அமீரகத்தில் ஒரு இரவு நேரம். மணி பத்தாகிறது. வீட்டின் பால்கனியில் இருந்து கீழே பார்த்தால் வாகனங்கள் பரப்பாய் சென்று கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு எப்பொழுது தான் இரவு ஆரம்பிக்கும். இந்தியாவில் இருந்து அயல்நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் என் உடல் அமீரக வாழ்க்கை முறைக்கு பழகவில்லை. பொழுது சாய்ந்து சில மணி நேரத்தில் தூங்க வேண்டும் என்று பழக்கப்பட்டதாலோ என்னவோ உடலும் பொழுது சாய்ந்தவுடன் நித்திரையைத் தழுவ ஆரம்பித்துவிடுகிறது உடல். இரவு என்றாலே நினைவிற்கு வருவன அமைதியும், இனிமையான தென்றலும், விண்மீன்களும் தானே. அமீரக வாசிகளுக்கு இரவு என்பதை எவ்வாறு சொல்லிக்கொடுத்திருப்பார்கள்?
நூறு அடி தொலைவில் பரப்பான சாலையைப் பார்த்ததில் ஏற்பட்ட அயற்சியால் கண்கள் ஐநூறு அடி தொலைவிற்குச் செல்கின்றன. அமைதியான உள்ளிழுப்புக் கடலும், அதில் செல்லும் படகும் கண்களுக்கு இதமாக இருக்கின்றன. கண்கள் ஐநூறு அடிக்குச் சென்றவுடன் காதுகளும் அமைதியை உணர்கின்றன. தொலைவில் ஒரு பரப்பான சாலை தெரிகிறது. அங்கும் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆனால் அவற்றின் சத்தமோ இரைச்சலோ கேட்கவில்லை. தொலைவில் செல்லும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது கண்களுக்கு!! அதே இரைச்சல், அதே வாகனங்கள் ஆனால் இருவேறு உணர்வு. அருகில் இருக்கும் விசயத்தை விட தொலைவில் இருக்கும் விசயம் எவ்வளவு அழகாகத் தெரிகின்றன. இதைத் தான் இக்கரைக்கு அக்கரை பச்சை என்கிறார்களோ?
பால்கனியில் பொருத்தப்பட்டிருக்கும் குளிரூட்டும் சாதனங்களில் இருந்து வெளியேறும் வெப்பம், அமீரக வெப்பத்தை மேலும் கூட்டுகிறது. ஐநூறு அடி தொலைவில் இருந்து கண்கள் 15 அடிக்கு மாறுகிறது. அருகில் இருக்கும் வீடுகளில் எவரும் வெளியே இல்லை. எல்லாக் கதவுகளும் மூடியே இருக்கின்றன. இவர்கள் எவருக்கும் வேடிக்கை பார்ப்பதே பிடிக்காதோ?
இன்றெல்லாம் நாம் வேடிக்கை பார்ப்பதை மறந்துவிட்டோம் என்றே கூற வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்வோர், பாதசாரிகள், உணவகத்தில் சாப்பிடுபவர் என அனைவரும், கைகளில் உள்ள திரையையே வெறித்துப் பார்க்கப் பழகிவிட்டோம். செல்பேசித் திரை, கணினித் திரை, சின்னத்திரை என்று திரைகளைப் பார்க்கப் பழகி, வேடிக்கை பார்ப்பதைக் குறைத்துவிடுவதால் கற்பனைத்திறனிற்கும் திரை போட ஆரம்பித்துவிடுகிறோம்.
நீண்ட நேரம் வெளியில் நின்றதால் வியர்க்க ஆரம்பிக்கிறது. வெளியே வெப்பக்காற்றைக் கக்கும் குளிரூட்டி என்னை உள்ளே இழுக்கிறது. உள்ளே வந்தவுடன் வெப்பம் அந்நியமாகிறது. கதவை வேகமாக மூடுகிறேன். வாகனங்களின் இரைச்சல், குளிரூட்டியின் சத்தம் என்று எதுவுமே கேட்காததால் ஒரு அமைதியை உணர முடிகிறது. இதமாகக் குளிரூட்டியின் காற்று என்னை வருட மனது "ராஜாங்கத்தைக்" கேட்க விரும்புகிறது. இரவு நேரங்களில் கேட்பதற்காகவே வைத்திருக்கும் பாடல் வரிசையைக் காற்றில் தவழ விடுகிறேன்.
