Friday, August 20, 2010

ஹலோ.. சாரிங்க.. ராங் நம்பர்!!

நீங்கள் புதிதாக ஒரு அலைபேசியை வாங்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு அலைபேசி எண்ணும் தேவைப்படுகிறது. அந்தக் அலைபேசிக் கடைக்கு அருகிலேயே இருக்கும் பிரபல தொலைத்தொடர் நிறுவனத்தாரின் சேவை மையத்திற்குச் செல்கிறீர்கள். சில படிவங்களையும், அடையாளச் சான்றையும் கொடுத்த பிறகு சிம்கார்டை வாங்கி, அலைபேசியைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறீர்கள். 

உங்கள் அலைபேசிக்கு அழைப்புகள் வர ஆரம்பிக்கின்றன. "நான் யாரிடம் இந்த எண்ணைக் கொடுக்கவில்லையே. என்னை யார் அழைப்பது?". வந்த அழைப்பை எடுக்கிறீர்கள். ஏதோ தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது உங்களுக்கு...


"டேய்.. ராசூ.. மணி பேசறேண்டா.." என்று ஆரம்பிக்கிறார்.
"ஹலோ உங்களுக்கு யாருங்க வேணும்"
"விஜயராஜ் இல்லீங்களா?"
"இல்லீங்க இப்ப தான் நான் இந்த நம்பர..." என்பதற்குள் துண்டித்துவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து ஒரு அழைப்பு வெளிநாட்டு அழைப்பில் இருந்து வருகிறது.

"ஹலோ... விஜயராஜ் இருக்காருங்களா?"
"யாருங்க?"
"விஜயராஜ் நம்பர் தானுங்க?"
"யாருங்க? விஜய ராஜா? உங்களுக்கு யாருங்க வேணும்?"
"இல்லீங்க.. இந்த நம்பரத் தான் கொடுத்திருந்தாரு.. "
"நீங்க யாரு?"
"சாரிங்க... நான் தவறுதலா உங்களுக்குக் கூப்பிட்டுவிட்டேன்"
"நீங்க கோயமுத்தூருங்களா? நான் சிவகாசில இருக்கேன்.. நீங்க எங்கிருந்து பேசறீங்க?"
"நான் வெளிநாட்டுல இருந்து கூப்பிடறேன்.. சரி வச்சிடுங்க!1"

"இல்லீங்க நீங்க எந்த ஊருல இருந்து கூப்பிடறீங்க?"

"ஐயா.. நான் தெரியாம இந்த நம்பருக்குக் கூப்பிட்டிட்டேன்.. மன்னிச்சுடுங்க"

"இல்லீங்க தம்பி.. நீங்க.."

"டொங்க்"

புதிதாக ஒரு தொடர்பு எண்ணை வாங்கி "மேலே கூறியுள்ளதைப் போல" அழைப்புகள் வர ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

*

மேலே குறிப்பிட்டுள்ள பேச்சுவார்த்தை கற்பனையல்ல!! அதில் வெளிநாட்டிலிருந்து பேசியது அடியேன் தான். இந்த விசயம் அன்றாடம் நடக்க ஆரம்பித்திருக்கும் ஒன்றே. 

ஒரே எண்ணிற்குத் தொடர்ச்சியாக "ஒரே நபரின்" பெயரை கேட்டு அழைப்புகள் வருவதில் இருந்தே புரிவது, "விஜயராஜ்" என்ற வாடிக்கையாளர் பயன்படுத்தியிருந்த எண் வேறொருவருக்கு வழங்கியிருக்கிறார்கள் என்பது. சில மாதங்கள் அலைபேசி எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்து விட்டாலோ, இணைப்பைத் துண்டித்து விட்டாலோ, அந்த எண்  வேறொருவருக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப் பயன்படுத்திய எண்ணை மற்ற வாடிக்கையாளருக்குக் கொடுக்கலாமா? 

"அலைபேசிகள் பெருமளவு பெருகிவரும் இன்றைய சூழலில், ஒரு எண் முடங்கிப் போவதற்கு பதிலாக வேறொருவருக்குத் தருவது சரியே" என்ற வாதம் வரலாம். ஆனால், இந்த எண் பயன்படுத்தப்பட்ட எண் என்பது புதிதாக வாங்குபவருக்குத் தெரியாமல் போனால் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல "தவறான அழைப்புகள்" வந்தால் என்ன செய்வது?

விஜயராஜ் ஒரு சாமான்யராக இருக்கும் பட்சத்தில் பிரச்சனை இல்லை. அதுவே பிரச்சனைக்குரிய நபர் பயன்படுத்திய எண் நம் கைக்கு வந்தால் என்ன ஆவது? தொலைபேசி எண்களை தவறான வழிகளுக்குப் பயன்படுத்துவது பெருகிவரும் காலத்தில், இது போன்ற அழைப்புகள் புதிதாக எண்ணை வாங்குபவருக்குத் தேவையில்லாத தலைவலி தான்!!

இதற்கு ஏதாவது சட்டங்கள் உள்ளனவா? அன்பர்களுக்கு விடை தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்!!

*

அடுத்து விஜயராஜின் இடத்திற்கு வருவோம்..

