சொனாலி! பிரபலமான சூப்பர் மாடல்! ஒரு ஃபேஸன் ஷோவில் ஒய்யாரமாக (பூனை நடை) நடந்து வரும் பொழுது மேலாடை நழுவி விடுகிறது. ஃபேஸன் உலகின் ராணியின் ஆடை நழுவிய காட்சியைப் புகைப்படக்காரர்கள் குதூகலமாகப் படம் பிடிக்கின்றனர். தன் உடை நழுவியதைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் தன் வேலையை (நடந்து) முடிக்கிறார் சொனாலி. சொனாலியுடன் நடப்பவர்கள் அனைவரும் முகத்தில் சிறிதும் உணர்ச்சியற்று நிற்கிறார்கள் தங்கள் (நடை) முறைக்காக!!
எப்படி நடந்தது? ஏன் நடந்தது? "சொனாலியின் மேலாடை நழுவிவிட்டது" என்று எங்கும் பரபரப்பு!!
"ஐயோ.. என் ஷோ இப்படிப் பாழாகிவிட்டதே! இனி யார் என் நிறுவனத்திடம் ஃபேஸன் ஷோவை ஒப்பந்தம் செய்வார்கள்?" என்று கதறுகிறார் நிறுவனத் தலைவர். ஊடகங்களுக்கு செமத்தியான தீனி கிடைத்துவிடுகிறது. பெண்களின் உடலை மூலதனமாகக் கொண்டு காட்டப்படும் எந்த நிகழ்ச்சிகளுக்கும், செய்திகளுக்கும் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் தானே அவர்கள்!! சொனாலி என்ன ஆனாள் என்பது முக்கியமல்ல.
கிரீன் ரூம் என்று அழைக்கப்படுகிற மேக்-அப் ரூம் வரும் வரை உறைந்து போனவர், "உனக்கு ஒன்னுமில்லை சொனாலி" என்று சொல்லி பிறகு, "ஓ"வென அழ ஆரம்பிக்கிறார்.
o
சொனாலியின் இடத்தில் மேக்னாவை நியமிக்கிறது "பனாச்" என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம்.
சண்டிகரைச் சார்ந்த மேக்னாவிற்கு சூப்பர் மாடல் ஆக வேண்டும் என்ற ஆசை. தன் ஆசையைப் பெற்றோரிடம் கூறத் தந்தை மறுக்கிறார். வீட்டை விட்டு வெளியேறும் மேக்னா, மும்பைக்கு வந்து ஆரம்பத்தில் துன்பங்களை அனுபவித்து ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ள ஆரம்பிக்கிறார். தான் சேரும் நிறுவனத்தில் சொனாலி சூப்பர் மாடலாக இருக்கிறார்.புகழ், புகை, மது மற்றும் போதைப்பழக்கம் தந்த மயக்கமும் சேர்ந்து கொள்ள திமிரின் உச்சத்தில் திளைக்கிறார் சொனாலி!! அவரது திமிரே அவரிற்கு எதிரியாக மாற, சொனாலியின் இடத்தைப் பிடிக்க வேண்டுமென்ற கனவு நனவாகிறது, மேக்னாவிற்கு!!
அதற்காக மேக்னா கொடுக்கும் விலை அதிர வைக்கிறது. தன்னுடன் சேர்ந்து வாழும் (Living Together) ராகுலை விட்டுப் பிரிய நேர்கிறது. "பனாச்" நிறுவனத் தலைவர் அபிஜித்துடன் ஒத்துழைத்ததால் கற்பமாகிறார் மேக்னா. ஆனால், பனாச் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் மூன்று வருடத்திற்குக் கற்பமாகவோ, திருமணமோ செய்து கொள்ளக்கூடாது என்றிருக்கிறது. ஒப்பந்தத்தைப் படிக்காமல் கையெழுத்துப்போட்டதை நினைத்துத் தன்னையே வெறுக்கிறார் மேக்னா.