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
கண்கள் சொருகுகின்றன. அப்படியே பாடலுடன் மனதும் ஊரிற்குச் செல்கின்றது. அழகான இரவுப்பொழுது.. எங்கள் வீட்டுமாடியில் தென்றல் தழுவ நடக்க ஆரம்பிக்கின்றேன். மேகங்கள் இல்லாத தெளிவான வானம். அழகாக நிலா என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. வீட்டைச் சுற்றியிருக்கும் தென்னைமரக் கிளைகளின் நடுவே நிலா ஒளிந்து விளையாடுகிறது. சீரான வேகத்தில் காற்று வீச, மரக்கிளையும் சீராக சிரங்களையாட்ட, நிலவும் சீராகக் கண்ணடிக்கிறது. எத்தனை நாட்களாகின்றன நிலவை ரசித்து.. ஏனோ திடீரென்று நிலா மறைந்து விட்டது. கண்கள் விழிக்கின்றன.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..
ராத்திரியில் பாடும் பாட்டு
கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேல பட்டு மோகம் ஆச்சு
போடு நிலாச் சோறு
ஏன் பொன்னுமணித் தேரு
கூட வந்து சேரு
நான் சுட்டுங்கனிச் சாறு
நிலாச்சோறு...
நிலாச்சோறு சாப்பிட்டு எத்தனை நாட்களாகின்றன. சிறுவயதில், மின்சாரம் இல்லாத நாட்களில், பௌர்னமி நாட்களிலெல்லாம் தெரு நண்பர்களுடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட நினைவு வருகிறது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலகாரங்களை எடுத்துச் சென்று கூட்டாக வைத்து கும்மியடித்து, பிறகு கைகளை நிலவிற்கு ஊட்டிவிட்டு நண்பர்களுக்கும் ஊட்டிவிட்டு.. அடடா நிலாச்சோறின் சுவை.. ஊருக்குச் சென்றால் வீட்டின் மாடிக்குச் சென்று குடும்பத்தாருடன் நிலாச்சோறு சாப்பிட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு நிலா ஒளி நிரம்பிய இரவுப் பொழுதில் "நண்பர்களுடன் சீட்டாடிய" நினைவு வருகிறது.
இரவையும் நிலவையும் எப்படி ரசித்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறதே. எனக்குக் கிடைத்த இரவு அனுபவங்கள், நிலா அனுபவங்கள் என் மகனிற்குக் கிடைக்குமா? பெரு நகரங்களில் வாழும் வரை இரவை ரசிக்கும் அனுபவம் கிடைப்பது கடினமே என்றாலும் எப்படியாவது இரவை ரசிக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
பாடல் வரிசையில்.. அடுத்த பாடல் ஆரம்பித்துவிட்டது..
நிலாவே வா
செல்லாதே வா
வீட்டின் உள்ளே தெரியாத நிலா.. மனத்திரையில் தெரிய ஆரம்பிக்கிறது.. மனதும் இரவை ரசிக்க ஆரம்பிக்கிறது.அமீரகத்தில் வீட்டினுள்ளே இருந்தாலும் நிலா.. அடடா.. என்ன அழகாகத் தெரிகிறது!!
13 comments:
இரவும், நிலவும் இன்னும் பல புனைவுகளுக்கும், நினைவுகளுக்கும் உந்துதல்களாய் தொடர்ந்து இருக்கின்றன. கோர்வையாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீ தானே வான் நிலா என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா?
ஆகாயம் மண்ணிலா?..
