Tuesday, July 14, 2009

மலையோடு உறவாடி காற்றோடு விளையாடி!

"மாப்ளே, என்ன தான் சொல்லு ஸ்கூல் லைஃப் மாதிரி வராதுடா.."

நண்பர்கள சந்திக்கும் போது நாம சொல்ற வழக்கமான வார்த்தைகள் இவை. அதுவும் ஆரம்ப கால நினைவுகள் இருக்கே! அதைப்பற்றி இந்த தொடர் பதிவு எழுத என்னை அழைத்த நண்பர் வினோத்துக்கு நன்றி!

ஆரம்ப கால நினைவகள அசைப்போட்டா முதல்ல வர்றது எங்க தாத்தா பாட்டி தாங்க! ஏன்னா நான் ரெண்டாவது வரைக்கும் அவங்க கவனிப்புல மேட்டுப்பாளையத்துல தான் படிச்சேன். அப்புறம் தான் உடுமலை..

எங்க தாத்தா காலைல என்னைய எழுப்பறதே "கோவை ஆல் இந்தியா ரேடியோல வர்ற வந்தேமாதரத்த போட்டுட்டுத்தான். என்னை சிரிக்க வைக்க ஒரு ஆட்டம் போடுவாரு பாருங்க.. அப்படியே சிரிப்போட ஆரம்பிக்கும் நம்ம பொழுது.

அப்புறம் குளிச்சு, சாமி கும்பிட வச்சு, திருநீறு பட்டை, சந்தனப்பொட்டு அதுக்கு மேல குங்குமப்பொட்டு எல்லாம் வச்சிட்டு "பக்திப் பழமா.." கூட்டீட்டுப் போய் St. Joseph பள்ளிக்குப் போனா, அங்க இருக்கற மிஸ்ஸுங்களுக்கு ஒரே சிரிப்பு தான்! அப்படி ஆரம்பிச்சதுங்க என்னோட பள்ளி வாழ்க்கை..

எதோ ஒரு சண்டைல பக்கத்துல இருந்த பையனோட ஸ்லேட்ட உடைச்சுட்டேன்னு L.K.G UMA MISS என் கூட டூ விட்டது இன்னும் நினைவுலயே இருக்குங்க!

ஒன்னாப்பு நமக்கு வேற பள்ளி(METRO JUNIOR). கொஞ்ச தூரம் நடந்து....பத்ரகாளியம்மன்கோயில் ரோடு, ஊட்டி ரயில் ரோடு எல்லாம் கடந்து போகனும். "கண்ணு... ரோட்டக் கடக்கறதுக்கு முன்னால ரெண்டு பக்கமும் வண்டி வருதான்னு பாத்துட்டு சூதானமாப் போகனும்"னு எங்க ஆத்தா சொன்னது இப்ப ரோட்டக் கடக்கும் போது கூட நினைவுக்கு வருவதுண்டு. சில நாள் வீட்டுக்கு வரும்போது ஊட்டி ரயிலுக்கு டாடா காட்டறது ஒரு மசிழ்ச்சி வரும் பாருங்க.
ஸ்கூல்ல இருந்து வீட்டுக்கு வரும்போது என்னோட டிபன் பாக்ஸ தொலைச்சுட்டு அழுதது இன்னும் நினைவுலயே இருக்குங்க.



பள்ளிக்குப் போயிட்டு வந்தா ஆரஞ்சு மிட்டாய், ராய் வடை, பொரி கடலை எல்லாம் தான் நமக்கு ஸ்னாக்ஸ்!

ஊட்டி மலைத்தொடரக் காட்டி, "ஆத்தா அந்த மலைல ஏன் பள்ளமா இருக்குன்னு", கேட்டா.."அங்க தான் சூரனக் கொன்னு புதைச்சாங்களாம்"னு எங்க ஆத்தா கதை சொல்லுவாங்க. ராமாயனம், மகாபாரதம்னு எத்தனை கதைகள்!

அப்புறம் மூனாவதுக்கு வந்து சேர்ந்தது உடுமலை RGM பள்ளில. அப்ப ஆரம்பிச்சது 12 வரைக்கும் ஒரே பள்ளி தான்.



