Tuesday, August 3, 2010

வந்தவழியும் குலதெய்வமும்!!

உங்கள் குலதெய்வக் கோயிலிற்கு எத்தனை முறை சென்றிருக்கிறீர்கள்? உங்கள் குலதெய்வக் கோயில் எத்தனை வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதென்று தெரியுமா? உங்கள் பங்காளிகள் எத்தனை பேரைத் தெரியும்?


இது போன்ற கேள்விகளை நண்பர்களிடம் கேட்கும் பொழுது பெரும்பாலானோர் "என்னடா தேவையில்லாத கேள்வியை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்பது போன்ற பார்வையைத் தான் பதிலாகத் தருகிறார்கள். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வளர்ந்தோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் வாழ்நாளில் ஓரிரு முறை குலதெய்வக் கோயிலிற்கு சென்றிருப்பதே அரிது எனலாம். அதே சமயம் கிராமப்புறங்களில் வளர்ந்து வந்த நண்பர்களோ பலமுறை சென்றிருப்பதை அறிய முடிகிறது.




குலதெய்வத்திற்கும் நாம் வந்தவழிக்கும் பெரிய தொடர்பிருப்பதாலேயே குலதெய்வத்தைப் பற்றி ஒரு பதிவிடுகிறேன். நாம் எந்த நகரில் வாழ்ந்தாலும் பெரிய பதவிகளை வகித்தாலும் வந்த வழியை மறக்கக் கூடாது என்பதையே இந்தப் பதிவில் மையப் பொருள்.

நம் ஓட்டன் (பூட்டன் தந்தை), பூட்டன்(பாட்டன் தந்தை), பாட்டன் முதற்கொண்டு நம் முந்தைய தலைமுறையினர் வரை ஒரு இடத்தை, மண்ணை மிதித்திருப்போம் என்றால் அது குலதெய்வக் கோயிலைத் தவிர வேறு எதுவாக இருக்கும்? நம் குலதெய்வக் கோயில் அமைந்திருக்கும் இடம், பகுதியை வைத்து இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் என்னென்ன தொழிலைச் செய்து வந்திருக்கிறார்கள், எப்படிப் பட்ட பழக்கவழக்கத்தைக் கொண்டு வாழ்ந்தார்கள் என்ற வரலாறெல்லாம் அறிய முடிந்தால் நல்லது தானே?



எங்கள் முன்னோர்கள் கோவை அருகே சூலூரில், நொய்யல் ஆற்றங்கரையில் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். பிறகு தாத்தாவின் தந்தையின் காலத்தில் பீடித் தொழிற்சாலையை நடத்தி வந்திருக்கின்றனர். பின்னர் தொழிலில் ஏற்பட்ட போட்டியைச் சமாளிக்க முடியாமல் வேறு சில சிறு தொழில்களைச் செய்து வந்திருக்கின்றனர். பின்பு என் தாத்தாவின் காலத்தில் கோவையில் பஞ்சாலைகளில் பணியாற்றி வந்திருக்கின்றனர். பிறகு என் தந்தையின் வேலை காரணமாக உடுமலைக்கு இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது என் முன்னோரின் வரலாறு. 

இரண்டு மூன்று தலைமுறையினர் வரை நொய்யல் நதியையே நம்பி விவசாயம் செய்து வந்திருந்த எங்கள் முன்னோர்கள், காலப்போக்கில் ஏற்பட்ட நாகரிக மாற்றங்களால் வெவ்வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்து பின்பு இடமும் மாற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. கோவையின் பழைய ஊர்களான வெள்ளலூர், சூலூர், பேரூர், சிங்கநல்லூர் போன்ற ஊர்கள் எல்லாம் நொய்யல் நதியின் கரையிலேயே அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது போலவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரலாறு இருக்கும். அதனைத் தேடிப் படிப்பது நாம் வந்தவழியைப் பற்றி அறிந்து கொள்ளத் தேவையானது.