கல்யாணத் தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நேத்து நைட் இதே பாடலை தொலைக்காட்சியில் ரசித்தேன் இன்னிக்கு அந்த தலைப்பில் பதிவே போட்டுட்டீங்க
நீண்ட நேரம் வெளியில் நின்றதால் வியர்க்க ஆரம்பிக்கிறது. வெளியே வெப்பக்காற்றைக் கக்கும் குளிரூட்டி என்னை உள்ளே இழுக்கிறது. உள்ளே வந்தவுடன் வெப்பம் அந்நியமாகிறது. கதவை வேகமாக மூடுகிறேன். வாகனங்களின் இரைச்சல், குளிரூட்டியின் சத்தம் என்று எதுவுமே கேட்காததால் ஒரு அமைதியை உணர முடிகிறது. இதமாகக் குளிரூட்டியின் காற்று என்னை வருட மனது "ராஜாங்கத்தைக்" கேட்க விரும்புகிறது.
அபாரம் செந்தில் இவ்வரிகள்
இதமான இரவும், இனிமையான நிலவும் தரும் தண்மையான எழுத்து. நல்லாருக்கு செந்தில்.
//இன்றெல்லாம் நாம் வேடிக்கை பார்ப்பதை மறந்துவிட்டோம் என்றே கூற வேண்டும்.//
மிக்க சரி!
எதிர்ப்படும் ஜனத்திரளினில் மனிதர்களை காணாது நாம் எதையோ பார்த்து,எதையோ சிந்தித்தபடி கடந்துசென்றுகொண்டிருக்கின்றோம் !
//செல்பேசித் திரை, கணினித் திரை, சின்னத்திரை என்று திரைகளைப் பார்க்கப் பழகி, .. கற்பனைத்திறனிற்கும் திரை போட ஆரம்பித்துவிடுகிறோம். //
மிக உண்மை செந்தில். திரை போடுவது கற்பனைத் திறனுக்கு மட்டுமல்ல, நமது அருகிலிருக்கும் சொந்தங்கள், நட்புகளுக்கும்தான்.
ஆஹா.. எவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க... அமீரகத்திலேர்ந்து அப்டியே உடுமலைக்கு கொண்டுவந்த எழுத்து...இதை சாத்தியப்படுத்துவது இந்த இரவும், நிலவும்தானே... அதுதான் அழகு...
நல்ல இருக்கு படிக்க படிக்க
ஆனால் இங்குள்ள சூட்டுக்கு வெளியில் நின்று நிலவை ரசிக்கும் படியா இருக்கு,
செந்தில்...
இந்த இடுகையை வாசிக்கும் போது, ஏனோ தெரியவில்லை மிக நெருக்கமாக உணர்கிறேன்
ஆஹா, எழுத்து எவ்வளவு அழகாக கை கூடி வந்திருக்கிறது
அமீரகத்தப் பத்தி நீங்க சொல்லச் சொல்ல அங்க ஒரு நாள் வந்து பார்க்கணும் போல இருக்குங்க்னா
நிலாச்சோறு சாப்பிட்டு எத்தனை நாட்களாகின்றன. சிறுவயதில், மின்சாரம் இல்லாத நாட்களில், பௌர்னமி நாட்களிலெல்லாம் தெரு நண்பர்களுடன் சேர்ந்து நிலாச்சோறு சாப்பிட்ட நினைவு வருகிறது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலகாரங்களை எடுத்துச் சென்று கூட்டாக வைத்து கும்மியடித்து, பிறகு கைகளை நிலவிற்கு ஊட்டிவிட்டு நண்பர்களுக்கும் ஊட்டிவிட்டு.. அடடா நிலாச்சோறின் சுவை.. ஊருக்குச் சென்றால் வீட்டின் மாடிக்குச் சென்று குடும்பத்தாருடன் நிலாச்சோறு சாப்பிட வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு நிலா ஒளி நிரம்பிய இரவுப் பொழுதில் "நண்பர்களுடன் சீட்டாடிய" நினைவு வருகிறது.
----
அப்படியே பௌர்ணமி நிலவொளியில் விளையாடியதை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்கள்
நிறைய ரசித்தேன்
வாழ்க வளமுடன்
அன்புடன்
நெல்லை நடேசன்
துபாய் அமீரகம்
நல்லாயிருக்கு சார்!
செந்தில்.....
இரவை மிகவும் ஆழ்ந்து அனுபவித்து இருக்கிறீர்கள் போலிருக்கிறது....
அனுபவம் புதுமை.... உன் எழுத்தில் கண்டேன்....
Post a Comment