறியானு கேட்கப் போறாங்க.. டேக் கேர்"

"குட் பாயிண்ட் ப்ரியா. எனிவே.. தாங்க்ஸ் பட்டீஸ்.."

"இட்ஸ்.. ஓகே.. மைக்"

"சியா"

ஒவ்வொரு நாட்டினர்க்கும், மொழியினர்க்கும், மதத்தினர்க்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள். அவரவர்க்கு அந்தந்த பழக்கவழக்கங்கள் மீது அதிக பற்று, அதிக ஈடுபாடு இருக்கத்தான் செய்கிறது.  பிற நாட்டினரிடம் பேசும்பொழுது அவரவர் தரப்பு கருத்துகள் வெளியாவதுடன், அவர்களது பழக்கங்களுக்கான நியாயங்களும் புரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நம் பழக்கவழக்கங்கள் சரியானது தானா என்ற கேள்வியும் மனதில் எழுகின்றன.

இந்தியாவில் பணியாற்றிய வரை மற்ற நாட்டினருடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கே அமீரகத்திற்கு வந்த பிறகு பல நாடுகளைச் சேர்ந்தவர்களுடனும் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது, பல விசயங்களையும் யோசிக்க உதவுகிறது. 

"நம் திருமண முறை சரியானது தானா? என்ற கேள்வி உங்களுக்கு எப்பொழுதாவது வந்துள்ளதா?"

Thursday, August 5, 2010

களவாணி - சிரித்து மகிழ அருமையான படம்!!


இப்படி ஒரு படத்தைப் பார்த்து எத்தனை வருடங்களாகின்றன!! என்ன தான் 'கருத்து கந்தசாமி'ப் படங்களையும் உலகப் படங்களையும் பார்த்துச் சிலாகித்தாலும், திரும்பத் திரும்பப் பார்க்கத் தோன்றுவது என்னவோ நல்ல நகைச்சுவைப் படங்களையும், எதார்த்தமான கதாப்பாத்திரங்களைக் கொண்ட படங்களையும் தான்.

அந்த வரிசையில் நான் அதிகமாகப் பார்த்த படங்களுள் ஆண்பாவம், இன்று போய் நாளை வா, தில்லு முல்லு, மைக்கேல் மதன காமராஜன், சதிலீலாவதி, பஞ்சதந்திரம், கரகாட்டக்காரன், உன்னாலே உன்னாலே, மைடியர் மார்த்தாண்டன், வின்னர், பம்மல் கே சம்பந்தம், காதலிக்க நேரமில்லை போன்றவை குறிப்பிடத்தக்கவை. இங்கே குறிப்பிட்ட பெரும்பாலான படங்களைப் பார்க்கும் இரண்டு மணி நேரம் எதைப் பற்றிய சிந்தனையையும் ஏற்படுத்தாமல் சிரிப்பு அல்லது பொழுதுபோக்கு என்று நகர்ந்துவிடும்.

அந்த வரிசையில் கண்டிப்பாக களவாணியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கிராமங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் என்றால் வார்த்தைக்கு வார்த்தை  வலிந்து திணிக்கப்படும் 'ங்க' போட்டு பேசப்படும் கொங்குமண்டல வட்டார வழக்கு அல்லது 'ய்ய்ங்ஙே' போட்டுப் பேசப்படும் மதுரை வட்டார வழக்கிற்கு மாறாக, இப்படத்தின் வசனங்களில் தஞ்சை மண்ணின் வாசம் வீசுவது இதமாக இருக்கிறது.  பேச்சு வழக்கில் மட்டுமல்லாமல் படப்பிடிப்பும் தஞ்சை மண்ணிலே என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. எங்கும் பச்சைப் பசேல் புல்வெளிகள், வாய்க்கால் வரப்பு, அப்பகுதிகளில் பார்க்க முடியும் கிராம வீடுகள், குளங்கள் என்று பசுமையாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

+12ம் வகுப்பை முடிக்காத கதாநாயகன் (விமல்), துபாயில் இருந்து தந்தை அனுப்பும் பணத்தைத் தாயிடம் (சரண்யா) மிரட்டி, ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் களவாணித் தனம் தான் படத்தின் கதை. களவாணித் தனத்தின் இடையில் பள்ளிச் செல்லும் கதாநாயகியிடம் (ஓவியா) காதல், விமல் கும்பல் "பிள்ளையாரைத்" திருடியதால் ஏற்பட்ட ஊர்ப்பகை, ஒவ்வொரு காட்சியிலும் இழையோடும் நகைச்சுவை என்று சுவையாகப் படமெடுத்திருக்கிறார்கள்.

