ஹெலன் கெல்லரைப் பற்றிய பாடத்தை பள்ளி நாட்களில் படித்ததுண்டு. பிறந்த சில மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் இருளில் மூழ்கியிருந்த ஹெலர் கெல்லரிற்கு ஒளி கிடைத்தது ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரின் உதவியால்!!
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையை கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்று, பிறகு பட்டமும் பெற்றது வரலாறு.
o
ஹெலன் கெல்லரின் வாழ்க்கையின் சில பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்ட படம் தான் ப்ளாக் (BLACK).
சஞ்சை லீலா பன்சாலியின் இயக்கத்தில் கண்பார்வை தெரியாத பெண் 'மிச்செல்'லாக ராணி முகர்ஜி, ஆசிரியர் தேப்ராஜ் சஹாயாக அமிதாப் பச்சனும் அருமையாக நடிக்க, ரவி.கே.சந்திரன் வரைந்த ஒளி ஓவியம்!!
மிச்செல், கண் பார்வை, காது கேட்கும் - வாய் பேசும் திறன் இல்லாததை அறியும் தந்தையால் உதாசீனப்படுத்தப்படுகிறார். ஒலி, ஒளி எதையுமே உணரவோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ முடியாத மிச்செல் முரட்டுத்தனமாக நடக்கிறார், ஆசிரியர் சஹாயைச் சந்திக்கும் வரை!! அதன் பிறகு சஹாயின் பயிற்சியில் எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், படிக்கவும் கற்கிறார் என்பது தான் ப்ளாக் படத்தின் சுருக்கம்!!
மிச்செல் போல மாற்றுத்திறன் கொண்டவர்கள் எப்படி படிப்பார்கள்? அவர்கள் என்னென்ன பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? என்றெல்லாம் சில ஆசிரமங்களுக்குச் சென்ற போது யோசித்ததுண்டு. ஆனால், மிச்செல் போன்ற மாற்றுத்திறன் கொண்டவர்களின் பிரச்சனைகளைத் துல்லியமாக ஆய்கிறது இந்தப் படம்!!
"இவ்வளவு சிரமங்கள் எதற்கு? கண்தெரியாத, காதுகேட்காத குழந்தைகளுக்கான ஆசிரமத்தில் சேர்த்துவிடலாம்" என்று பேசப்படும் ஒரு இடத்தில் சஹாய் கேட்கிறார், "அங்கு எதற்கு? கூடையும் பாயும் முடையக் கற்றுக் கொள்ளவா? அங்கு பட்டதாரியாகும் அவளின் கனவை நனவாக்க முடியுமா"?என்று. சஹாயின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ப்ளாக் படத்தில் மிச்செலின் பெற்றோர் வசதி படைத்தவர்கள். ஆனால், நம் சமூகத்தில் இது போன்ற திறன் உள்ளவர்களின் பெற்றோர்??
இந்தப் படத்தில் மிச்செலின் கல்லூரியில் பி.ஏ. படிப்பிற்குத் தேவையான பாடங்களை பிரெயில் முறையில் தயார் செய்து தருவார் ஆசிரியர். மிச்செலும் தன் பாடங்களைப் பேசவும் படக்கவும் தெரிந்த மாணவர்களுடன் படிப்பார். கல்லூரியில் விரைவுரையாளர் பாடம் எடுக்கும் பொழுது சஹாய் அருகில் அமர்ந்து மிச்செலிற்கு விளக்குவார். நம் சமூகத்தில்??
பல வருடங்கள் அதே கல்லூரியில் படித்துவிட்டுப் பட்டம் வாங்குமிடத்தில், மிச்செலுடன் நமக்கும் பெரிமிதம் வந்துவிடுகிறது படம் பார்க்கையில். பல வருடங்களாக மிச்செலுடனேயே பயணிக்கும் சஹாய்க்கு அல்ஜெய்மெர் நோய் தாக்குகிறது. ஆரம்பத்தில் தன்னைக் கட்டியது போல சங்கிலியால் சஹாயையும் கட்டியிருப்பதை உணரும் மிச்செல் கதறும் இடத்தில் நம் மனமும் கசிகிறது. தள்ளாத வயதில் நோய்வாய்ப்பட்டிருக்கும் சஹாயிடம் "தான் பட்டம் பெற்றதைத்" தன் மொழியிலேயே காட்டுவது அழகு!!
கடைசியில் சஹாயை அறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று மழையில் நனையவிடும் இடத்தில் புல்லரிப்பை உணர முடியும்!!
o
அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் - ப்ளாக் (BLACK), மாற்றுத் திறன் உள்ளவர்களைப் புரிந்துகொள்ளவும், எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது என்பதை உணரவும்!!. இதோ ஹெலன் கெல்லரின் வார்த்தைகள்..
They took away what should have been my eyes
But I remembered Milton's Paradise
They took away what should have been my ears,
Beethoven came and wiped away my tears
They took away what should have been my tongue,
But I had talked with God when I was young
He would not let them take away my soul -
Possessing that, I still possess the whole.
-Helen Keller
o
6 comments:
மொழிபுரியாமல் பார்த்து, கண்கள் நீர் மல்கிய பிறமொழிப்படங்களில் "ப்ளாக்" முதன்மையானது. அமிதாப் பச்சன் என்றால் யாரென்று நான் புரிந்து கொண்டது அன்றுதான். அருமையான பதிவு!
I also loved Black till I saw the movie The Miracle Worker. The Miracle Worker was also a film based on Helen Keller. They took a very small portion on how the teacher struggles to convey the meaning of the words to the blind. It is just a great movie. Compared to that, Black is more watered down version
Yes, it is an inspirational movie. :-)
இன்று அரிமா சங்கங்கள் கண்ணொளிக்கு பாடுபடுவதற்கெ ஹெலன் கெல்லரின் வேண்டுகோள்தான் காரணம்..
பிளாக் மிக நேர்த்தியான பகிர்தல்
இதுவே சிறந்த பார்வை...
தாங்கள் ‘நம் சமூகத்தில்??’ என்று கேட்குமிடங்களில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணரமுடிகிறது. படம் இனிமேல்தான் பார்க்கவேண்டும்...
பகிர்விற்கு நன்றி...
ஹெலன் கெல்லர்
எனக்குத் தெரியாத பல தகவல்களை அறிந்துகொண்டேன் .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
Post a Comment