படிப்பு, வகுப்பு தவிர்த்து, எங்க பள்ளியப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சவுடனே நினைவுக்கு வர்றது காத்து, சருக்கற விளையாட்டு, ஊஞ்சல், சுத்து ராட்டனம் எல்லாம் தாங்க. காலைல ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே ஸ்கூலுக்கு போய் சருக்கி விளையாடினாத்தான் ஒரு நிறைவு. ஜூன் மாசம் புதுசா டிரௌசர் தைச்சாங்கன்னு காப்பரிச்சை வர்றதுக்கு முன்னாடியே பின்னாடி ஓட்டை வந்துடும்.

எங்க ஊர்க் காத்தப் பத்தி சொல்லனும்னா, ஜன்னல திறந்து வைச்சா புத்தகமெல்லாம் பறக்கும். அதனால தாங்க எங்க ஊர காற்றாலை நகரம்னு சொல்றாங்க.

நம்ம வீடு மடத்துக்குளம்ங்கற ஊர்ல. பள்ளிக்குப் போக தினமும் 15 கிமி பஸ் பயனம் தான். அந்த பயன நினைவுகள "பாட்டு பஸ்"னு ஒரு பதிவு எழுதியுள்ளேன்.

வீட்டுக்கு வந்தவுடனே நண்பர்களோட டயர் வண்டி எடுத்துட்டு கிளம்பீடறது. ஆனா காத்துக் காலத்துல டயர் வண்டி ஓட்டறது கொஞ்சம் கடினம். அப்ப எல்லாம் ரோட்டுல ஒரு சிகரட் அட்டை கூட கிடைக்காது. ஏன்னா அத எடுத்துத் தான செதுக்கு சீட்டு விளையாட முடியும். சிகரட் அட்டைகள சதுரமா அடுக்கி வச்சி கல்லால அடிச்சு விளையாடறது தான் செதுக்கு சீட்டு விளையாட்டு. Willsனா - 1000, Scissors - 25, GoldFlake - 50, Kings - 100, NorthPole-500னு மதிப்பு வேற.

இந்த விளையாட்டுக்கான கல்லை, நண்பர்கள் கூட சேர்ந்து எங்க ஊரு அமராவதி ஆத்துல போய் எடுக்கறதுண்டு. ஆத்துல தண்ணிக்குள்ள ஒளிஞ்சு விளையாட்டு, தொட்டு விளையாட்டு எல்லாம் அருமையா நடக்கும்ங்க. சனி, ஞாயிறுன்னா நம்ம இருக்கறதே ஆத்துல தான். தூரத்துல தெரியற மலைத்தொடர்கள ரசிச்சிட்டே கண் சிவக்கற வரைக்கும் விளையாடுனத நினைச்சா.. அத எல்லாம் ஒரு காலம்ங்க!


அடுத்த நாள் திரும்ப பள்ளிக்கு வந்தா சருக்கு, கால்பந்துனு விளையாட்டு. அந்த அளவுக்கு விளையாட்டு மைதானம் எல்லாம் சென்னை மாதிரி பெரிய ஊர்ல கூட கிடையாதுங்க. நல்ல காத்து, நல்ல நண்பர்கள், நல்ல பள்ளி இத விட வேற என்னங்க வேணும் பள்ளி வாழ்க்கைல!

என்னைய ஆள் ஆக்குனதுல இந்த பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் பெரும் பங்கு உண்டுங்க. இப்ப இருக்கற ஓரளவு தமிழார்வத்துக்குக் காரணம் என்னோட தமிழாசிரியைகள் தாங்க. என் திருமணத்துக்குக் கூட நாலு ஆசிரியர்கள் வந்து வாழ்த்தீட்டுப் போனாங்க!

நண்பர்களப் பத்தி சொல்லனும்னா.. குறைஞ்சது ஒரு பத்து பேராவது என் கூட மூனாப்புல இருந்து பள்ளி இறுதி வரை படிச்சாங்க. இன்னும் அத்தனை பேரு கூடவும் தொடர்புல இருக்கறது பெருமை தாங்க.

