உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால், அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா?"
கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொலைக்காட்சி நேயர்கள் முன்னிலையில் ஒரு பெண்ணிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது!
அது... 'சச் கா சாம்னா' என்ற ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில்!
"உண்மையைப் பேசுங்கள் ஒரு கோடியை வெல்லுங்கள்" என்ற விளம்பரத்துடன் வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நம் நாடு முழுவதும் பல்வேறு விவாதங்களைக் எழுப்பியுள்ளது.
'சச் கா சாம்னா' (Sacch Ka Saamna) என்றால் 'உண்மையைச் சந்தியுங்கள்' என்று பொருள்.
அமெரிக்காவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து, அங்கேயும் சர்ச்சைக்குள்ளான 'தி முமென்ட் ஆஃப் ட்ரூத்' (The Moment of Truth) என்ற ரியாலிட்டி ஷோவின் தழுவல் தான் 'சச் கா சாம்னா'.
பால்ய பருவத்தில் இருந்து சிநேகிதர்களாக வலம் வந்த சச்சின் - காம்ளி நட்பை திடீரென கனமாக அசைத்துப் பார்த்தது, பவுல்ட் ஆக்க முனைந்ததே இந்நிகழ்ச்சிதான்.
இந்த ரியாலிட்டி ஷோவில் கேமராவுக்கு முன்பு அமர்வதற்கு முன்னதாக, போட்டியில் பங்கேற்கும் நபரிடம் 'பாலிகிராப்' (polygraph) கருவி மூலம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படும். குற்றவாளிகளிடம் இருந்து உண்மையைக் கண்டறிவதற்கு போலீஸார் நடத்துவார்களே அதுபோலத்தான். மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும். கேள்விக்கான பதிலைச் சொல்லும் போது ஏற்படும் இதயத் துடிப்பின் மாறுதல்களை வைத்து, போட்டியாளர் சொல்வது உண்மையா பொய்யா என்று முடிவுசெய்யப்படும். கேட்கப்படும் கேள்விகளும், அளித்த பதில்களும் போட்டியாளரின் நினைவில் இருக்காது.

மேலே சொன்ன கேள்வியை எதிர்கொண்டது திருமதி. ஸ்மிதா மிதாய். அவர் எதிர்கொண்ட அனைத்து விதமான கேள்விகளுக்கும் நன்றாக பதிலளித்து வந்தவர் சோதனைக் கட்டத்தை அடைந்தார்.
அவரிடம் கேட்ட 10வது கேள்வி,
"உங்கள் கணவரை கொல்ல வேண்டும் என்று என்றாவது நினைத்ததுண்டா?"
"ஆம், நினைத்ததுண்டு! அதிகமாகக் குடிக்கிறார் என்பதால் அப்படி நினைத்ததுண்டு"
பாலிகிராப் சோதனையின் முடிவு, ஸ்மிதா சொல்வது உண்மையே! அரங்கம் அதிர்ச்சியடைகிறது. நேரில் நிகழ்ச்சியைப் பார்க்கும் கணவரின் கண்கள் கலங்குகின்றன!
11வது கேள்வி..
"உங்கள் திருமண வாழ்க்கையைத் தொடர்வது உங்கள் குழந்தைகளுக்காகத் தான். சரியா?
"இல்லை. அப்படி ஒரு எண்ணம் இது வரை வந்ததில்லை.."
பாலிகிராப் சோதனையின் முடிவு, ஸ்மிதா சொல்வது உண்மையே! நேரில் பார்க்கும் கணவருக்கோ நிம்மதிப் பெருமூச்சு!
12வது கேள்வி நான் மேலே குறிப்பிட்டது..
"உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால் அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா?"
தொலைக்காட்சியைப் பார்க்கும் நமக்கு " அடப்பாவிகளா! என்னவெல்லாம் கேட்கிறானுக பாரேன்.." என்று ஆவல் கூடுகிறது (கண்டிப்பாக இந்தக் கேள்வி அனைவரையும் உலக்கி இருக்கும் என்று நினைக்கிறேன்) அவர் கூறவிருக்கும் பதிலை எதிர் நோக்கி..
