"மாப்ளே, சித்ரா பௌர்னமி வந்தாச்சு.. இந்த வருஷம் வெள்ளியங்கிரி மலைக்குப் போலாமா?"
நம்ம கோயம்புத்தூர் பக்கம் இருக்கற இளந்தாரிப் பசங்களுக்கு சித்திரை மாசம் பௌர்னமி வந்திருச்சுன்னா, வெள்ளியங்கிரி மலைக்கு போறத பத்தித்தான் பேச்சு!!
ஏப்பா, இளந்தாரிப்பசங்க ஊட்டி, கொடைக்கானல் போறத தான் பாக்க முடியும். இது என்ன புதுசா இருக்கேனு நினைச்சீங்கன்னா, வெள்ளியங்கிரி மலை பற்றி ஒரு அறிமுகம்!!
கோவை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு வழிபாட்டுத்தலம். ஏழு மலை கடந்து மலை உச்சிக்குச் சென்றால் நாம் தரிசிப்பது ஒரு சிவலிங்கம். ஈஷா யோகா மையம் இருப்பதும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் தான்!!
நாம் வழக்கமாக செல்லும் திருப்பதி, பழநி போன்ற மலைகளுக்கு இருக்கற மாதிரி பேருந்துகளோ, வின்ச் சர்வீஸோ வெள்ளியங்கிரி மலைக்கு கிடையாது. இங்கே இருப்பதெல்லாம், "நடைராஜா சர்வீஸ்" தான்!! மேலும், மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களும் போக முடியும். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கு, சித்திரா பௌர்னமிக்கு பிறகு வரும் 10 நாட்கள் மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் இரவில் தான். பகலில் என்றால் வெயில் சுட்டெரித்துவிடும். கரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலைக்கு மின்சார வெளிச்சம் கிடையாது. நடந்து செல்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒளி நிலவொளிதான்!! இதனால தான் தேய்பிறை காலத்துல மலை ஏறுவதும்!!
சித்திரை மாதத்தில் மட்டும் மலை ஏறுவதற்கும் ஒரு காரணம் காட்டில் உள்ள யானை, மான் போன்ற மிருகங்கள் எல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். சித்திரை மாத்திற்கு பிறகு என்றால், தென்மேற்குப் பருவ மழை பெய்ய ஆரம்பித்து விடும். கடும்குளிர் காரணமாக குளிர்காலத்திலும் மக்கள் இங்கே போவது கிடையாது.
நிலவொளியில், நண்பர்களுடன் மலை ஏற்றம், கரடு முரடான மலைப்பாதை என கேட்க சுவாரஸ்யமா இருக்கா?
இத விட சுவாரஸ்யம் மலைப்பாதை தான். ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு விதம். இப்படி மலை ஏர்றதுக்கு முன்னாடி 4 அடி உயரம் உள்ள ஒரு மூங்கில் குச்சியை வாங்கறது மிகவும் அவசியம்!!
பத்து மணி வாக்கில் முதல் மலையை ஏற ஆரம்பித்தால், லேசாக வியர்க்க ஆரம்பிக்கும். முதல் மலை முழுவதும், கற்களால் ஆனா படிக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும். ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை உயரம் இருக்கும். ஒரு அரை மணி கழிந்த பிறகு நாம் அணிந்திருக்கும் பணியன், சட்டை எல்லாம் கசக்கிப் பிழியும் அளவிற்கு வியர்த்து விடும். முதல் மலை மட்டும் ஒரு நாலு பழநி மலை அளவிற்கு உயரம் இருக்கும். அப்படியே, ஏறி வரும் போது நம்முடன் வரும் நண்பர்கள் புலம்ப ஆரம்பிப்பது...
"மாப்ளே, இன்னும் முதல் மலையே முடியல.. என்னால இதுக்கு மேல ஏற முடியல.. நீங்க வேணா போயிட்டு வாங்க!!" என்பது தான்.
ரெண்டாவது மலைக்கு வந்துட்டோம்கறது, படிகள் குறைய ஆரம்பிக்கறதுல இருந்து தெரிஞ்சுக்கலாம். ரெண்டாவது மற்றும் மூனாவது மலை முழுவதும் வழுக்குப் பாறைகளை செதுக்கி படிகள் கட்டி விட்டுருப்பாங்க. இது மாதிரி வழுக்கப் பாதைகளில் விழுந்திராமல் இருக்கத்தான் மூங்கில் குச்சிய வாங்க சொல்றது!!
இது வரை வியர்த்தது லேசா, குளிர ஆரம்பிச்சதுன்னா நாம நாலாவது மலைக்கு வந்துட்டோம்னு அர்த்தம். இந்த மலை முழுவதும் மரங்களின் வேர்களுக்கு நடுவே தான் பாதை அமைந்திருக்கும். நிலவொளியில், குளிர்காற்றை சுவாசித்துக் கொண்டு, மரங்களின் நடுவே செல்வது ஒரு அருமையான அனுபவம்.