ஒரு கட்டத்தில், சொனாலியைப் போலவே மேக்னாவும் குடிபோதைக்கு அடிமையாகிறார். குடி போதையில் காரை ஓட்டிச் சென்று காவல்துறையினருடன் மாட்டிக்கொள்கிறார். இந்த விசயம், ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானதில் இருந்து மேக்னாவின் சரிவு ஆரம்பமாகிறது.விரக்தியின் உச்சியில் தன்னையே மறக்குமளவிற்கு போதையேற்றிவிட்டு டிஸ்கோவிற்குச் செல்கிறார். அங்கே, தனக்கு அறிமுகம் ஆகாத கறுப்பினத்தவர் ஒருவருடன் நடனமாடுகிறார்.
காலையில் போதை தெளிகிறது. ஏதோ ஒரு மூன்றாம் தர ஓட்டலில் இருப்பது புரிகிறது. உடலில் ஆடைகள் இல்லை. அருகில் திரும்பிப்பார்த்தால் தனக்கு அறிமுகமே இல்லாத அந்த மனிதர்!! மேக்னாவுடன் ஆரம்பித்தில் இருந்து பயனிக்கும் நம்மை உறைய வைக்கும் காட்சியிது.
"ஆரம்பத்தில் எல்லாமே நன்றாகத் தான் இருக்கும். போகப் போக எல்லாமே மாறிவிடும்"(Shuru Mein Sab acchaa laga.. dheere dheere sab padhal saktha hey) என்று தன் இடத்திற்கு மேக்னாவை நியமனம் செய்த பொழுது சொனாலி கூறிய வார்த்தைகள் ஒலிக்கிறது.
பனாச் நிறுவனத்தின் ஒப்பந்தத்தைத் ரத்து செய்துவிட்டு ஊருக்குத் திரும்ப, தங்கள் மகளை அரவணைக்கின்றனர் பெற்றோர். பெற்றோரின் கவனிப்பில் மனதில் ஏற்பட்ட காயங்கள் மறைகிறது. இந்த முறை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன்.. மும்பை திரும்புகிறார்.
o
"பிரபல மாடல் சொனாலி ரோட்டில் கிடக்கிறார்" என்று சொனாலியைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்து சொனாலியைக் காப்பாற்றுகிறார் மேக்னா. இருவரும் நல்ல தோழிகளாகின்றனர். பாரிஸ் நகரின் முக்கிய நிறுவனமொன்றின் ஃபேஸன் ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது மேக்னாவிற்கு. ஃபேஸன் ஷோ நடப்பதற்கு முந்தைய நாள் மேக்னா காணாமல் போகிறார். என்ன ஆனார் சொனாலி? மேக்னா சூப்பர் மாடல் ஆனாரா?
o
சொனாலியாக கங்கனா ரவுத். (தாம் தூமில் துக்கடாவென வந்து செல்வார்). புகழின் உச்சியில் இருக்கும் பொழுது இருக்கும் திமிர், அடாவடித்தனம், துயரம், இயலாமை என எல்லா உணர்ச்சிகளையும் அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். மேக்னாவாக பிரியங்கா சோப்ரா. "இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா? நடிப்பதற்கு?" அசத்தியிருக்கிறார். இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது சரியானதே!!
o
கல்லூரிக்காலங்களில் தான் "ஃபேஸன் ஷோ"க்கள் அறிமுகமானது எனக்கு. வெவ்வேறு கல்லூரிகளின் பெண்கள் விதவிடமான உடைகளை அணிந்து ஒய்யார நடை நடப்பார்கள். அது போன்ற நிகழ்ச்சிகளில் ஆடைகளை (என்னையும் சேர்த்து) எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்பது சந்தேகமே!! அதே கல்லூரிக் காலத்தில் எஃப்.டி.வி. வர ஆரம்பித்தது. யார் வருகிறார்கள், என்ன உடையணிந்திருக்கிறார்கள் என்றெல்லாம் கவலையே இல்லாமல் எங்கள் டி.வி.ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும் எஃப்.டி.வி!! அப்பொழுதெல்லாம்.. ஃபேஸன் உலகிற்குப் பின்னால் இப்படி ஒரு கோரமான முகம் இருப்பது தெரியாது.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி ஆனதில் இருந்து மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, நகரம், தெரு என எங்கும் அழகிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகள் வர ஆரம்பித்துவிட்டன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கிடைக்கும் புகழ் சிலரை ஃபேஸன் உலகிற்குச் செல்ல ஊக்குவிக்கலாம். அது போன்றவர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பது நல்லது!! பளபளப்பிற்குப் பின்னால் உள்ள ஒரு உலகம் நம் கண் முன்னே "ஃபேஸன்" திரைப்படத்தில்!!
