முதலாவது காட்சி: கோவை உக்கடம் பேருந்து நிலையம்
விடுமுறை நாட்களுக்கு முந்தைய நாட்களில் காணப்படும் காட்சி...
பொள்ளாச்சி மற்றும் பழநிக்குச் செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நுழையும் இடத்திலேயே அடிதடி ஆரம்பித்துவிடும். தனியார், அரசுப் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளிலும் இடம் பிடிப்பதற்கு ஒரே சண்டை தான். இத்தனைக்கும் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 3 நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. பழநி, உடுமலை செல்லும் பேருந்துகளிலும் இதே நிலை தான். இதுவே பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை போன்ற விஷேச நாட்கள் என்றால் நிலைமை இன்னமும் மோசமாகி விடும்.
அடித்துப் பிடித்து பேருந்தில் ஏறி அமர்ந்து, அடுத்த தளத்தில் (லேன்) பாலக்காடு, திருச்சூர் செல்லும் பயணிகளைப் பார்த்தால் நமக்கே தலைகுனிவாக இருக்கும். பேருந்து நெரிசல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவரும் வரிசையில் நின்று ஒவ்வொருவராக பேருந்துகள் ஏறுவார்கள். வரிசையில் கடைசியில் நிற்பவரும் அதிகபட்சமாக 15 நிமிடத்தில் ஏறிவிடுவார்.
அங்கே அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்பதல்ல ஒழுங்குக்குக் காரணம். தமிழகத்தில் அதிகமாகப் பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கோவை - பொள்ளாச்சி, கோவை - திருப்பூர் போன்ற தடங்கள் முதலிடங்களில் வரும். நம்மால் ஒரு 15 நிமிடம் பொறுக்க முடியாதா? வாலிப முறுக்கில் இருப்பவர்கள் அடித்துப்பிடித்து இடம் பிடிக்க முடியும். வயதானவர்கள் என்ன செய்வார்கள்?
என் பெற்றோர், கோவையில் ஏதாவது வேலை என்றால் விசேஷ நாட்களில் செல்வதைத் தவிர்த்து விடுவார்கள். கண்டிப்பாகச் செல்ல வேண்டுமென்ற நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?
20 அடி தொலைவில் நிற்கும் பயணிகளுக்கு இருக்கும் ஒழுங்கு நமக்கு ஏன் இல்லை? இது இன்று நேற்றல்ல, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே இதே ஒழுங்கு தான்! அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? காட்டுமிராண்டிகள் என்று தானே நினைக்கக் கூடும்?
அடுத்த காட்சி : கோவை ரயில் நிலையம்
இரவில் 8 மணியில் முதல் 9 மணிக்கு கோவை ரயில் நிலையத்துக்குச் சென்றிருப்பவர்களுக்கு நான் விவரிக்கும் காட்சி நினைவிருக்கும்.
புதுடெல்லி செல்லும் கேரளா விரைவுவண்டி, நீலகிரி விரைவுவண்டி, சென்னை விரைவுவண்டி, நாகர்கோவில் விரைவுவண்டி, வெஸ்ட்கோஸ்ட் விரைவுவண்டி என குறைந்தது ஐந்து அல்லது ஆறு விரைவு வண்டிகள் 8 மணி முதல் 9 மணிக்குள் கோவை ரயில் நிலையத்தைக் கடக்கின்றன. மொத்தம் 6 பிளாட்பாரங்கள் உள்ள ரயில் நிலையத்தில் பெரும்பாலும் 1,2,3,4 தளங்கள் (பிளாட்பாரங்கள்) மட்டும் தான் பயன்படுத்தப்படும். இதில் ஓரிரு ரயில்கள் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தால் இரண்டு தளங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இந்த ஆறு வண்டிகளில் செல்லும் ஏறக்குறைய 3000 பயணிகள் இரண்டு தளங்களில் தான் நிற்க வேண்டியிருக்கும். இது போதாதென்று பிளாட்பாரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் சிறு விற்பனையாளர்களின் தள்ளு வண்டிகளையும் சேர்த்துக்கொண்டால் நிலைமை இன்னும் மோசம் தான். இப்படி 2000 - 3000 பயணிகள் நிற்கும் பிளாட்பாரங்கள் மாற்றப்பட்டால் என்னாகும் நிலை?