அடர்ந்த மரங்களின் நடுவே சென்ற பயணம், மரங்களின் அடர்த்தி குறைய ஆரம்பித்து "சோலா" எனப்படும் சிறிய தாவரங்களைப் பார்க்க நேர்ந்தால், நாம் கடப்பது ஐந்தாவது மலையை என்று அர்த்தம்!! ஐந்தாவது மலை முழுவதும் சேறு போன்ற வழுவழுப்பான மண்ணப் பார்க்கலாம். இங்கே நன்றாக குளிரவும் ஆரம்பிக்கும். ஐந்தாவது மலையின் உச்சியில் செல்லும் போது, மலைவாசிகளின் கடையில் அஞ்சு ரூபாக்கு ஒரு சுக்கு காப்பி கிடைக்கும் பாருங்க.. அந்தக் குளிர்ல, சுக்குக் காப்பிக்கு நிகர் வேறெதுவும் கிடையாது.
அதிகாலை மூன்று மணி, உங்க நண்பர்களுடன் நிலவொளியில் மலையேற்றம் , குளிந்த மூலிகைக்காற்று, குளிர்க்கு இதமா சுக்குக்காப்பினு யோசிச்சுப் பாருங்க?
ஐந்தாவது மலையில் இருந்து ஆறாவது மலைக்கு உட்கார்ந்தும் டேக்கியும் தான் போகனும். ஏன்னா, ஆறாவது மலைக்குச் செல்ல செங்குத்தாக கீழே போக வேண்டும். கீழ இறங்கும் போது, அப்படியே அன்னாந்து மேலே பார்த்தா, கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் "மின்மினி பூச்சி" மாதிரி வெளிச்சம் தெரியும். ஏழாவது மலைல நமக்கு முன்னாடி ஏறீட்டு இறக்கறவங்க அடிக்கற "டார்ச் லைட்" வெளிச்சம் தான் அது.
ஆறாவது மலையை அடைந்தால் "ஆண்டி சுனை"னு ஒரு சின்ன நீர்த்தேக்கம் இருக்கும். இங்கே, வியர்வை எல்லாம் போகற மாதிரி ஒரு காக்கா குளியல போட வேண்டியது தான். உறையற அளவு குளிர்ல எங்க நிதானமா குளிக்கறது?
அடுத்து ஏழாவது மலை. நம்ம வீட்டுல எல்லாம், கோயிலுக்கு பய பக்தியோட போகனும்னு சொல்லுவாங்க. இந்த பயபக்திய ஏழாவது மலை ஏறும்போது தான் உணர முடியும். ஏன்னா, மிகவும் செங்குத்தான மலை. ஊர்ந்தும் தவழ்ந்தும் தான் போகனும். தவறி விழுந்தா பள்ளத்தாக்கு. அப்படியே அரைமணி நேரம், குறிஞ்சி மலர்களுக்கு நடுவே சென்றால் நாம் அடைவது வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதியை!!
வெள்ளியங்கிரி ஆண்டவரின் சன்னதி, இரண்டு கற்களுக்கு நடுவே அமைந்திருக்கும். அங்கே ஒரு சின்ன சிவலிங்கம், ஒரு பெரியவர் தீப ஆராதனை காட்டி திருநீறு தருவார். இறைவன் சன்னதியில் இருந்து வெளியே வரும்போது, நமது உடலும் உள்ளமும் சுத்தமாக இருப்பதை உணர முடியும்.
மலைச்சரிவில் அமர்ந்து ஓய்வெடுக்கும் போது, சின்ன தாக சூரிய ஒளி பரவ ஆரம்பிக்கும். ஒரு பக்கம் சூரிய உதயம், மென்மேகங்கள், இன்னொரு பக்கம் தூரத்தில் தெரியும் சிறுவானி நீர்த்தேக்கம், வாளையார் மலைத்தொடர், கேரள மலைத்தொடர் என காணும் காட்சி இருக்கே!!
அப்படியே மலையில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தால், இரவில் தடவிக்கொண்டே வந்ததெல்லாம் பச்சைப்பசேல்!!
காலை எட்டு மணிக்குள் அடிவாரத்திற்கு சேர்ந்து விட்டால் முதல் மலையில் படிக்கட்டுச் சூட்டில் இருந்து தப்பிக்கலாம். மீண்டும் செல்போன் சத்தம், இறைச்சல்!!
வெள்ளியங்கிரி மலைப் பயணம், ஆத்திகர்களுக்கு இறைவனை இயற்கையுடன் தரிசிக்கும் ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கும். நாத்திகர்களுக்கு, மலையேற்றப் பயிற்சியாகவும், இயற்கையின் அருமையை உணரவும் நல்ல வாய்ப்பாக இருக்கும்!! எதுவாக இருந்தாலும் நல்லது தானே!!
வெள்ளியங்கிரி மலைக்குச் சென்று வந்தால் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளலாம்!! " நீங்க ஆரோக்கியமானவரா?"
*****************************************************************************
வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல - கோவை காந்திபுரம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து சித்திரா பௌர்னமிக்குப் பிறகு இரண்டு வாரத்திற்கு, இரவு 8 மணி முதல் சிறப்புப் பேருந்துகள் கிடைக்கும். வெள்ளியங்கிரி மலையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கோவையில் உள்ள நண்பர்களையோ, நண்பர்களின் தந்தையையோ தாத்தாவையோ கேளுங்கள்!!
....