நம்ம செஞ்ச சேட்டைகள், பள்ளியில் வாங்கிய அடிகள் பற்றி எல்லாம் வேறொரு பதிவுல எழுதறேன்...

நான் இந்தத் தொடர் பதிவிற்கு அழைப்பது பதிவர்கள் ஜோதி, ராஜதிருமகன் இருவரையும்.

இந்த நினைவு எழுதிய விதம் உங்களுக்குப் பிடிச்சிருந்தா மறக்காம வாக்களியுங்கள்!

35 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

GOOD HISTORY OF YOUR SCHOOL LIFE

சிதம்பரம் said...

அருமை செந்தில், அதிலும் நம்ம அமராவதி ஆற்றை குறித்த உங்கள் எழுத்தை படித்ததும் எனக்கும் என்னுடைய பள்ளி ஞாபகங்கள் வந்தது...

நான் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்ததா செந்தில்?

வினோத் கெளதம் said...

செந்தில் பதிவிட்டமைக்கு நன்றி..
ரொம்ப அழகா அருமையா விவரித்து உள்ளிர்கள்..
நீங்கள் படித்தது எல்லாமே அழகான அருமையான ஊர்கள்.
உங்களுக்குள் இருக்கும் தமிழ் பற்றிற்கு காரணமான உங்கள் ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்..

//வீட்டுக்கு வந்தவுடனே நண்பர்களோட டயர் வண்டி எடுத்துட்டு கிளம்பீடறது.//

சின்ன வயதில் நமக்கும் பிடித்தமான விளையாட்டு நண்பா..

கோவி.கண்ணன் said...

உங்கள் சிறுவயது நிகழ்வுகள் அழகான நாட்கள் !

கலையரசன் said...

"பக்திப் பழமா.." இன்னுமும் அப்படியேதான் இருக்கீங்க செந்தில்..

//நம்ம செஞ்ச சேட்டைகள், பள்ளியில் வாங்கிய அடிகள் பற்றி எல்லாம் வேறொரு பதிவுல எழுதறேன்!//
அவ்வ்வ்வ்.... மறுபடியுமா?


எழுதியிருக்கீங்க... ஆனா என் அளவுக்கு எழுதலை!

ஹலோ! என்னைவி்ட அழகா, அருமையா, அம்சமா
கலக்கலா, பசுமையா இருக்கு உங்க நினைவுகள்...

Suresh Kumar said...

சிறு வயது ஞ்யாபகங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் .



இதையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
http://www.sureshkumar.info/2009/07/blog-post_15.html

நாகா said...

//டயர் வண்டி எடுத்துட்டு கிளம்பீடறது. ஆனா காத்துக் காலத்துல டயர் வண்டி ஓட்டறது கொஞ்சம் கடினம். அப்ப எல்லாம் ரோட்டுல ஒரு சிகரட் அட்டை கூட கிடைக்காது. ஏன்னா அத எடுத்துத் தான செதுக்கு சீட்டு விளையாட முடியும்.//

அருமை செந்தில்.. ஊருக்குப் போகும்போது எவனாவது டயர் வண்டிய ஓட்டிட்டு இருந்தா அதப் புடுங்கி ஓட்டணும் போல சில சமயம் ஆசை வரும்..

குப்பன்.யாஹூ said...

nice but next post please add more ooty pics

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Nathanjagk said...

பழைய விளையாட்டுகளை நினைவூட்டுகிறது! செதுக்கு சீட்டு ஞாபகத்தில் இருந்து காணமலே ​போயிடுச்சி! ஞாபகப் படுத்தீட்டிங்க! அமராவதி ஆத்தில (தாராபுரம்) குளி(தி)ச்சு விளையாடின நாட்கள் என்றைக்கும் மறக்கவே முடியாது!

சு.செந்தில் குமரன் said...

வணக்கம் நண்பரே.
சு.செந்தில்குமரன் என்கிற ராஜதிருமகன் அடியேன்தான். இங்கு செந்தில்குமரனாக ஒரு சம்பவம் எழுதுகிறேன்.

