இயற்கையின் வர்ணவித்தைக்கு முன்பு நாம் எங்கே இருக்கிறோம். இயற்கையின் எழிலிற்கு முன்பு நம் படைப்புகள் எங்கே நிற்கின்றன. மனிதர்களின் படைப்புகளான கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள் யாவிற்கும் ஒரே வடிவம் தான், ஒரே வர்ணம் தான். ஆனால் இயற்கைக்கு?
அலுவலக வேலைப்பழுவிலிருந்தும், கண்களின் அயர்ச்சியிலிருந்து விடுபடவும் தூரத்திலிருக்கும் பொருளைப் பார்ப்பது நல்லது என்பர். இந்தியாவில் இருக்கும் பொழுது ஏதாவது ஒரு மரத்தைச் சிறிது நேரம் வெறித்துப் பார்ப்பதுண்டு. துபாய்க்கு வந்த பிறகு, நான் பார்ப்பது கடலைத்தான். என் அலுவலக அறையிலிருந்து கடலைப் பார்ப்பது எனக்கு பிடித்தமான விசயம். கடலைக் காட்டிலும் தன் வண்ணத்தையும், வடிவத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும் விசயங்கள் இருக்க முடியுமா?
காலை ஏழு மணிக்குப் பார்க்கும் பொழுது நீல வண்ணத்தைக் கொண்டிருக்கும் கடல் மதியமாகிறது பொழுது ஊதா நிறத்தையும் கருநீல நிறத்தையும், பச்சை நிறத்தையும் எடுத்து வித்தை காட்டிக்கொண்டிருக்கும். அதே சமயம் கடலில் பயணம் செய்யும் பொழுது கடல் எப்படி இருக்கும்?சீற்றத்துடன் இருக்குமா? அல்லது தூரத்தில் இருந்து பார்க்கும் அதே மகிழ்ச்சியைத் தருமா என்பது போல பல கேள்விகள் மனதுக்குள் எழும்!!
ஒரு நாள் கடலில் பயணம் சிறிது தூரமாவது சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவல் எனக்குள்ளே இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆவலைத் தீர்க்கும் வண்ணம் அமைந்தது தான் அலுவலக நண்பர்களுடன் இன்று சென்ற பாய்மரக் கப்பலில் கடல் உலா.அலுவலக ஊழியர்களின் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் ஆறு மாதத்திற்கோ மூன்று மாதத்திற்கோ ஒரு முறை நிர்வாகம் இது போல வெளியே அழைத்துச் செல்வதுண்டு. இந்த முறை கடல் பயணம்.
துபாய் மெரினாவில் உள்ள படத்துறையில் இருந்து கடலிற்குள் அழைத்துச் செல்லுதல், பிறகு கடலில் குளியல், சிறிய சிற்றுண்டி என்பது போல ஏற்பாடு செய்திருந்தனர். கடலில் குளியல் என்றதால் குளிப்பதற்குத் தகுந்த உடைகளையும் எடுத்திருந்தேன். பாய்மரக்கப்பல் 40 பேர் பயணிக்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது. எங்கள் குழுவில் 10 பேர் மட்டுமே இருந்ததால் பிற சுற்றுலாவாசிகளையும் ஏற்றிக் கொண்டனர். படகில் என்னையும், இன்னொருவரையும் தவிர்த்து பெரும்பாலானோர் ஐரோப்பியர்களே!!
கப்பல் கரையிலிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் பயணிக்கத் துவங்கியவுடன், உயரமாக இருந்த துபாய் மெரினாவிலுள்ள கட்டங்களின் உயரம் குறைய ஆரம்பித்தன. நியூயார்க் நகர மன்ஹாட்டன் பகுதிக்கு இணையாக துபாய் மெரினாவில் பல கட்டடங்கள் நிலத்திற்கும் வானிற்கும் நிற்கின்றன. இங்கே உள்ள கட்டங்களைக் கட்டத் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இலட்சக் கணக்கானோர் இரவும் பகலும் உழைக்கிறார்கள். 80 சதத்தினர் உழைப்பால் 20 சதத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். 20 சதவிதத்தில் துபாய் குடிமக்களும் ஐரோப்பியர்களுமே அடங்குவர்.
