Friday, August 13, 2010

ஏ.ஆர்.ஆர் இசை (Brand Analysis) + எந்திரன் பாடல்கள்!!

எந்திரன் படப் பாடல்கள் வெளியானவுடன் என் நண்பர்களிடம் இருந்து எனக்கொரு நோய் தொற்றிக் கொண்டது. எந்திரனைப் பற்றிக் கருத்துச் சொல்லும் ESUS - Enthiran Status Update Syndrome என்ற நோய். 

"எந்திரன் பாடல்கள் என்னைப் பெரிதாகச் ஈர்க்கவில்லை" என்பது தான் பாடல்களை நான்கைந்து முறை கேட்ட பிறகு முகநூலில் (Facebook) நான் எழுதியது. "பாடல்கள் புது விதமாக உள்ளது. மீண்டும் மீண்டும் கேட்டுப்பார் பிடிக்கும்" என்ற வகையில் பல கருத்துகள் வர ஆரம்பித்தன. 

எத்தனை இசையமைப்பாளர்களின் பாடல்களை நமக்கு முதல்முறை பிடிக்காவிட்டாலும் "மீண்டும் மீண்டும் கேட்டால் பிடித்துவிடும்" என்று நினைத்துக் கேட்கிறோம்? அந்த இடத்தைப் பிடித்திருப்பது ரகுமானின் பாடல்கள் மட்டுமே. ரகுமான் மீது உருவாகியிருக்கும் இந்த நம்பிக்கை தான் அவரது இசையின் பலம். இந்த இடம் எளிதில் கிடைத்ததல்ல. ரோஜா, புதியமுகம், ஜெண்டில்மேல், திருடா திருடா என்று ஆரம்பம் முதல் ஒவ்வொரு படத்திலும் புதுமையான இசையை அமைத்ததாலேயே கிடைத்துள்ளது. இந்தியிலும் ரங்கீலாவில் ஆரம்பித்து தில்ஸே, தால் என்று கிரங்கவைக்கும் இசையை அமைத்தாலேயே அவருக்கென்று தனி இடம் உருவாகியுள்ளது.

ரகுமானை ஒரு BRAND (வகைக்குறி) என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்திய அளவில் இவரிற்கு இருக்கும் BRAND LOYALTY  இசைத்துறையில் வேறு எவருக்கும் இல்லை எனலாம். எந்திரன் பாடல்கள் வெளியான மறுநாளே அமீரகத்தில் உள்ள மலையாளப் பண்பலைகளில் ஒலிபரப்பாகியது, இந்தி பண்பலைகளில் எந்திரன் இசையைப் பற்றிப் பேசப்பட்டது, ஆப்பிள் நிறுவனத்தின் "ஐ-டியூன்" தளத்தில் எந்திரன் பாடல்கள் தர வரிசையில் முதல் பத்து இடத்திற்குள் வந்துள்ளது எல்லாம் ரசிகர்களின் விசுவாசத்தால் தான். ( ஐ-ட்யூன் தளம் ஆப்பிள் நிறுவனத்தின் பாடல்கள் தரவிறக்கத் தளம்). ரகுமான் என்ற வகைக்குறியின்(BRAND'S USP) அடையாளம் என்றால் புதுமை, நேர்மை, கட்டுடைத்தல், கடின உழைப்பு போன்றவை.

ஒவ்வொரு படத்தின் பாடல்களிலும் ஏதாவது ஒரு விசயம் புதுமையானதாக இருக்கும் என்ற நம்பிக்கையே ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்டுப்பார்க்கத் தூண்டுகிறது. முதல் முறை கேட்கும் பொழுது இதுவரை நமக்குப் பழக்கப்படாத இசைக் கலவையாக இருந்தால் நமக்குப் புரியவில்லையே என்ற எண்ணம் முதலில் தோன்றுகிறது. பிறகு "அந்த இசையில் ஏதாவது புதிதாக இருக்க வேண்டுமே, ஏன் நமக்குப் புரியவில்லை என்ற எண்ணம்" மனதில் எழ ஆரம்பிக்கிறது. சரி மீண்டும் கேட்டால் என்ன? "ஆஹா.. இந்தப் பாடல் முதலில் எனக்குப் பிடிக்கவில்லையே.. இப்பொழுது பிடிக்கிறதே.. மீண்டும் கேட்டுப் பார்ப்போம் ஏதாவது இருக்கிறதா என்று". இது தான் ரகுமான் பாடல்களின் வெற்றிக்குக் காரணம். இந்த இடம் ஒரு சில வகைக்குறிகளுக்கே கிடைத்துள்ளது.