4 வயசு.
பாலர் பள்ளி .
எனக்கு பள்ளிக்கூடம் போவதே பிடிக்காது.
அம்மா கூடவே இருக்க ஆசை

முட்டை பணியாரம் நிறைய தின்று தின்று அப்பவே ரொம்ப குண்டாக இருப்பேன்.

ஆசிரியர்கள் மிகவும் கடமை உணர்ச்சியோடு பணியாற்றிய காலம் அது.

விஜயா டீச்சர் என் பாலர்பள்ளி ஆசிரியை , அம்மா அப்பவுக்குப் பிறகு என் முதல் ஆசிரியை. ரொம்ப ஒல்லியாக இருப்பார். அவருக்கு அடிக்கடி இருமல் வரும்.

என்னை பள்ளிக்கூடம் அழை(இழு)த்துப் போக அவர் வீடு தேடி வருவார்.எனக்கு அவரைப் பார்த்ததும் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்று அழுகை அழுகையாய் வரும். தெறித்து ஓடித் தப்பிக்கப் பார்க்கும் என்னை இழுத்துப் பிடித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார்கள்.

அவர் என்னை இழுத்துப் பிடித்து இடுப்பில் உட்கார வைத்துக் கொள்வார். பள்ளி நோக்கி நடப்பார். நான் ஆத்திரம் தாளாமல் அவர் நெஞ்சில் ஆத்திரம் கொண்ட மட்டும் ஓங்கி ஓங்கிக் குத்துவேன்.

அடியின் வலி தாள முடியாது இருமிக் கொண்டே தட்டுத் தடுமாறிச் சமாளித்தபடி என்னைத் தூக்கிக் கொண்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளியில் போய் இற‌க்குவார்.

அழுத அழுகையில் போன உடன் காலைக்கடன் வந்து விடும். ஒரு தாயைப் போல லொஞ்சம் கூட கூசாமல் கழுவி விடுவார். பின்னர் பிஸ்கட் கொடுத்து தாலாட்டியபடி குதிரை பொமையில் உட்கார வைத்து ஆட வைத்து சமாதானப்படுத்துவார்.

நான் அவரை செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை.ஒரு நாளும் முகம் சுளித்ததாய் நினைவு இல்லை. இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.

அண்மையில் என் மகள் PreK.G. முடித்தபோது கடைசி நாள் அந்த வகுப்பறை ஆசிரியை காலில் என் மகளை விழுந்து வணங்கச் செய்தேன். ஒரு நனறி வாழ்த்து மடல் கொடுக்கச் செய்தேன்.

மனசெல்லாம் விஜயா டீச்சர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
பிரியமுடன்.........வசந்த் said...
GOOD HISTORY OF YOUR SCHOOL LIFE
//

வாங்க வசந்த்.. வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
சிதம்பரம் said...
அருமை செந்தில், அதிலும் நம்ம அமராவதி ஆற்றை குறித்த உங்கள் எழுத்தை படித்ததும் எனக்கும் என்னுடைய பள்ளி ஞாபகங்கள் வந்தது...

நான் அனுப்பிய புத்தகங்கள் கிடைத்ததா செந்தில்?
//

வாங்க சிரம்பரம். நீங்கள் அனுப்பிய புத்தகங்கள் நாளை கிடைக்கவுள்ளது. நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
வினோத்கெளதம் said...
செந்தில் பதிவிட்டமைக்கு நன்றி..
ரொம்ப அழகா அருமையா விவரித்து உள்ளிர்கள்..
நீங்கள் படித்தது எல்லாமே அழகான அருமையான ஊர்கள்.
உங்களுக்குள் இருக்கும் தமிழ் பற்றிற்கு காரணமான உங்கள் ஆசிரியர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்..
//

வாங்க வினோத்.. நினைவுகளைப் பகிர என்னை அழைத்தமைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கோவி.கண்ணன் said...
உங்கள் சிறுவயது நிகழ்வுகள் அழகான நாட்கள் !
//

வாங்க கண்ணன். தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கலையரசன் said...
"பக்திப் பழமா.." இன்னுமும் அப்படியேதான் இருக்கீங்க செந்தில்..
//
ஹாஹா.. அப்படியா
//
எழுதியிருக்கீங்க... ஆனா என் அளவுக்கு எழுதலை!