80 - 20 விதி எப்படி எல்லாம் உறுதி செய்யப்படுகிறது பாருங்கள்!!
துபாய் மெரினாவின் கட்டடகள் மறையத்துவங்கியவுடன் படகில் வந்த ஆண்களும் பெண்களும் நீச்சல் உடைக்கு மாறினார்கள். கவர்ச்சிக் கன்னிகளுக்கான உடை என்று தமிழ் சினிமா நம் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் டூ-பீஸைத் தான் பெரும்பாலான பெண்கள் அணிந்திருந்தார்கள். எவரிடமும் தவறான பார்வையோ உள் நோக்கமோ இல்லை!! அவர்களைப் பொருத்த வரையில் அது நீந்துவதற்கான ஒரு உடை. நம் சினிமாவினர் கோவாவையோ, நீச்சல் குளத்தையோ காட்டுப் பொழுது கவர்ச்சிக் கண்ணோட்டத்தில் நீச்சல் உடையணிந்த பெண்களைக் காட்டுவது எவ்வளவு அருவருப்பான செயல்!!
மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பியவுடன் நண்பர்களுடன் அரட்டை, அனுபவப் பகிரல் என பயணம் குதூகலமானது. அலைகளில் மெதுவாகப் போன படகு ஆடம்பர விடுதியான அட்லாண்டிஸ் வழியாகச் சென்று ஏழு நட்சத்திர விடுதியான புர்ஸ்-அல்-அராபை நெருங்கிய பொழுது மணி மூன்றரை. பிறகு குளிக்க விருப்பமிருப்பவர்கள் குளிக்கலாம் என்று படகின் மேலாளர் கூறியவுடன் அனைவரும் கடலில் இறங்கினர். யாருமே லைஃப்-ஜாக்கட் எனப்படும் பாதுகாப்பு அங்கியை அணியவில்லை. ஆண்கள் பெண்கள் என அனைவரும் அருமையாக நீந்தி விளையாடினர். எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும், கடலில் குளிக்கப் பயமாக இருந்ததால் நான் குளிக்கவில்லை.
நம் நாட்டில் நீச்சல் தெரிந்தோர் எத்தனை சதவிதத்தினர் இருப்பர். உயிரைப் பாதுகாக்கத் தேவையான பயிற்சியை நம் வாழ்வியல் முறை ஏன் பழக்கப்படுத்துவதில்லை? நீர் நிலைகள் இல்லை என்று பதில் கிடைக்கும். நீர் நிலைகள் அதிகம் இருக்கும் ஊரில் அனைவருக்கும் நீந்தத் தெரியுமா? அனைவருக்கும் நீச்சல் போன்றவை தெரிந்திருந்தால் தேக்கடியில் நேர்ந்ததைப் போல விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்திருக்குமே!! புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கை என்பது சரியான முறையா என்பன போன்ற எண்ணங்கள் மனதில் தோன்றின.
அனைவரும் குளித்துவிட்டு வந்த பிறகு சிக்கன் பார்பிக்யூ மற்றும் இன்னபிற உணவுகளுடன் சிற்றுண்டியைப் பரிமாறினர். சிற்றுண்டியை முடித்தவுடன் படகு திரும்பவும் கரையை நோக்கிக் கிளம்பியது.
மாலை ஐந்து மணியானவுடன் சூரியனும் கடலும் காட்டிய வித்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. நீல நிறத்தில் இருந்த கடல் பரப்பு சூரியனின் ஒளிபட்டு வெண்ணிறமாகவும், கொஞ்ச நேரம் கழித்து இளஞ்சிவப்பு நிறத்தையும், ஊதா நிறத்தையும் காட்டி வித்தை செய்துகொண்டிருந்தது. கப்பல் மாலுமிகள் இது போல எத்தனை அருமையான காட்சிகளைக் கண்டிருப்பார்கள்? அவர்களது அனுபவத்தைக் கேட்டால் எவ்வளவு இனிமையாக இருக்கும்.