ஏதோ ஒரு காரணத்திற்காகப் பழைய எண்ணைத் துண்டித்தவர் தன் நண்பர்களுக்கெல்லாம் புதிய எண்ணைத் தெரிவித்திருக்கலாம். அப்படி புதிய எண்ணைத் தெரிவிக்காமல் போனதால் தான் இத்தனை குழப்பம்.

நாம் இதைச் செய்கிறோமா?

இன்று சந்தையில் கிடைக்கும் அலைபேசிகள் பலவற்றுள் இரண்டு சிம் கார்டுகளைப் பொருத்திக் கொள்ளும் வசதி வரும் அளவிற்கு ஒரே நபர் இரண்டு தொடர்பு எண்களை வைத்துக் கொள்வது எளிதாகப் பார்க்க முடிகிறது. அலுவலகங்களில் தரப்படும் எண், சொந்த பயன்பாட்டிற்கு என ஒரு எண் என்று இரண்டு எண்கள் வைத்திருப்பது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்திற்கு மாறும் பொழுது பழைய எண்ணை அப்படியே கைவிடும் நிலை ஏற்படுகிறது. ஒரு தொலைத்தொடர்பு சேவையை விட அடுத்த சேவை நன்றாக இருந்தால் எண்ணை முடக்கிவிட்டு அடுத்த எண்ணிற்கு மாறுவதும் வாடிக்கையாகிவிட்டது. அப்படி நாம் எண்களை மாற்றும் பொழுது, நாம் நம் நண்பர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால்.. "ஹலோ... யாருங்க... உங்களுக்கு எந்த நம்பருங்க வேணும்?" என்பதைத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

*

12 comments:

DHANS said...

I have faced this issue, my old number has been moved to prepaid when i was in aborad. airtel cant able to get my old number which i was usng mre than 4 years when i was in college.

till now one lady who bought my old number is suffering.

what to do........telecom companies should think about this

vasu balaji said...

இப்ப எந்த கேரியர்னாலும் அதே நம்பரை பயன்படுத்தும் வசதி வருதாம். அப்புறம் இந்தத் தொல்லை இருக்காது. அல்லது குறையக் கூடும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?

Unknown said...

அலோ நான் விஜயராஜ் பேசுறேன்... என்னைக் கேட்டு யாராவது போன் பண்ணாங்களா ...?

settaikkaran said...

இது ஒரு பெரிய தொல்லைண்ணே! விடியற்காலை அஞ்சுமணிக்கு போன் பண்ணி,’அண்ணே, மஞ்சள் லோடு ஏத்தட்டுமா?’ன்னு கேட்குறாய்ங்க! :-)))

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு செந்தில். எனக்கும் இதுபோல ஒரு அனுபவம் உண்டு.

sakthi said...

இது போல் சிலமுறை எனக்கும் அனுபவம் நேர்ந்ததுண்டு. செந்தில் உங்கள் சிந்தனை அனைத்தும் வித்தியாசமானது.

செந்தில் ஏன் இண்ட்லி இணைப்பை காணவில்லை

geethappriyan said...

ஹஹஹஹ
நல்ல சிலேடையாக சொல்லியிருக்கீங்க,எனக்கும் இதுபோல நம்பர் வாங்கிய புதிதில் நேர்ந்ததுண்டு.

Chitra said...

ஆஹாங்.... எப்படி எல்லாம் problem வருது!

VELU.G said...

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள். இதில் கிரிமினல் குற்றங்கள் நடக்கக் கூட வாய்ப்பு உள்ளது.

நல்ல பதிவு

க.பாலாசி said...

அது சரிதானுங்க... ஆரம்பத்துல எங்க வீட்டு எண்ணுக்கு இதுபோல அழைப்புகள் வந்தது. எனக்கு வந்ததில்ல. ஏன்னா தேர்ந்தெடுத்த எண்கள் அப்படி. புதிதான எண் வரிசைகளை தேர்ந்தெடுப்பது சரியெனப்படுகிறது. இப்போது பெருமளவு இந்த பிரச்சனைகள் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தொடக்க எண்கள் 9 லிருந்து 7, 8 என்று மாறிவிட்டது.

ஹுஸைனம்மா said...

நிறுவனம் மாற்றினாலும் எண் மாறாமல் இருப்பதற்கான சேவை (Mobile Number portability) தொடங்கப்பட்டுவிட்டதாகப் படித்த ஞாபகம்.

http://www.dancewithshadows.com/tech/mobile-number-portability-in-india-from-2010/


********

நீங்கள் சொல்லியிருப்பதை விட ஆபத்தான இன்னொரு பிரச்னை தெரியுமா? இணைப்பு வாங்கக் கொடுக்கப்பட்ட நமது அடையாளப் படிவங்களைப் பயன்படுத்தி நமக்குத் தெரியாமலேயே பிறருக்கும் புது தொலைபேசி இணைப்புக் கொடுப்பது. இப்படிச் செய்ததற்காகச் சமீபத்தில் ஒருவரைக் கைது செய்ததாகப் படித்தேன். :-(((

நீங்கள் சொல்லியிருப்பதில் முந்தையவர் பிரச்னைக்குரியவராக இருந்திருந்தால், நாம் புதிதாகத்தான் இணைப்பு வாங்கியிருக்கிறோம் என்பதை நிரூபித்துவிடலாம். ஆனால், மேலே சொன்னதில் வாங்குபவர் பிரச்னை செய்தால் அது நாமல்ல என்று நிரூபிப்பது எப்படி?

Related Posts with Thumbnails