'காசு கொடுக்கிறியா.. இல்ல டிவிய உடைச்சிடும்மா' என்று ஆரம்பிக்கிறது அறிக்கியின் (விமல்) அறிமுகக் காட்சி. பிறகு பேருந்து நிறுத்தத்தில் நிற்கும்  பேருந்தில், கடைசி சீட்டில் இருக்கும் பெண்ணைக் கண்ணடித்துச் செய்கை காட்டி, முன் சீட்டில் இருக்கும் பெண்ணிற்கும் சிக்னல் கொடுக்கும் காட்சி என்று கலக்கலான ஓப்பனிங்!! இயல்பான கிராமத்து வெட்டிப்பயலாகக் கன கச்சிதமாகப் பொருந்துகிறார் விமல். யமஹா RX100ஐ ஓட்டும் வாகு, நண்பர்களுடன் செய்யும் அடாவடித்தனம் என்று பள்ளிக்கால நண்பர்கள் சிலரை நினைவூட்டுகிறார்.

*

'என்னடா வண்டிய நிறுத்திட்ட' என்று மொபட்டை ஓட்டி வந்தவரிடம் கஞ்சா கருப்பு கேட்க..
'நீ செத்துட்டேனு தான் மாமா கார்ல சொல்லீட்டுப் போறானுக. அதத்தான் பார்க்கிறேன்'

'அடப்பாவிகளா.. போன தடவை பாலிடாலக் குடிச்சேன்னு அட்டுழியம் பண்ணுனானுக.. இந்தத் தடவை இப்படியா..' என்று கஞ்சா கருப்பு வரும் இடமெல்லாம் கண்ணில் நீர் வரும்படி சிரிப்பு வருகிறது. கஞ்சாக் கருப்புவிற்கு இந்தப் படம் ஒரு 'மைல்கல்'

*

"நான், அவன் ஏதோ கம்ப்யூட்டர் படிக்கிறான்னு லேப்டாப்பெல்லாம் வாங்கீட்டு வர்றேன்.. நீ அவன் வயல்ல பொறுப்பா மாடு மேய்க்கப் போறான்னு பெருமைப் படற?" என்று விமலின் தந்தை (இளவரசு) கேட்க..

'நீங்க வேணா பாருங்க.. இந்த ஆனி போய் ஆடி போய் ஆவணி வரட்டிம்,.. அவன் டாப்பா' வந்திருவான்னு ஜோசியர் சொல்லியிருக்கார் என கூறும் சரண்யா.. அப்படியே அப்பாவி அம்மா..

கதாநாயகி ஓவியா, வில்லனாக வருபவர், விமலின் நண்பர்கள் அன அனைவரும் அவரவர் பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

*

'சின்னச் சின்னத் தூரல் வந்து' என்று தொடங்கும் பாடல்.. ஹிட் வரிசையில்!! திரும்பத் திரும்ப ஒலி/ஒளிபரப்பினால் இந்தப் பாடலில் வரும் 'டம்ம டும்ம டமடம டும்மா டம்ம டும்ம டமடம டும்மா' என்று வரும் வரிகளைக் குழந்தைகள் திரும்பத் திரும்பப் பாடினால் வியப்பில்லை!! மற்ற பாடல்கள் பெரிதாகச் சொல்லும் படியாக இல்லாவிட்டாலும் கிராமத்து வாசமடிப்பது இதமாக இருக்கிறது.

*

பெரிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பெரிய பட்ஜட், கத்தி குத்து, இரத்தம், பறந்து பறந்து போடும் சண்டை  எல்லாம் இல்லாமல்  இதமான கிராமத்துப் படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குனர் சற்குணத்தைப் பாராட்டலாம்.

*

பள்ளிக்குச் செல்லும் பெண்ணை வெட்டிப் பயல் காதலிப்பதாக வரும் படத்தை ஆகா ஓஹோ வென்று விமர்சிப்பது சரியா? என்ற கேள்வி எழலாம். 'நம்ம ஊர்ல சினிமாவப் பார்த்துத் தான் எல்லாம் நடக்கனும்னா இந்நேரம் ஒரு ஊழல் அரசியல்வாதியும் சாலைல நடமாட முடியாது'. சினிமாவைச் சினிமாவாகப் பார்க்கச் சொல்லிக்கொடுத்தாலே யாரும் இது போன்ற படங்களால் கெட்டுப் போக மாட்டார்கள்.


ஆகவே.. இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ அருமையான படம் களவாணி. நகைச்சுவைப் படங்களைக் கலேக்ஷனில் சேர்க்க வேண்டும் என்பவர்கள் களவாணியைத் தவிர விடக்கூடாது.

 களவாணி - டம்ம டும்ம டமடம டும்மா!!

Tuesday, August 3, 2010

வந்தவழியும் குலதெய்வமும்!!

உங்கள் குலதெய்வக் கோயிலிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்? உங்கள் குலதெய்வக் கோயில் எத்தனை வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதென்று தெரியுமா? உங்கள் பங்காளிகள் எத்தனை பேரைத் தெரியும்?


இது போன்ற கேள்விகளை நண்பர்களிடம் கேட்கும் பொழுது பெரும்பாலானோர் "என்னடா தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்பது போன்ற பார்வையைத் தான் பதிலாகத் தருகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வளர்ந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் வாழ்நாளில் ஓரிரு முறை குலதெய்வக் கோயிலிற்கு சென்றிருப்பதே அரிது எனலாம். அதே சமயம் கிராமப்புறங்களில் வளர்ந்து வந்த நண்பர்களோ பலமுறை சென்றிருப்பதை அறிய முடிகிறது.