"இல்லை" என்றார் ஸ்மிதா.
"தவறு. ஸ்மிதா பொய் கூறுகிறார்" என்றது பாலிகிராப் முடிவு.
"இல்லை. அப்படி இருக்க வாய்ப்பில்லை" என்றார் ஸ்மிதா..
"பாலிகிராப் முடிவு பொய் என்று கூறியதால், நீங்கள் இதுவரை வென்ற 10 லட்சத்தையும் இழக்கிறீர்கள்" என்று முடிக்கிறார் நிகழ்ச்சியைக் தொகுக்கும் ராஜீவ்.
"தவறு. ஸ்மிதா பொய் கூறுகிறார்" என்றது பாலிகிராப் முடிவு.
"இல்லை. அப்படி இருக்க வாய்ப்பில்லை" என்றார் ஸ்மிதா..
"பாலிகிராப் முடிவு பொய் என்று கூறியதால், நீங்கள் இதுவரை வென்ற 10 லட்சத்தையும் இழக்கிறீர்கள்" என்று முடிக்கிறார் நிகழ்ச்சியைக் தொகுக்கும் ராஜீவ்.
ஸ்மிதாவின் கணவர் கண்ணாடியைக் கழட்டி துடைக்கிறார் கண்ணீரை!!
அடுத்த நாள் அலுவலகத்தில் இதே பேச்சுத் தான். எப்படி இப்படிக் கேட்கிறார்கள்? இதே கேள்வியை நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம் என்பது போன்ற விவாதங்கள்.
ஸ்மிதா மிதாய் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். தான் கூறும் பதில்களுக்கு வாழ்நாள் முழுவதும் பதிலளிக்க வேண்டிய சமூக சூழ்நிலை!
**********************

பிறகொரு நாள் கலந்து கொண்ட "யூசூஃப் ஹூசைன்" என்ற இந்தி நடிகரிடம் கேட்ட கேள்விகள் இன்னும் விபரீதமானவை. இவர் மூன்று முறை விவாகரத்து செய்தவர். தற்போது தனது துணைவியோடு சேர்ந்து வாழ்கிறார் ( லிவிங்-டுகெதர் ). இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரது பதில் பெட்டியில்..
1. உங்க வயச சொல்றதுக்கு தயக்கம் காட்டுவீங்களா? (ஆம்) ( அவருக்கு வயது 60 இருக்கும்)
2. உங்க மெத்தை விரிப்பை நீங்களே மடிக்கும் பழக்கமுள்ளவரா? (ஆம்)
3. உங்களுக்கு பாராட்டு கிடைக்கலன்னா வருத்தப் படுவீங்களா? ( ஆம் ) ( மனித இயல்பு தானே! )
4. உங்க கனவுக் கன்னிக்காக காத்திருக்கிறீர்களா? ( ஆம்) ( அவர் நாலாவது பெண்ணுடன் வாழ்கிறார் என்பதை நினைவில் கொள்க! )
5. உங்க குடும்பத்துக்கு காசு அனுப்பறத விட இன்னும் அதிகமா செய்திருக்கலாம்னு நீங்க நினைக்கறீங்களா? (இல்லை )
6. உங்க மூன்று திருமண வாழ்க்கையின் முறிவைத் தடுக்க ஓரளவாவது முயன்றதுண்டா? ( இல்லை )
7. உங்களுக்கு 6 சகோதரர்கள் என்றீர்களே, நீங்க தான் உங்க அம்மாவுக்கு சிறந்த மகன்னு நினைத்ததுண்டா? ( ஆம் )
8. நீங்கள் விலைமாதருடன் உறவு கொண்டதுண்டா? (ஆம் )
9. திருமணம் செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தினால் உங்கள் துணைவியை விட்டு விடுவீர்களா? (ஆம் )
இப்படி அனைத்து கேள்விகளுக்கு இயல்பாக (?? ) பதிலளித்த ஹூசைன் மாட்டிக் கொண்டது..