இது தான் ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடந்திருக்கிறது!!
13 ஆம் தளத்தில் வரவேண்டிய பிகார் செல்லும் ரயில் 12ம் தளத்துக்கு மாற்றப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடியில் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. நம்மைப் பொறுத்த வரை, நாடெங்கும் மக்கள் நெருக்கடியால் இறந்து போன நூற்றுக்கணக்கானோரில் மேலும் இரண்டு உயிர்கள் அதிகரித்திருக்கிறது. எங்கோ நடந்ததால் இது நமக்குச் செய்தி. இதுவே கோவை ரயில் நிலையத்திலோ, உக்கடம் பேருந்து நிலையத்திலோ நடந்தால் என்ன செய்வோம்? சில நிமிடம் முன்பு தன்னுடன் நின்றிருந்த சக பயணி நெருக்கியதால் இறக்க நேர்வது எவ்வளவு துயரமானது?
இது போன்ற உயிரிழப்புகளைப் பார்க்கும் பொழுது, நம் வாழ்வு ஓடிக்கொண்டிருப்பது ஏதோ அதிர்ஷ்டம் என்று தான் எண்ணத் தோன்றுகிறது!
இதற்கு என்ன காரணம்?
1. போதிய இட வசதியில்லாதது தான் முதல் காரணமாகக் கூற முடியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகியிருக்கின்றனவா என்றால், 'இல்லை' என்று தான் கூற வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வசதிகளைக் கொண்டு இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்.
2. நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதிய பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படை பயிற்சி இல்லாததாலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் வருடத்துக்கு ஓரிரு முறை பாதுகாப்புப் பயிற்சி (Safety Drill) நடத்தப்படுகிறது. அது போல பயணிகளுக்கும் நடத்தினால் பயனளிக்கும்.
3. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படலாம் என்ற முன்னேற்பாடு ஒவ்வொரு அமைப்பினரும் திட்டமிடுவது மிகவும் தேவையான ஒன்று.
4. மக்கள் கூடும் இடும் (ASSEMBLY POINT): கோவை, சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாட்டுத்தாவனி போன்ற பிரதான பேருந்து நிலையங்கள் என எங்கேயும் அவசர கால மக்கள் கூடும் இடம் இருப்பதை நான் பார்த்ததே இல்லை. அசம்பாவிதம் நேர்கையில் எங்கே செல்வது என்று தெரியாததாலேயே விபத்துகள் நடக்கின்றன. Assembly Pointகளுக்கான இடத்தை ஒதுக்கி மக்களுக்கு தெரியப்படுத்தினால் சம்பவங்கள் நடக்கும் பொழுது உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்.
5. எல்லாவற்றிற்கும் மேலான தேவை ஒழுக்கம். "நாம் நெருக்கித் தள்ளும் மனிதரும் நம்மைப் போன்றவர் தான்" என்ற எண்ணம் வரவில்லை என்றால் உயிரிழப்புகளைத் தவிர்க்கவே முடியாது.
எப்போது திருந்தப் போகிறோம்?
*
7 comments:
25 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்திய வசதிகள் இப்போதைய தேவைக்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பே இல்லைதான்... அந்த இடத்திலும் கடைகளும், தள்ளுவண்டிகளும் ஆக்கரமித்துள்ளதை என்ன சொல்வது. அதற்கான ஒழுங்கு கட்டுப்பாடுகள் எந்த கூட்டநெரிசல் அதிகமுள்ள ரயில்நிலையங்களிலும், பேருந்துநிலையங்களிலும் ஏற்படுத்தப்படவில்லையென்பதே உண்மை...