தொழில்நுட்பத்துறையில் இந்த அளவிற்கு ரசிகர்கள் மரியாதையைப் பெற்றிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். (இங்கே ஆப்பிளைக் குறிப்பிடுவது BRAND என்ற பார்வையில் மட்டுமே). ஆப்பிள் நிறுவனம் எந்தப் பொருளை வெளியிட்டாலும் அந்தப் பொருளின் மீது அப்படி ஒரு படையெடுப்பு நடக்கிறது. ஐ-போடில் ஆரம்பித்தது ஐ-ஃபோன், ஐ-பேட் வரை இந்தப் படையெடுப்பு தொடர்கிறது. சில பொருட்களில் உள்ள பயன்பாடுகள் பல வருடங்களுக்கு முன்பே மற்ற நிறுவனப் பொருட்களில் வந்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் மீது உள்ள நம்பிக்கையால் அதன் பொருட்கள் முதலிடம் பெறுகின்றன. 

ரகுமானின் இசை, ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் என இரண்டையும் "வெளியானவுடன்" எந்தத் தரப்பினர் ரசிக்கிறார்கள்?

நன்றாகப் படித்த, ஊடகங்களுக்கு அறிமுகமான ரசிகர்களால் தான் இரண்டு பொருட்களுமே "வெளியானவுடன்" அதிகம் ரசிக்கப்படுகின்றன. அவர்களே இந்தப் பொருட்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றனர். இணையங்கள், ஊடகங்கள் எங்கும் கருத்துத் தெரிவிப்பதும் இணைய வசதி, ஊடங்கங்களில் கருத்தைப் பதிவு செய்யும் வசதியுள்ளவர்களே. இந்தத் தரப்பினர் ஃபேஸ்புக், ப்ளாக்கர், மற்ற ஊடகங்களில் பரவலாகக் கருத்துத் தெரிவிக்கையில் உலகமே இவர்களின் பொருட்களைப் பேசுவதைப் போல ஒரு எண்ணம் உருவாகிறது. "எல்லாரும் இதைப் பத்தியே பேசறாங்களே.. நாம பேசலீன்னா நம்மள ஆட்டைக்கு சேத்துக்க மாட்டாங்களோ" என்ற உந்துதலால் அனைவரும் கருத்து சொல்லும் நிலை ஏற்படுகிறது. இதுவே வாய் வார்த்தையில் (WOM) மேலும் பலம் கொடுக்கிறது.

ஒரு பொருளை சந்தையில் வெளியிடுவதில் பல நிலைகள் உள்ளன. முதல் நிலை விசுவாசிகள், புதுமை விரும்பிகள் படையெடுக்கும் நிலை. இவர்களைப் பூர்த்தி செய்துவிட்டால் அந்தப் பொருள் அடுத்தடுத்த நிலைகளில் வெகுசனத்திடம் வெற்றியை உறுதி செய்கின்றது. ரகுமானின் இசை முதல் நிலையை பெரும்பாலான சமயங்களில் எளிதே கடந்துவிடுகின்றது. 

*

"எந்திரன்" படப்பாடல்களிலும் முதல் நிலையை எளிதே கடந்துள்ளது என்றே கூறலாம். SLMன் (ஸ்லம் டாக் மில்லியனர்) வெற்றி, ஆஸ்கர் போன்றவை உலகெங்கும் உள்ள தமிழர் அல்லாத ரசிகர்களிடத்தும் எந்திரன் இசையைக் கொண்டு செல்ல உதவியுள்ளது. எந்திரன் படமும் ஒரு ரோபோவைப் பற்றியது என்பதால் பரவலாக ஹார்ட் ராக், ஃபுயூசன், டெக்னோ, ரெக்கே என்று மேற்கத்திய பாணியில் இசையை வெளியிட்டுள்ளார். 

கடந்த இரண்டு வாரங்களாக நான் கேட்டதில் எந்திரன் பாடல்களின் தரவரிசையும் சிறிய விமர்சனமும்..

1 - காதல் அனுக்கள் - ஸ்ரேயா கோசல், விஜய் பிரகாஷ் :

படத்தின் ஒரே மெலடி. மிக மிதமாக ஆரம்பித்து அப்படியே துள்ளிச் செல்கிறது இசை. "ஹோ பேபி ஹொ பேபி.. " என்ற வரிகள் பாடலின் ஹை லைட். வழக்கப் போல் ஸ்ரேயா கோசலின் குரலில் அப்படி ஒரு மென்மை.