நாம் இளம்வயதில் வரைய ஆரம்பிக்கும் பொழுது வரைய விரும்புவது மலைகளின் நடுவிலோ அல்லது கடலின் நடுவிலோ மறையும் சூரியனைத்தான். அது போன்றதொரு சூரிய அஸ்தமனத்தைக் கடலில் பார்த்த பொழுது இளவயது நினைவுகள் கிளம்ப ஆரம்பித்தன. சூரியன் கடலில் புதைந்துவிட படகும் கரையை நெருங்க ஆரம்பித்தது.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு மறைந்த துபாய் மரினாவின் கட்டங்களில் உள்ள மின்விளக்குகள் மின்மினிப் பூச்சியைப் போல மின்ன ஆரம்பித்தது, கரையை நெருங்கும் பொழுது கட்டடங்களின் மின்னொளி பிரகாசமானது. கரையை அடைந்தவுடன் அலுவலக நண்பர் என்னிடம், "கடற்காற்று என்றாலும் எவ்வளவு சுத்தமானதாக இருந்தது? வாரத்திற்கொரு முறை இது போல வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"
"நீங்கள் மீனவராக மாறிவிடுங்கள்!! தினமும் இது போல கடற்காற்றை சுவாசிக்க முடியும்" என்றேன், அவர்கள் படும் அவதி நம்மைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும் என்று நினைத்தவாரே!!
..
.
10 comments:
நட்சத்திர வாழ்த்துக்கள் செந்தில்
நல்லா இருக்கு உங்க அனுபவம் ...
பயணக்கட்டுரையின் இடையிடையே தெறிக்கும் சிந்தனை மற்றும் அனுபவத்துளிகள் மேலும் அழகு சேர்க்கின்றன. சிறப்பான இடுகை.
நட்சத்திர வாழ்த்துக்கள் செந்தில்! தொடர்ந்து மின்னுங்கள்!!!
:-)
கலக்கல் செந்தில் ... அனுபவம் சூப்பர். நானும் ரொம்பநாளா முயற்சி பண்ணுறேன் அங்கபோறதுக்க நடக்க மாட்டேங்குது...
வாங்க ஸ்டார்ஜான். வருகைக்கு நன்றி.
வாங்க தீபா. நன்றி.
வாங்க பிரதாப். நீங்களும் சென்று வர முயற்சி செய்யுங்கள். நல்ல அனுபவமாக இருக்கும். நன்றி.
கண்கவர் விருது வளன்கியத்துக்கு நன்றி
மாலை ஐந்து மணியானவுடன் சூரியனும் கடலும் காட்டிய வித்தைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.///
இயற்கைக்கு ஈடு ஏது!!
அருமையான வர்ணனை அண்ணா..
100வது ஃபாலாவர் சேர்ந்ததுக்கும் வாழ்த்துக்கள்
ஹ்ம்ம்.துபாய் நினைவுகளில் மூழ்க வைத்து விட்டீர்கள்.
உண்மையிலியே துபாய் ஸ்கைலைன் பிரமிக்க வைக்கக் கூடியது. வானமும் அவ்வாறே
மிக்க நன்றி செந்தில். அருமையன படங்களும், வார்த்தைகளும். வெகு சிறப்பு..
//பல கட்டடங்கள் நிலத்திற்கும் வானிற்கும் நிற்கின்றன. இங்கே உள்ள கட்டங்களைக் கட்டத் தான் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து இலட்சக் கணக்கானோர் இரவும் பகலும் உழைக்கிறார்கள். 80 சதத்தினர் உழைப்பால் 20 சதத்தினர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்துகிறார்கள். 20 சதவிதத்தில் துபாய் குடிமக்களும் ஐரோப்பியர்களுமே அடங்குவர். //
சிந்தனையுடன் கூடிய உங்களின் அனுபவ இடுகை. படிக்கபடிக்க சுவாரசியம்.
அருமை நண்பர் செந்தில்வேலன்,
மிக நல்ல இடுகை , நான் தெய்ரா கார்னிஷில் இருந்து இரவு உணவுடன் கூடிய கப்பல் சவாரி செய்திருக்கிறேன். நீங்கள் சொன்ன அனுபவம் மிக நன்றாக இருந்தது. சீக்கிரம் முயன்று பார்க்கனும், அதற்கு முன் நீந்த கற்கனும்
Post a Comment