அனைவரும் வெவ்வேறு நாடுகளிலும் ஊர்களிலும் வாழ ஆரம்பித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏன் குலதெய்வம் முன்னோர் என்றெல்லாம் பார்க்க வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எழாமல் இல்லை.

நம் முன்னோரைப் பற்றி அறிய முற்படும் பொழுது அவர்களது வாழ்வியலில் உள்ள சிறப்புகள், முன்னோர் செய்த தவறுகள், அவர்கள் கண்ட வெற்றிகள் என்றெல்லாம் அறிய முடியும். நம் முன்னோரைப் பற்றி யோசிப்பதற்கு குலதெய்வக் கோயிலை விட சிறந்த இடம் இருக்க முடியுமா? நம் முன்னோரின் வாழ்வியல் முறை சிறப்பானதாக இல்லாவிட்டாலும் நாம் இன்று வந்திருக்கும் இடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியுமே. நாம் நம் முன்னோரை விட நல்ல நிலைக்கு வந்திருந்தால் அவர்களுக்கு நன்றி கூறி, ஆசி பெறலாமே!!



இன்றும் எங்கள் குலதெய்வக் கோவிலிற்குச் செல்லும் பொழுது "இக்கோயில் 1700களில் கட்டப்பட்டது" என்ற வாக்கியத்தைப் படிக்கும் பொழுது ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். ஆம், என் முன்னோர் முந்நூறு ஆண்டுகளாக அந்த இடத்திற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது பெருமிதம் தானே?

"நான் நாத்திகன், இந்த குலதெய்வ வழிபாடுகளில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை" என்று கூறுபவராக இருந்தாலும் பரவாயில்லை!!  வருடத்திற்கு ஒரு முறை நம் முன்னோர் பல்லாண்டுகளாக கால் பதித்த இடத்தை தொட்டுப்பாருங்கள்!! 

நான் வசிப்பதில் அமெரிக்காவில், ஐரோப்பாவில், சென்னையில்.. அங்கே சென்று வர நேரமில்லை என்ற காரணங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது தாய்நாட்டிற்குச் செல்லும் பொழுதோ, குலதெய்வ விழா எடுக்கும் நாளன்றோ சென்று வாருங்கள். நம்மைச் சேர்ந்தவர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களா? என்ற வியப்பு வருவதைத் தவிர்க்க முடியாது.

நம் அடுத்த சந்ததியினர்க்கு என்னென்ன விசயங்களைத் தரப்போகிறோம்?

நல்ல கல்வி, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் வீடு நிலம் என சொத்துகள்!! 

அவர்கள் வந்த வழி என்ன என்பதைத் தர வேண்டாமா? அதைக் குலதெய்வக் கோவிலில் இருந்து துவங்கிப் பாருங்களேன்!! 

*

14 comments:

Jey said...

தெளிவான கட்டுரை, நானும் இது பற்றி எழுதலாம் என்றிருந்தேன். ஒட்டு மொத்த ரத்த உறவுகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிகிர ஒரே இடம்.
அதுவும் மாசி மாத மஹா சிவராத்தியில்.

vasu balaji said...

மிகத் தேவையான இடுகை செந்தில். குல சாமியே நம் முன்னோர்னே சொல்லுவாங்க.

Unknown said...

நல்ல இடுகை பாஸ். நாங்களும் எங்கள் பங்காளிகளோடு மஹாசிவராத்திரி அன்று எங்கள் குல தெய்வம் இருக்கும் ஊரில் சந்திப்போம். முன்பு நான் சிறுவனாக இருந்த போது அந்தக் கோவில் வயலுக்கு நடுவில் ஒரு மரத்தினடியில் இருந்தது. இப்போது அந்த வயலை (வயல் இருந்த இடத்தை) பள்ளி ஒன்றின் விளையாட்டு மைதானமாக்கி விட்டார்கள். அதன் விளைவு எங்கள் குல தெய்வம் இருக்கும் இடத்தை ஒவ்வொரு வருடமும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் உதயம் said...