போட்டி, பொறாமை, கயமை, கற்பைப் பறிக்கக் காத்திருக்கும் பருந்துகள், மன உளைச்சல் என்று எதையும் விட்டுவைக்காமல்.. சிறப்பான படத்தை எடுத்திருக்கிறார் மதுர் பண்டார்கர்!! இவரது படங்கள் உண்மைக்கு மிக அருகில் பயணிப்பவை!!
o
எந்த ஒரு இடத்திற்கு வருவதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவே ஃபேஸன், சினிமா போன்ற உலகமென்றால் கொடுக்க வேண்டியிருக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்பதே சுடும் உண்மை!! ஃபேஸன் உலகைக் கவர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்து வருபவர்கள்... இந்தப் படத்தைப் பார்த்தால் மாற்ற வேண்டியதிருக்கும்!!
o
19 comments:
Since I don't understand Hindi, I have missed many good Hindi movies. But I watched this movie with English sub-titles, on my way to India (Emirates Airlines). The movie had a slow-start but slowly involves you with its strong and daring theme. Your review is very nice. Thank you for the blog post.
நண்பர்கள் வற்புறுத்தி அழைத்துச் சென்ற படங்களில் இதுவும் ஒன்று. எதுவும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்தாலும் ஹிந்திப்படங்கள் குறித்த எனது பொத்தம் பொதுவான கருத்தை மாற்றியமைத்த படங்களில் இதுவும் ஒன்று. நுணுக்கமான அலசல்!
Interesting - Liked the narration! Thanx for sharing!
இன்னும் இந்த படம் பார்க்கவில்லை செந்தில். உங்கள் விமர்சனம் படம பார்க்க தூண்டுகிறது.
வாங்கி பார்க்காமல் வைத்திருக்கும் படங்களின் இதுவும் ஒன்று. இன்றே பார்க்கிறேன் செந்தில்.
வெளியுலகில் பகட்டாய் சிரித்து மகிழ்வாய் காட்டிக்கொள்பவர்கள் மறுபக்கத்தில் எப்படி இருப்பார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை...
நன்கு அலசி எழுதியிருக்கிறீர்கள்...
தொடருங்கள்...
பிரபாகர்...
செந்தில்
மிக நேர்த்தியான, ஆழமான பகிர்வு
படம் பார்த்த திருப்தியும், பார்க்கத் தூண்டும் ஆவலும் ஒன்றாக
சென்ற முறை ஊருக்குச்சென்ற போது ஒரிஜினல் டிவிடி வாங்கி வீட்ல பார்த்துக்கிட்டிருந்தேன். அப்பா இந்த படத்த பார்ப்பதற்கு தன்னோட எதிர்ப்ப தெரிவிச்சாங்க. காரணம் அந்தப் படத்தினுடைய விளம்பர காட்சிகள்.
அம்மாவும் கேட்டாங்க, படம் ஆபாசமா இருக்காதுன்னுட்டு என் அண்ணனும் என்னோட சேர்ந்து பார்த்தார். அலங்கார உலகின் பின்பக்கத்தையும், அதன் கொடூற எல்லைகளையும் கொஞ்சம் தான் காட்டியிருப்பாங்க. உண்மை இன்னும் கொடுமையானதாகத்தான் இருக்கும்.
முடிஞ்சா LUCK BY CHANCE பாருங்க. இதுவும் நல்லாயிருக்கும்.