குலதெய்வத்திற்கும் நாம் வந்தவழிக்கும் பெரிய தொடர்பிருப்பதாலேயே குலதெய்வத்தைப் பற்றி ஒரு பதிவிடுகிறேன். நாம் எந்த நகரில் வாழ்ந்தாலும் பெரிய பதவிகளை வகித்தாலும் வந்த வழியை மறக்கக் கூடாது என்பதையே இந்தப் பதிவில் மையப் பொருள்.

நம் ஓட்டன் (பூட்டன் தந்தை), பூட்டன்(பாட்டன் தந்தை), பாட்டன் முதற்கொண்டு நம் முந்தைய தலைமுறையினர் வரை ஒரு இடத்தை, மண்ணை மிதித்திருப்போம் என்றால் அது குலதெய்வக் கோயிலைத் தவிர வேறு எதுவாக இருக்கும்? நம் குலதெய்வக் கோயில் அமைந்திருக்கும் இடம், பகுதியை வைத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் என்னென்ன தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள், எப்படிப் பட்ட பழக்கவழக்கத்தைக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ற வரலாறெல்லாம் அறிய முடிந்தால் நல்லது தானே?



எங்கள் முன்னோர்கள் கோவை அருகே சூலூரில், நொய்யல் ஆற்றங்கரையில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். பிறகு தாத்தாவின் தந்தையின் காலத்தில் பீடித் தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் தொழிலில் ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க முடியாமல் வேறு சில சிறு தொழில்களைச் செய்து வந்திருக்கின்றனர். பின்பு என் தாத்தாவின் காலத்தில் கோவையில் பஞ்சாலைகளில் பணியாற்றி வந்திருக்கின்றனர். பிறகு என் தந்தையின் வேலை காரணமாக உடுமலைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது என் முன்னோரின் வரலாறு. 

இரண்டு மூன்று தலைமுறையினர் வரை நொய்யல் நதியையே நம்பி விவசாயம் செய்து வந்திருந்த எங்கள் முன்னோர்கள், காலப்போக்கில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களால் வெவ்வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்து பின்பு இடமும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கோவையின் பழைய ஊர்களான வெள்ளலூர், சூலூர், பேரூர், சிங்கநல்லூர் போன்ற ஊர்கள் எல்லாம் நொய்யல் நதியின் கரையிலேயே அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது போலவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும். அதனைத் தேடிப் படிப்பது நாம் வந்தவழியைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையானது.

அனைவரும் வெவ்வேறு நாடுகளிலும் ஊர்களிலும் வாழ ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏன் குலதெய்வம் முன்னோர் என்றெல்லாம் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை.

நம் முன்னோரைப் பற்றி அறிய முற்படும் பொழுது அவர்களது வாழ்வியலில் உள்ள சிறப்புகள், முன்னோர் செய்த தவறுகள், அவர்கள் கண்ட வெற்றிகள் என்றெல்லாம் அறிய முடியும். நம் முன்னோரைப் பற்றி யோசிப்பதற்கு குலதெய்வக் கோயிலை விட சிறந்த இடம் இருக்க முடியுமா? நம் முன்னோரின் வாழ்வியல் முறை சிறப்பானதாக இல்லாவிட்டாலும் நாம் இன்று வந்திருக்கும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமே. நாம் நம் முன்னோரை விட நல்ல நிலைக்கு வந்திருந்தால் அவர்களுக்கு நன்றி கூறி, ஆசி பெறலாமே!!



இன்றும் எங்கள் குலதெய்வக் கோவிலிற்குச் செல்லும் பொழுது "இக்கோயில் 1700களில் கட்டப்பட்டது" என்ற வாக்கியத்தைப் படிக்கும் பொழுது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். ஆம், என் முன்னோர் முந்நூறு ஆண்டுகளாக அந்த இடத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது பெருமிதம் தானே?

"நான் நாத்திகன், இந்த குலதெய்வ வழிபாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறுபவராக இருந்தாலும் பரவாயில்லை!!  வருடத்திற்கு ஒரு முறை நம் முன்னோர் பல்லாண்டுகளாக கால் பதித்த இடத்தை தொட்டுப்பாருங்கள்!! 

நான் வசிப்பதில் அமெரிக்காவில், ஐரோப்பாவில், சென்னையில்.. அங்கே சென்று வர நேரமில்லை என்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது தாய்நாட்டிற்குச் செல்லும் பொழுதோ, குலதெய்வ விழா எடுக்கும் நாளன்றோ சென்று வாருங்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா? என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.

நம் அடுத்த சந்ததியினர்க்கு என்னென்ன விசயங்களைத் தரப்போகிறோம்?

நல்ல கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் வீடு நிலம் என சொத்துகள்!! 

அவர்கள் வந்த வழி என்ன என்பதைத் தர வேண்டாமா? அதைக் குலதெய்வக் கோவிலில் இருந்து துவங்கிப் பாருங்களேன்!! 

*

Related Posts with Thumbnails