குலத்தொழில் இருந்தவரை, குல தெய்வங்களும், சொந்த பந்தங்களும் தேவையாக இருந்தன. இன்று அது அருகி கொண்டே வருவது வேதனை.

கண்ணகி said...

வந்தவழி மறக்காத அருமையான பதிவு...

geethappriyan said...

நண்பரே,
நல்ல பதிவு,
எங்க குல தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி,அவரை எப்படியும் வருடம் ஒருமுறை சென்று பார்த்துவிடுவேன்

எம்.எம்.அப்துல்லா said...

செந்தில் அண்ணா, சொன்ன மாதிரியே சீக்கிரம் எழுதிட்டீங்களே :)

பிரபாகர் said...

இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அதன்பின் தான் செய்து வந்திருக்கிறேன் செந்தில். இழப்புகள் அவ்வாறு மீண்டும் செய்யாவிடாமல் தற்காலிகமாய்த் தடுக்கின்றன. பார்க்கலாம், காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

இந்த இடுகையை நீங்கள் எழுதிய விதம் மிக அருமை. ரசித்துப்படித்தேன்.

பிரபாகர்...

கார்த்திகைப் பாண்டியன் said...

நம்பிக்கைகள்..:-))

Unknown said...

இதுவரை எல்லா விஷயங்களையும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று அதன்பின் தான் செய்து வந்திருக்கிறேன்
thankyou thankyou thankyou good article

ஈரோடு கதிர் said...

மிக அருமையான பகிர்வு செந்தில்

எங்கள் குல தெய்வம், மூன்று சாதிக்காரர்களுக்கு சொந்தமானது. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் அந்த மூன்று சாதிக்காரர்களும் ஒற்றுமையாய் பங்கிட்டு சாமி கும்பிட்டது ஆச்சர்யமாகவும் இருக்கிறது

manian said...

Dear Sir

It is absolutely necessary post and it is a reminder for me personally. Here I want to share something. I am a brahmin - iyer community and my father or my grand father has never visited our temple. Through an Astrologer, I came to know it is Bhadrakali situated at Brahmadesam in Tirunelveli district. He also said that the legs of the deity will not visible and they are below the ground and it is our own family temple and no body has done any worship for more than 100 years. He also said that many of the problems our family is facing now because of non worship of the family deity. Now for the past one year I am searching for the temple; but could not located in Brhamadesam or i9n its surroundings.
Any of the reader can help me through ESP also.

With regards
SS

க.பாலாசி said...

மிக நல்ல கட்டுரைங்க...இன்றும் பல குடும்பங்கள்ல வருஷத்துக்கு ஒரு தடவயாச்சும் குலத்தெய்வத்துக்கு கோயிருக்கு படையல் வச்சிகிட்டுத்தான் இருக்காங்க.. மிகப்பாரம்பரியமான இந்த வழக்காவது நம்மிடையே நின்றுபோகாம இருக்கேன்னு சந்தோஷமா இருக்குங்க...

இந்த ஒற்றுமையத்தரக்கூடிய விழா நம்முடைய சந்ததிகளுக்கு தொடரணும்.. அத நாமதான் செய்யணும்...

ராவணன் said...

குலதெய்வம் என்பது நம் முன்னோர்கள் வசித்த இடத்தில் இருக்கும்,அது 300 ஆண்டுகள் பழமையானதா,இல்லை 3000 ஆண்டுகள் பழமையானதா என்பது கேள்வியல்ல?குலதெய்வத்தை மறந்து திருப்பதி,பழநி என்று செல்வதை நினைக்கும் போது உங்கள் பதிவு.தெய்வம் என்பதே நம் முன்னோர்களே...இது எப்படி..?

Related Posts with Thumbnails