அருமையான படம். அதற்கேற்ற விமர்சனம். இந்த படத்தின் இயக்குனரோட எல்லா படமும் ஒரு வித பாதிப்பை ஏற்படத்தக்கூடியவை தான் செந்தில். டைம் கிடைக்கும் போது பேஜ்3, டிராபிக் சிக்னல் கூட பாருங்க. அருமையா இருக்கும்
///////எந்த ஒரு இடத்திற்கு வருவதற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது அனைவரும் அறிந்ததே. அதுவே ஃபேஸன், சினிமா போன்ற உலகமென்றால் கொடுக்க வேண்டியிருக்கும் விலை கொஞ்சம் அதிகம் என்பதே சுடும் உண்மை!! ஃபேஸன் உலகைக் கவர்ச்சி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்து வருபவர்கள்... இந்தப் படத்தைப் பார்த்தால் மாற்ற வேண்டியதிருக்கும்!!//////
நல்லவேளைக்கு முன்னாடியே சொன்னீங்க . இனி அந்த பக்கமே போக மாட்டோம்ல .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
என்னை மிகவும் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று.. இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் அழகாக வடித்திருப்பார்.. படம் பார்த்த பின் ஒரு வாரம் வரை அதன் தாக்கம் இருந்தது..
சிறு குறை என்னவென்றால், படத்தில் ஹீரோ(??) ஒருவரை மட்டும் தான் முழு ஆணாக காட்டியிருப்பார்.. அத்தோடு, தேவையற்ற ஃபேசன் ஷோஸ் நிறைய.. அவற்றை ஒதுக்கினால், மிகவும் அருமையான படம்...
@நான் ஆதவன்
என்னங்க சார், corporate-ஐ விட்டுட்டீங்களே.. வசூல் அதிகம் இல்லை என்றாலும் அதுவும் ஒரு முத்திரை பதித்த அருமையான படம்..
உங்கள் விமர்சனம் வாசித்ததும் படம் பார்க்கும் ஆவல் எழுகிறது. பகிர்வுக்கு நன்றி.
@@ சித்ரா,
மிக்க நன்றிங்க.
@@ சேட்டைக்காரன்,
நன்றிங்க நண்பரே.
@@ சந்தனமுல்லை,
நன்றிங்க
@@ கண்ணா,
நன்றிங்க. தவறாமல் பாருங்க.
@@ பிரபாகர்,
நன்றிங்க
@@ கதிர்,
நன்றிங்க
@@ ஜீவன் பென்னி,
நன்றிங்க. கண்டிப்பா பார்க்கிறேன்.
@@ ஆதவன்,
நீங்கள் கூறியுள்ள படங்களும் அருமையானவை.
@@ சங்கர்,
ஓ.. படம் பார்க்கப் போறதில்லைன்னு சொல்றீஙளா? :))
@@ அனு,
நீங்க சொல்றது சரி தாங்க.
கார்ப்பரேட் அருமையான படம்.
@@ சரவணக்குமார்,
நன்றிங்க நண்பரே.
நானும் பார்த்தேன் இந்தப் படம். ஊடகங்கள் மூலம், மாடலிங் துறை இப்படிப்பட்டதுதான் என்று தெரிந்திருந்தாலும், அதைப் படத்தில் பார்க்கும்போது மிகுந்த பாதிப்பு இருந்தது. பிரியங்காவின் நடிப்பு அபாரம். அவருக்கும் நல்ல பிரேக் கொடுத்தப் படம் என்று நினைக்கிறேன்.
நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம்..
அருமை..
படல்களும் இப்படத்தில் அட்டகாசமானவை..
அருமையான படத்திற்கு அழகான விமர்ச்சனம்....
முதல் தடவையா உஙக பதிவ படிக்கிறேன்.ரொம்ப நல்ல பகிர்வு.பொதுவா எனக்கு இந்தி படங்களில் அவ்வளவாக ஆர்வமில்லை.ரொம்ப முக்கியமான படமென்று தோன்றினால் மட்டும் பார்ப்பது.ஆனா உங்களுடைய இந்த பதிவு எனக்கு அசோகமித்திரனுடைய கரைந்த நிழல்களை ஞாபகப்-படுத்தியது.அதில் சினிமாக்களின் பின்னனியைப் பற்றி எழுதியிருப்பார்.
Post a Comment