மேலே குறிப்பிட்ட குறளின் படி நாம் நடக்கிறோமா?
நாம் அன்றாடம் படித்து, பார்த்து, கேட்டு வரும் செய்திகள் தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறது. பத்திரிக்கைகளைப் படிப்பதை விட, செய்திச்சேனல்களையும், அவர்களது வலைத்தளங்களைப் படிப்பதில் ஆர்வம் அதிகரித்து வருவது தான் இந்த கேள்விக்குக் காரணம்.
பத்திரிக்கைகளிலும், தமிழ் தொலைக்காட்சிகளிலும் எவை கட்சிச்சார்புடையவை, மதச்சார்புடையவை என்று ஓரளவு நமக்குத் தெரியும். அதுவே ஆங்கில சேனல்கள் என்றால், ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வது சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.
கடந்த ஓரிரு மாதங்களாக செய்திச் சேனல்களைப் பார்த்து வருபவராக இருந்தால் இது நன்றாகப் புரியும்.
"அரசியலையும் தேர்தலையும் தவிர வேற செய்திகளே கிடையாதா?" என்று நினைக்கும் அளவிற்கு திரும்ப திரும்ப ஒரே செய்தி! நாள் முழுவதும் காட்டும் செய்தியை பிரபல நாளிதழ்கள் என்றால் ஒரே பக்கத்தில் முடித்துவிடுவார்கள்.
பரபரப்பான செய்திகள் எப்போது கிடைக்கும் என்று அலையும் போக்கும், தாங்கள் தான் முதலில் இந்த செய்தியைக் கொடுத்தோம் என்றும் தம்பட்டம் அடிக்கும் போக்கும் அதிகரிப்பது தான் இதற்குக் காரணம். இன்றைய பரபரப்பு செய்தி, நாளை தடம் தெரியாமல் போய்விடுகிறது.
ஓரிரு வாரங்களாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடித்த, சிங்கூர் டாடா பிரச்சனையைப் பற்றியோ, அனு ஆயுத ஒப்பந்தந்தத்தின் இன்றைய நிலை பற்றியோ இவர்களுக்கு கவலை இல்லை. மேலும், மும்பையில், பிகாரிகளுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றிய பரபரப்பு, அடுத்து வந்த மும்பை குண்டு வெடிப்பால் மறைந்து விட்டது.
பரபரப்புடன் காட்டிய ஆருஷி கொலை வழக்கின் இன்றைய நிலை என்ன? இந்த செய்திச்சேனல்கள் ஆருஷியையும், அவரது பெற்றோரையும் இழிவுபடுத்தியது தான் மிச்சம்.
தேர்தல் முடிவிற்கு முன்பு வரை, இந்தக் கட்சி தான் வெற்றி பெரும் என்று கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுவிட்டு, தேர்தலின் முடிவு வேறு மாதிரி மாறிய பிறகு, தாங்கள் தான் முதலே இதைக் வெளியிட்டோம் என்று கூறுவதை என்னவென்று சொல்ல? இது போன்ற சமயங்களில் நமக்கு எழும் கேள்வி, "இவர்களுக்கு நன்னெறியைப் (ethics) பற்றித் தெரியுமா?" என்பது தான்.
ஒவ்வொரு செய்தியையும் தீர அலசுகிறார்களா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பல தரப்பினர்களையும் ஒன்றாக அழைத்து மோத விடுவதும், அவர்கள் கருத்துகளைக் கூற வரும் போது தடுத்து நிறுத்துவதும் ஏதோ சண்டைக் காட்சியைப் பார்க்கும் உணர்வே நமக்கு வருகிறது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போருக்கு என்ன பலன் கிடைக்கும்?
இது போன்ற செய்திச்சேனல்கள் அளிக்கும் செய்திகள் அனைத்தும் நடிக நடிகைகளைப் பற்றிய வதந்தியைப் போன்றது தான்! டி.ஆர்.பி ரேட்டிங்கிற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இவர்கள் மாறுவார்களா என்பது சந்தேகமே!!
இதற்கிடையில், "இத்தன நியூஸ் சேனல் இருக்கும் போது நியூஸ் பேப்பர் எதுக்கு?" என்று நண்பர்கள் கூறுவது கவலையளிக்கிறது.
நமது ஊரில் நடக்கும் நிகழ்வுகளின் நிலையையே சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்தால், உலகளவில் நடக்கும் நிகழ்வுகளை எப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியும்?
உதாரணத்திற்கு, பங்குச்சந்தை உயர்வது சம்பந்தமான செய்திகளைப் பார்த்தால் இந்தியப் பொருளாதாரமே உயர்வது போல தோற்றமளிக்கும். பங்குச்சந்தையில் கணக்கு வைத்திருப்பதோ ஒரு சதவிதத்தினர் தான்!!
அதேபோல இன்றைய தேதியில் முக்கியமான பிரச்சனையாக இருக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை, ஆங்கில சேனல்களை மட்டும் பார்ப்பவர்களுக்கு, ஏதோ விடுதலைப் புலிகளின் பிரச்சனை என்றோ, தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சனை என்றோ தான் காட்சி அளிக்கிறது.
ஒவ்வொரு விஷயத்திலும் தீர ஆராய்ந்து புரிந்து வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
அதை விடுத்து "பரபரப்பிற்கு மட்டும் மதிப்பளித்தோம் என்றால் நாம் மயக்கத்தில் இருக்கிறோம்" என்றே அர்த்தம்!!
2 comments:
//”இது போன்ற "முழுமையாக அலசப்படாத" செய்திகளைப் பார்த்து விட்டு, இணையதளங்களில், "தமிழர்கள் எங்கு இருந்தாலும் பிரச்சனை தான். மலேசியாவிலும் பிரச்சனை, இலங்கையிலும் பிரச்சனை..." என்ற ரீதியில் பயனர்கள் விவாதிப்பதை என்னவென்று சொல்ல?” //
இது வரை ஒரு 1000 முறையாவது கூறி நண்பர்களாலேயே ஏளனம் பேசப் பட்டேன்.
நல்ல பதிவு
அன்புடன்
.கவி.
is there any restrictions like girls are not allowed to climb velliangiri hill
Post a Comment