ஹலோ! என்னைவி்ட அழகா, அருமையா, அம்சமா
கலக்கலா, பசுமையா இருக்கு உங்க நினைவுகள்...//
ஆனாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ;)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
Suresh Kumar said...
சிறு வயது ஞ்யாபகங்களை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் .
இதையும் படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
http://www.sureshkumar.info/2009/07/blog-post_15.html//

சுரேஷ், கண்டிப்பா வந்து படிக்கறேங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
நாகா said...
அருமை செந்தில்.. ஊருக்குப் போகும்போது எவனாவது டயர் வண்டிய ஓட்டிட்டு இருந்தா அதப் புடுங்கி ஓட்டணும் போல சில சமயம் ஆசை வரும்..
//

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க நாகா.. டயர் வண்டியெல்லாம் ஆசையோட நிறுத்திக்கனும். இல்லீன்னா நம்மள நாய் துறத்தும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க குப்பன் யாஹூ, ஆப்பு.. வருகைக்கு நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
கதிர் said..
//இந்த விளையாட்டுக்கான கல்லை, நண்பர்கள் கூட சேர்ந்து எங்க ஊரு அமராவதி ஆத்துல போய் எடுக்கறதுண்டு. ஆத்துல தண்ணிக்குள்ள ஒளிஞ்சு விளையாட்டு, தொட்டு விளையாட்டு எல்லாம் அருமையா நடக்கும்ங்க. சனி, ஞாயிறுன்னா நம்ம இருக்கறதே ஆத்துல தான். தூரத்துல தெரியற மலைத்தொடர்கள ரசிச்சிட்டே கண் சிவக்கற வரைக்கும் விளையாடுனத நினைச்சா.. அத எல்லாம் ஒரு காலம்ங்க!//

அருமை செந்தில்//

வாங்க கதிர்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
ஜெகநாதன் said...
பழைய விளையாட்டுகளை நினைவூட்டுகிறது! செதுக்கு சீட்டு ஞாபகத்தில் இருந்து காணமலே ​போயிடுச்சி! ஞாபகப் படுத்தீட்டிங்க! அமராவதி ஆத்தில (தாராபுரம்) குளி(தி)ச்சு விளையாடின நாட்கள் என்றைக்கும் மறக்கவே முடியாது!
//

வாங்க ஜெகனாதன்.. உங்களுக்கும் நம்ம ஊர் தானா.. ஆமாங்க ஆற்றுல ஆட்டம் போடறது தனி சுகம் தாங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
சு.செந்தில் குமரன் said...
வணக்கம் நண்பரே.
சு.செந்தில்குமரன் என்கிற ராஜதிருமகன் அடியேன்தான். இங்கு செந்தில்குமரனாக ஒரு சம்பவம் எழுதுகிறேன்.

4 வயசு.
பாலர் பள்ளி ......
//

வாங்க ராஜதிருமகன்.. அழகான நினைவு.. இத அப்படியே உங்க பதிவு போடுங்க.. வருகைக்கு நன்றி

jothi said...

தாமதமான பதிலுக்கு மிக மிக மன்னிக்கவும். நான் இபோதுதான் என் மின்னஞ்சலில் பார்த்தேன். கண்டிப்பாக உங்கள் அளவிற்கு முடியாவிட்டாலும் நான் ஏதோ எழுத முயற்சி செய்கிறேன்,.

என்னை நீங்கள் அழைத்ததை மிக பெருமையாக கருதுகிறேன்.

ஜோதிகண்ணன்

sakthi said...

சிறு வயது ஞாபகங்களை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா said...