கூட்டநெரிசலை அதிகம் ஏற்படுத்துவதில் படித்த அறிவுள்ள மக்களே முன்னிலையில் உள்ளனர் என்பதும் கசப்பான உண்மையே... ஒரு இரண்டுநிமிடம் காத்திருந்தால் நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது. அந்த பொறுமைக்கூட இல்லாதவர்களை எப்படி வசைவது.
இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளும், அவர்களை தூக்கிச்சுமந்துவரும் தாய்மார்களும்தான். இதோ ஒரு நிகழ்வு டில்லியில்...
அடிவயிறு வலிக்கும் வரையில் நம்செய்கை நமக்கு தவறெனப்படப்போவதில்லை...
நல்ல இடுகை...
தாங்கள் தெரிவித்துள்ள காட்சி கோவையில் மட்டுமல்ல, தமிழகம் முழுதும் இதே நிலைதான். சிங்கப்பூரில் வசிக்கும் என் சகோதரர் ஒருவர் இதைத்தான் வேடிக்கையாகச் சொல்வார். நான் உறவினர்களோடு இருக்கலாம் என்று இந்தியா வந்தாலும் என் மகன் இங்கே வந்து வாழ முடியாது. அங்கே எங்கும் வரிசையில் ஒழுங்குடன் நின்று பழகிய அவன் இங்கு வந்து குறுக்கே புகுந்து பொருள் வாங்கவோ டிக்கெட் எடுக்கவோ சாமர்த்தியம் போதாது என்பார். படித்தவர்களே இப்படி நடந்து கொள்வதைப் பார்க்கும் போதுதான் எக்காலத்திலும் இவர்கள் மாறவே மாட்டார்களா என வருந்தவேண்டியிருக்கிறது.
ஒரு சின்ன ஒழுக்கம், சுயகட்டுப்பாட்டுக்கு கூட நம்மாட்களுக்கு ஏற்பு இல்லை என்பதும், தன்னலம் மிதமிஞ்சி இருப்பதும் வருத்தத்துக்குரியது. கட்டமைப்பு மாற்றம் மிக அவசியம். நல்ல பகிர்வு.
. நெருக்கடிச் சூழலை எதிர்கொள்வதற்குப் போதிய பயிற்சியை மக்களுக்கு வழங்க வேண்டும். கூட்ட நெரிசலை எப்படி எதிர்கொள்வது என்ற அடிப்படை பயிற்சி இல்லாததாலேயே உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் வருடத்துக்கு ஓரிரு முறை பாதுகாப்புப் பயிற்சி (Safety Drill) நடத்தப்படுகிறது. அது போல பயணிகளுக்கும் நடத்தினால் பயனளிக்கும்.
...... well-said ..... rightly said....
மிக முக்கியமான இடுகை செந்தில். கடந்த முறை ஊருக்கு வந்திருந்தபோது தேனியிலிருந்து மதுரை செல்வதற்குள் முழி பிதுங்கிவிட்டது. ஐந்து நிமிட இடைவெளியில் பேருந்துகள் இருந்தாலும் ஒவ்வொரு பேருந்துக்கும் முட்டி மோதி நெருக்கித் தள்ளும் கூட்டத்தில் பெற்றோர்களையும் அழைத்துக்கொண்டு ஓரிடத்திற்கு சென்று வருவது இன்றைய காலத்தில் பெரிய சாதனையாகத் தோன்றுகிறது.
போதிய இட வசதியில்லாதது தான் முதல் காரணமாகக் கூற முடியும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வசதிகள் பெருகியிருக்கின்றனவா என்றால், 'இல்லை' என்று தான் கூற வேண்டும். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வசதிகளைக் கொண்டு இன்றைய தேவையைப் பூர்த்தி செய்வது என்பது இயலாத காரியம்
Simply True.Its happening everywhere.
இங்கே வரிசையில் நின்றுவிட்டு, ஊரிலும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைத்து, வரிசையாக்க முனையவோ, அல்லது எடுத்துச் சொல்லவோ முனைந்தால் “லூசு” என்பது மாதிரிதான் பார்க்கிறார்கள். காலம் மாறும். நம்புகிறேன்.
Post a Comment