2. இரும்பிலே ஒரு இதயம் - ஏ.ஆர்.ஆர்., காஸ்'என்.கிரிஸ்

பின்னிப் பெடலெடுத்திருக்கும் பாடல். கார்களில் இந்தப் பாடலைக் கேட்டு விடாதீர்கள். உங்கள் வேகம் உங்கள் கையில் இருக்காது. அப்படி ஒரு வேகம். காஸ்'என்.கிரிஸ்ன் வரிகளும் பாடிய விதமும் கலக்கல் ரகம். சில வருடங்களுக்கு டிஸ்கோக்களில் அதிகம் ஒலிக்கும் பாடலாக இருக்கும். ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது "அ..ஆ" படத்தில் வரும் "மரம் கொத்தியே.." பாடல் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

3. கிளிமஞ்சாரோ - ஜாவத் அலி, சின்மயி

முதல் முறை கேட்கும் பொழுதும் ஒன்ற முடிந்த பாடல். சின்மயியின் குரல் தானா அல்லது இசைத்தட்டில் பிழையாக எழுதிவிட்டார்களா என்று ஐயம் வரும் அளவிற்கு கலக்கலாகப் பாடியுள்ளார்.

4. புதிய மனிதா - எஸ்.பி.பி, ரகுமான், கதிஜா ரகுமான்

Ultimate Title Song!! எந்திரன் என்ற படப் பெயரை விளக்கும் வகையில் வரிகள். எஸ்.பி.பி.யின் குரல் ஒரே வரிக்குள் இரண்டு நிலைகளில் வருவது ரசிக்கும் படியாக உள்ளது.

5. பூம் பூம் டா - பலர் 

யோகி.பி ஸ்டைலில் ஒரு ராப் பாடல். நன்றாகவே வந்துள்ளது.

6. சிட்டி டான்ஸ் - பலர்

ட்ரம்ஸ், கிளாசிக்கல் என்று ஆரம்பித்து பாலேவில் பயனித்து டெக்னோவில் முடியும் தரமான ஃபுயூசன் இசை.

"அரிமா அரிமா" எனக்கு இது வரை சுமார் ரகமாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்னும் கேட்டால் பிடிக்க ஆரம்பிக்கலாம். இது வரை கேட்டதில் எந்திரன் படப் பாடல்களுக்கு 3.75 / 5 என்ற அளவில் மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

எந்திரன் பாடல்களைக் கேட்டு விட்டு களவாணியில் வரும் "சின்னச் சின்னத் தூரல் வந்து" என்ற பாடலைக் கேட்டவுடன் அப்படி ஒரு புத்துணர்வை உணர முடிகிறது. ம்ம்.. என்ன தான் மேற்கத்திய இசையை கேட்டாலும் எனக்குள் இருக்கும் கிராமத்தானிற்கு எளிமையான "ராஜா" ஸ்டைல் பாடல்களே கேட்டவுடன் பிடிக்கின்றன. 

*

9 comments:

பாலாஜி சங்கர் said...

கடைசி பத்தி சூப்பர்

vasu balaji said...

இசையை மட்டுமன்றி அதன் படைப்பாளியையும் ஒன்றாய் அலசி நான் பார்த்த முதல் விமரிசனம். அருமை செந்தில்.

கார்த்திகைப் பாண்டியன் said...

பொறுமையா எல்லாப்பாட்டையும் கேட்டு எழுதி இருக்கீங்க நண்பா.. நன்று..:-)))

Anonymous said...

அது என்ன சார் நிறைய முஸ்லிம் அல்லாத பதிவர்களுக்கு முஸ்லிம் பெயர்களை ஒழுங்காக எழுத தெரியவில்லை .A ,R ரஹ்மான் மகள் பெயர் கதிஜா கடிசியா அல்ல .அருமையா பதிவு .வாழ்த்துக்கள் .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

@ பாலாஜி சங்கர்,

நன்றிங்க

@ பாலாண்ணே,

ஒரு புது முயற்சி தாங்க. நன்றி

@ கார்த்திகைப்பாண்டியன்

நன்றிங்க நண்பா.

@ மல்லி,

நன்றிங்க. திருத்திவிட்டேன்.

சத்ரியன் said...

சிறப்பான அலசல் செந்தில்.

அப்துல்மாலிக் said...

ஒரு டிபரண்டா ஒரு படத்தின் பாடலை பற்றிய விமர்சன் அருமை

Arun Sankar said...

அண்ணா அதுக்கு காரணம்... ராஜா பாடல்களில் உயிர் இருக்கும்....செவிக்கு மட்டும் அல்ல..மனதுக்கு.... :)

R.Gopi said...

ட்ரெண்ட் மாறும் போதும், படத்திற்கேற்ப இசை தேவை எனும் போதும், களவாணி டைப் ராஜாவின் இசை படத்திற்கு பொருந்தாதே தல....

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஒரு ஸ்டைல்... அது போல், ஏ.ஆர்.ஆர். இசையமைக்கும் படங்களுக்கு அவரின் ஒரு தனி ஸ்டைல்....

எந்திரன் படம் வந்ததும், விஷுவலுடன் சேர்ந்து ரஹ்மானின் இசை மேலும் படு ஹிட் ஆகும்...

Related Posts with Thumbnails