தெளிந்த நீரோடை போல இருக்கின்றது உங்க எழுத்து. சமீபத்தில் நான் படித்த இடுகைகளில் மிகச் சிறந்த ஒன்று இது. வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
jothi said...
தாமதமான பதிலுக்கு மிக மிக மன்னிக்கவும். நான் இபோதுதான் என் மின்னஞ்சலில் பார்த்தேன். கண்டிப்பாக உங்கள் அளவிற்கு முடியாவிட்டாலும் நான் ஏதோ எழுத முயற்சி செய்கிறேன்,.

என்னை நீங்கள் அழைத்ததை மிக பெருமையாக கருதுகிறேன்.

ஜோதிகண்ணன்
//

வாங்க ஜோதி.. ஜம்முனு எழுதுங்க.. படிக்க ஆர்வமா இருக்கேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
sakthi said...
சிறு வயது ஞாபகங்களை அழகாய் பகிர்ந்தமைக்கு நன்றி
//
வாங்க சக்தி... வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//
எம்.எம்.அப்துல்லா said...
தெளிந்த நீரோடை போல இருக்கின்றது உங்க எழுத்து. சமீபத்தில் நான் படித்த இடுகைகளில் மிகச் சிறந்த ஒன்று இது. வாழ்த்துகள்.
//

வாங்க அண்ணே.. வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் நன்றி

அது ஒரு கனாக் காலம் said...

தாமதமாய் வந்ததற்கு மன்னிப்பு, ரிசெஷன் ... அதுனால, ஆபிஸ்ல ரொம்ப தேய்க்கிறோம் ... என்ன அழகா எழுதி இருக்கீங்க, அந்த தென்றல் காற்று வீசுவது போல் உள்ளது , ... டயர் வண்டி ஒரு முக்கியமான விளையாட்டு, நான் மறந்துட்டேன் , ஞாபக படுத்தியதால் ... நாகா சொல்வது போல்,...ஊருக்கு போனா, வாங்கி ஓட்டிப்பாக்கநும் ...நல்லா எழுதறீங்க

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாங்க சுந்தர் சார். நமக்குள்ள மன்னிப்பு எதுக்குங்க.. தங்கள் பாராட்டிற்கு நன்றி!

geethappriyan said...

நண்பர் செந்தில் வேலன்..
அருமையான முறையில் பள்ளி வாழ்கையை பகிர்ந்தீர்கள்..
தெய்வத்துக்கு நிகரான பள்ளி ஆசிரியர்கள்..
கொடுத்து வைத்தவர் நீங்கள்..
மாசத்துக்கு ஒரு முறை புதிதாய் தைக்கும் டிரவுசர்..
கலக்கல் தலை..
அப்போதெல்லாம் நானும் போஸ்டு பாக்ஸ் தான்
டயர் வண்டி..
ஐயோ அதை மறந்தே போனேன்..
அப்புறம் மீன் பிடித்தது,
வளர்த்தது..
சிவன் சூடன் அட்டை..
சிகரட் அட்டை.தீப்பட்டி படம் பொறுக்கியது,சேகரித்து என உங்கள் மூலம் மீண்டும் நினைவு படுத்திக்கொண்டேன் தலைவரே..
அருமை..
நல தமிழ்பணி செய்கிறீர்கள்.
பல சமயங்களில் தமிழ் எழுதி வேலை செய்யாததால் உங்களுக்கு பின்னூட்டமிட முடியாமல் போகிறது...

jothi said...

செந்தில் அழைப்பிற்கு மீண்டும் நன்றி. ஒரு வழியாக பள்ளி அனுபவங்களை பதிவாய் போட்டிருக்கேன். நேரம் இருந்தால் வலைப்பக்கம் வாருங்கள்,..

http://jothi-kannan.blogspot.com/2009/07/blog-post_17.html

Anonymous said...

Senthil, trouser kizhinchadhai ninaichu siruchekittae irundhaen... nalla padhivu...Ungal ezhuthai padikka padikka ennakku Erode, Kovai, Mettuppalayamla perundhirukalaamunnu thonudhu... Azhaghana ooru pola... Keep writing Senthil.. Excellent

Uma Senthil

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வருகைக்கு நன்றி உமா.

ஆமாங்க. எங்க ஊரு நல்லாத்தாங்க இருக்கும் :)

Related Posts with Thumbnails