13. உங்கள் மகளுக்கு நல்ல தந்தையாக இருந்திருக்கிறீர்களா? என்ற கேள்வியில்
"ஆம்" என்ற அவரது பதில் "தவறு" என்றது பாலிகிராப்! அவருக்கும் நேரில் பார்க்கும் அவரது மகளிற்கும் அதிர்ச்சி! நிகழ்ச்சி முடிவடைகிறது.
**************************************
இப்படி ஒரு நிகழ்ச்சி தேவைதானா? நம் நாட்டின் பண்பாடு என்னாவது? குடும்ப விவகாரத்தைக் கோடிக்கணக்கானோர் பார்க்கச் சபைக்குக் கொண்டுவருவது சரியா? என்று ஒரு தரப்பினரும், "பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் சுத்த வாயளவுப் பேச்சு. எங்க தான் தப்பு நடக்காமல் இருக்கிறது" என்று மற்றொரு தரப்பினரும் வாதிட...
"ஒரு கருவியின் முடிவை வைத்து ஒருவரின் நற்குணத்தைச் சீண்டுவது சரியா?" என்றும் விவாதங்கள் பரவலாக இருக்கிறது. (தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் தான் இந்நிகழ்ச்சி மிகப் பிரபலம்) பணத்துக்கா எத்தகைய பதிலையும் சஞ்சலமில்லாமல் கூறும் போக்கு அதிகரிக்கலாம். "லட்சங்களில் பரிசுப் பணம் வாங்குவோர்க்குக் கிடைக்கும் விளம்பரம்" கண்டிப்பாக எப்படி சஞ்சலமில்லாமல் பதில் (பொய்) சொல்வது என்பதையே ஊக்குவிக்கும்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."
என்று திருவள்ளுவர் கூறியபடி பார்த்தால், 'குடும்பத்துக்கோ சமூகத்துக்கோ தீமை விளைவிக்காத சொல்லைக் கூறுவதே சரி!'
"பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்"
போன்ற வாழ்க்கைக் கோட்பாடுகள் எல்லாம் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, நிகழ்ச்சியை வடிவமைத்த வெளிநாட்டினருக்கோ தெரியுமா? என்பது சமூக ஆர்வலர்கள் சிலரது கேள்வி.

இதைத் தொடர்ந்து, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க முன்வந்தது.
இந்தச் சூழலில், தற்போது "உண்மையைப் பேசச் சொல்லும் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்ய முடியாது," என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பளித்துள்ளது.
சச் கா சாம்னாவுக்கு தடைவிதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், "இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியால் மட்டுமே நம்முடைய கலாச்சாரம் பாதிக்கப்பட்டு விடாது," என்று கூறியிருக்கிறது.
கோர்ட் 'ஓகே' சொல்லிவிட்டதில் மகிழ்வுடன் அடுத்தகட்ட நிகழ்ச்சிகளுக்கான கேள்விகளைத் தயார் செய்து கொண்டிருக்கும் சச் கா சாம்னா நிகழ்ச்சிக் குழு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் பச்சை விளக்குக்காக காத்திருக்கிறது.
மத்திய அரசின் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி யோசிப்பதை விட்டு விட்டு, உயர் நீதிமன்றம் சொன்ன ஒரு விஷயத்தை மக்கள் ஃபாலோ பண்ணலாமே என்கின்றனர், நடுநிலையாளர்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுதாரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அப்படி என்ன அறிவுரைச் சொன்னது..?
"இது காந்தியின் பூமி. ஆனால் எவரும் காந்தியை பின்பற்றுவதில்லை என்றே தெரிகிறது. காந்தியின் கொள்கையான 'தீயனவற்றைப் பார்க்காதே' என்பதை கடைபிடியுங்கள். நீங்கள் ஏன் டி.வி.யை ஆஃப் செய்யக் கூடாது?"
*****************************************************************
அடுத்தவர் விடயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ள நமக்கென்ன இன்னொரு விறுவிறுப்பான (??) நிகழ்ச்சி கிடைத்திருக்கிறது. அவ்வளவே!!
******************************************************************
உங்கள் கருத்துகளை கீழே பகிரவும். இந்தப் பதிவு பிடித்திருந்தால் தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலும் வாக்களியுங்கள்!